கமல்ஹாசன் விக்ரம் பட பத்திரிகையாளர் சந்திப்பு: 'ஒன்றியம்' என்ற சொல் பற்றி என்ன சொன்னார்?

- எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
பத்தல பத்தல பாடலில் ஒன்றியம் என்ற சொல் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் 'விக்ரம்' திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. இதனை ஒட்டி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று, புதன்கிழமை நடைபெற்றது.
இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர். லோகேஷ் பேசும் போது, "கமல் சாரை பார்த்துதான் நான் சினிமா கற்றுக்கொண்டேன். என்னுடைய நான்காவது படத்தில் அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் வேலை பார்த்த என்னுடைய படக்குழு சார்பாக நன்றி. எங்கிருந்தோ என்னை கமல்ஹாசன் ஊக்குவித்து செய்து சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அவரை இயக்கியது எல்லாம் கனவு தான். படத்தைப் பொருத்தவரை ஒரு திருப்தியான வேலை நடந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.
அடுத்து கமல்ஹாசன் பேசுகையில், "படத்திற்காக என்னை வேலை வாங்கியதை விட இந்த படத்தின் புரோமோஷனுக்காகத்தான் இப்படி லோகேஷ் வேலை வாங்குகிறார். என்னுடைய கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.
'விக்ரம்' படத்திற்காக டெல்லி, கொச்சி, மும்பை, கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம். சினிமாவில் நடிக்காமல் இருந்த நான்கு ஆண்டுகள் எனக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
நான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு சினிமாவில் மட்டுமல்ல மக்களுக்கும் செய்யவேண்டிய பணி நிறைய உள்ளது. விவசாயிக்கு நிலத்தில் போட வேண்டும் என்ற எண்ணம் இருப்பது போலதான், எனக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டும். அதற்காகத்தான் இது போல செய்து கொண்டிருக்கிறேன். நான்கு ஆண்டுகள் நான் சினிமாவில் இல்லாத போதும் அமைதி காத்த ரசிகர்களுக்கு நன்றி. இப்போது 'விக்ரம்' படத்திற்கான உற்சாகம் அவர்களிடையே தொற்று நோய் போல பரவி கொண்டிருக்கிறது.
மகேந்திரன், டிஸ்னி, அனிருத், லோகேஷ் என அனைவரும் இவ்வளவு நாட்கள் தூங்காமல் வேலை பார்த்திருக்கிறார்கள்.
நான் சினிமாவின் ரசிகன். நல்ல சினிமா எடுக்க வேண்டும் என்பதற்காக தான் படம் எடுக்க வந்தேன். அதில் ஒரு முயற்சிதான் 'விக்ரம்'. படத்தை அகண்ட திரையில் பாருங்கள். அனைவருக்கும் நல்ல விருந்து காத்திருக்கிறது" என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்,
கொரோனா காலத்தில் இந்தப் படத்தை எடுத்த அனுபவம் எப்படி இருந்தது?
கொரோனா இல்லாத காலத்தை உலகமே எதிர்பார்த்திருக்கும் போது அதை மீண்டும் பேச வேண்டியதில்லை. ஆனால், நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடங்கள் எல்லாம் கடினமான இடங்கள். படக்குழுவினர் முன்பே போய் அந்த இடங்களை சுத்தப்படுத்தி சானிட்டைசர், முகக்கவசம் என பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தோம். இருந்தாலும் நான் பல இடங்களில் சுற்றியதால் எனக்கு கொரோனா வந்தது.

'விக்ரம்' படத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசேகர் எடுத்த போது வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது என்று சொன்னீர்கள். எப்படி இருக்கிறது இந்த 'விக்ரம்'?
ராஜசேகருக்கு இருந்த நம்பிக்கை போல, இப்போது லோகேஷ் கனகராஜுக்கும் இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்து லோகேஷ் பற்றி வரும் இயக்குநர்கள் சொன்னால் சந்தோஷம்.
'விக்ரம்' படத்தை கருணாநிதி பிறந்தநளில் ரிலீஸ் செய்வது ஏன்?
மே 29-ம் தேதி 'விக்ரம்' படத்தின் ஒரிஜினல் ரிலீஸ் தேதி. ஆனால், கோவிட் காரணமாக தள்ளி போய் விட்டது. அப்படி தள்ளி போய் அவர் பிறந்தநாளில் அமைந்தது மகிழ்ச்சியே. திரைக்கதை எழுத ஆரம்பித்த காலத்தில் கருணாநிதியிடம் போய் கதை சொல்வேன். அவரே முதலீடு செய்தது போல 'தசாவதாரம்' போன்ற கதைகளை எல்லாம் கேட்டு நிறைய கரெக்ஷன் சொல்லி இருக்கிறார். ஏன் நீ எழுதுகிறாய் என்று கேட்டார். நிறைய பேர் எழுத இல்லை என்றேன். ஆனால், எழுத தெரிந்தவர்கள் எல்லாம் சினிமாவுக்கு எழுத முடியாது என்றார். சினிமா ஒரு கலை. அவருடைய பயணம் பற்றி நான் எழுத 1,000 பக்கங்கள் வேண்டும்.
திறமையான புதிய இயக்குநர்களுடன் இணைய காரணம் என்ன?
இதை தான் நான் என்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே செய்து கொண்டிருக்கிறேன். '16 வயதினிலே' திரைப்படம், பாலு மகேந்திரா என பலருடன் அப்படி பயணித்திருக்கிறேன். பாலச்சந்தர் அய்யாவுடன் தொடர்ச்சியாக 36 படங்கள் செய்திருக்கிறேன். அது என் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்.
36 வருடங்கள் கழித்து 'விக்ரம்' படத்தின் தொடர்ச்சி ஏன்?
அந்த 'விக்ரம்' படத்தின் தொடர்ச்சி என்பது உங்கள் நம்பிக்கை. இந்த படத்திற்கு 'விக்ரம்' தான் தலைப்பாக வேண்டும் என லோகேஷ் கேட்டார். அவரை விட்டால் 'சத்யா' என்று கூட வைத்திருப்பார். ஒரிஜினல் 'விக்ரம்' படத்திற்காக ஒரு வரிக் கதை வைத்திருந்தேன். அதை சுஜாதா விரும்பினார். ஆனால் இயக்குனர் ராஜசேகர் அந்த காலகட்டத்திற்கு அது முன்னோக்கியதாக இருக்கிறதே என பயந்தார். விட்டுப்போன கதையை லோகேஷிடம் சொன்னேன். அவருடைய கதையை விட்டுவிட்டு லோகேஷ் இதை செய்தார்.
'விக்ரம்' படத்திற்கு அடுத்து நிறைய படங்கள் ஒப்பந்தமாகி இருக்கிறீர்கள்?
'இந்தியன்2' நிச்சயம் நடைபெறும். அதற்கான பேச்சு நடக்கும். 'விக்ரம்3' நடக்குமா என்பதை லோகேஷ் தான் சொல்ல வேண்டும். அதற்கும் இவர் தான் இயக்குநர் என்பதை நான் முடிவு செய்து விட்டேன்.

அனைத்திந்தியப் படமாக 'விக்ரம்' இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருப்பது குறித்து? இதனால் லோகேஷ் மீது மேலும் அழுத்தம் இருக்கிறதே?
ரசிகர்களுக்கு உள்ளது போலவே எனக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நம்பிக்கை உள்ளதால்தான் இவ்வளவு பணம் முதலீடு செய்திருக்கிறோம். அனைத்திந்தியப் படம் என்பதற்கான தர மதிப்பீடு வெவ்வேறு வகையாக உள்ளது. சத்யஜித் ரே படங்கள், பக்தி படங்கள் என பலவகை சொல்லலாம். அதில் 'விக்ரம்' கதையும் ஒரு வகை.
'பத்தல பத்தல' பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பு?
தமிழில் சொல்லுக்குப் பொருள் தெரிந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. ஒன்றியம் என்றால் எல்லாமே அதற்குள் அடங்கும். பத்திரிகையாளர்கள், இயக்குநர்கள் ஒன்றியம் என எல்லாமே இதற்குள் வரும்.
'விக்ரம்' படத்தில் ராஜசேகர் இயக்கும்போது சோதனை முயற்சி செய்தது பற்றி?
அவர் செய்தார் என்பதை மறுக்கிறேன். அவர் வணிக வெற்றிப் படங்களை இயக்கியவர். பாலுமகேந்திரா போல அவர் பேசப்படாதது ஏன் என்றால் அவருடைய களங்கள் வேறு. ராஜசேகர் படங்களை கே.எஸ்.ரவிக்குமாருடன் ஒப்பிடலாம். அவர் ஒரு வணிக வெற்றிப் பட இயக்குநர்.
'RRR', 'புஷ்பா' படங்கள் 1000 கோடி வசூலித்தது போல தமிழ்ப் படங்கள் வசூலில் சாதிக்காதது ஏன்?
ஒருவர் செய்வது மட்டுமல்ல சினிமா. அது ஒரு கூட்டு முயற்சி. ஆனால், தோல்விக்கு மட்டும் ஒருவரை மட்டும் கைக்காட்டுவார்கள். இது ஒரு தொடர்ச்சி. யாருமே எதிர்பாராமல் ஏக் துஜே கேலியே வெற்றி பெற்றது. நம் சினிமாவிலும் நடக்கும்.
அடுத்து சினிமாவில் என்ன கணித்து வைத்திருக்கிறீர்கள்?
'சகலகலா வல்லவன்' காலத்தில் எழுத முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்த போது, 'பொம்மை ' என்ற பத்திரிகையில் எழுதினேன். அதில் நம் உடலில் சிப் அமைப்பது போன்ற திரைக்கதை எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது நான் யோசித்தது இப்போது நடக்கிறது என்பது மகிழ்ச்சி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












