கமல்ஹாசனின் விக்ரம் நாளை வெளியாகிறது - எகிறும் எதிர்பார்ப்புகள்

விக்ரம் கமல்ஹாசன்

பட மூலாதாரம், VIKRAM

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் விக்ரம் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனால் பெரும் விருந்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

கமல்ஹாசன் நடித்து இதற்கு முன்பு வெளியான கடைசித் திரைப்படம் விஸ்வரூபம் 2. இந்தப் படம் 2018ல் வெளியானது. அதற்கு முந்தைய திரைப்படம் தூங்காவனம். அது 2015ல் வெளியானது. ஆக, கடந்த ஏழு ஆண்டுகளில் மொத்தமாகவே கமல் நடித்து 2 படங்கள்தான் வெளியாகியிருக்கின்றன. இதற்கு நடுவில், தூங்காவனம் படத்திற்குப் பிறகு சபாஷ் நாயுடு என்ற படம் தொடங்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து பிரம்மானந்தம், சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பு தொடரவில்லை.

இதற்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட்டார் கமல். இது வெளியான பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சங்கரை இயக்குனராக வைத்துத் தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் அந்தப் படமும் நின்று போனது.

இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் துவங்கிய கமல்ஹாசன், தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், வெற்றிகள் ஏதும் கிட்டவில்லை. இந்த நிலையில்தான் லோகேஷ் கனகராஜை இயக்குனராக வைத்து விக்ரம் படம் துவங்கப்பட்டது.

விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜ்

பட மூலாதாரம், VIKRAM

படத்தின் கதையை சுற்றிவரும் 'கதைகள்'

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக வெகுவாக கவனிக்கப்பட்டவை என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிப்போயிருக்கிறது. படத்திற்கு விக்ரம் என பெயர் வைக்கப்பட்டிந்தாலும், 1986ல் வந்த விக்ரம் திரைப்படத்திற்கும் இதற்கும் தொடர்பு ஏதுமில்லை என இயக்குநர் சொல்லியிருக்கிறார். 1986ல் வந்த விக்ரம் படத்தின் கதை, படம் வெளியாகும் முன்பே ஒரு வார இதழில் வெளியானது. ஆனால், இந்தப் படத்தின் கதையைப் பற்றி மூச்சுவிட மறுக்கிறது படக்குழு. இருந்தபோதும் 1986 விக்ரம் படத்தில் ஒரு ஃப்ளாஷ் பேக் வரும், அதன் Spin - offதான் இந்தப் படம் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் லோகேஷ்.

ஆனால், அந்தக்கால விக்ரம் படத்தில் ஃப்ளாஷ் பேக் ஏதும் கிடையாது. விக்ரம் ஏவுகணையைத் தேடும் முயற்சியில் இறங்குவதற்கு முன்பாக, அம்பிகாவைத் திருமணம் செய்து தேனிலவில் இருக்கும்போது, அம்பிகா கொல்லப்படுவார். ஆகவே, விக்ரமின் கடந்த காலமாக இருக்கும். இந்த சின்ன கடந்த காலத்தின் தொடர்ச்சியா புதிய விக்ரம் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்தப் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என மூன்று வலுவான கதாநாயகர்கள் இருப்பதால், மூன்று முக்கியப் பாத்திரங்களைக் கொண்ட கொரியத் திரைப்படமான, 'The Gangster The cop The devil' படத்தைப் போல இருக்கக்கூடும் என ட்விட்டரில் சிலர் விவாதித்தனர்.

கமல்ஹாசன்

வேறு சில இணைய தளங்கள், கடத்தப்பட்ட ஒரு நபரை கமல் காப்பாற்றுவதுதான் கதையின் ஒன்-லைன் என்றன. இப்படி ஆளாளுக்கு ஒரு கதையைச் சொன்னாலும், படக்குழு மூச்சே விடவில்லை.

இந்தப் படத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்களைத் தவிர, நரேன், ஹரீஷ் உத்தமன், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், காயத்ரி ஷங்கர், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் களமிறங்கியிருக்கிறது.

இந்தப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் முறையே ஹாட் ஸ்டாருக்கும் விஜய் டிவிக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: