'குக் வித் கோமாளி' வெங்கடேஷ் பட் கருத்து - குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கிறதா ட்ரோல்கள்?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வரும் சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் 'ட்ரோல்' செய்து வருகின்றனர். அந்நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாகியுள்ளதாக வெங்கடேஷ் பட் தெரிவித்த கருத்தைத்தான் தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர்.

'அந்த நிகழ்ச்சியை பார்த்தாலே பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்கள்' என்ற ரீதியில் மீம்களை பதிவிட்டு 'ட்ரோல்' செய்துவருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி சீசன் 3' வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிவருகிறது. சமையல் குறித்து தெரியாத ஒருவர், சமையல் அறிந்த போட்டியாளருக்கு சமைப்பதில் உதவுவதுதான் இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு. சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவை கலைஞர்கள் இடம்பெற்று இயல்பாக காமெடி செய்வது போல அமைக்கப்பட்ட காட்சிகளால் பார்வையாளர்களிடையே இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை (மே 28) ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவர் வெங்கடேஷ் பட், தனக்கு சமூக ஊடகத்தில் வந்த தனிப்பட்ட செய்தி ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

அதில், 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண் ஒருவர், செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைக்காக (ஐவிஎஃப்) மருத்துவமனைக்கு சென்றபோது, மற்றொரு பெண் ஒருவர் பரிந்துரைத்ததன்படி, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை பார்த்து மன அழுத்தம் குறைந்து தற்போது கர்ப்பமாகியுள்ளதாக தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக வெங்கடேஷ் பட் தெரிவித்தார்.

தான் பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த பாராட்டாக வெங்கடேஷ் பட் கூறிய அந்த கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்துவருகின்றனர். மன அழுத்தத்தைக் குறைக்கும் 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' நிகழ்ச்சி என்ற ரீதியில் வெங்கடேஷ் பட் கூறிய கருத்துக்கு வரும் ட்ரோல்கள் பல வரம்பு மீறிய வகையில் உள்ளது என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ட்ரோல்களில் பல "குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தால் பெண்கள் கர்ப்பமாகி விடுவார்கள்", "கல்யாணம் ஆகாத பெண்களும் நிகழ்ச்சியை பார்த்தால் கர்ப்பமாகிவிடுவார்கள்" என்ற ரீதியில் பெண்களை இலக்கு வைத்து செய்யப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், ஐவிஎஃப் போன்ற சிக்கலான சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு மன நல ஆரோக்கியம் என்பது முக்கியம் என்பதை உணராமல் இத்தகைய ட்ரோல்கள் செய்யப்படுவதாகவும் கருத்துக்கள் வருகின்றன.

மன அழுத்தத்தைக் குறைப்பதில் நகைச்சுவையின் பங்கு

குழந்தையின்மை பிரச்னை - மன அழுத்தம் இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? 'நகைச்சுவை' என்பது மனநல ஆரோக்கியத்தில் செலுத்தும் பங்கு என்ன என்பது குறித்து மகப்பேறு மருத்துவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளருமான சாந்தி ரவீந்திரநாத் 'பிபிசி தமிழிடம்' பேசினார்.

"அவசரமான இந்த காலகட்டத்தில் ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் அதற்கு உடல் ரீதியான குறைபாடு மட்டுமே காரணம் என்று சொல்லக்கூடிய சூழ்நிலையில் நாம் இல்லை. மனநலம் சார்ந்தும் இந்த குறைபாடு இருக்கலாம். உடல் ரீதியான பல நோய்களுக்கு மன ரீதியான காரணங்களும் உள்ளன. பொருளாதார அழுத்தம் குறிப்பாக வேலையின்மை, மன அழுத்தம், மதுப்பழக்கம், புகை பழக்கம், உடல் பருமன் உள்ளிட்ட பல காரணிகள் குழந்தையின்மை பிரச்னைக்குக் காரணமாக அமைகின்றன.

அப்படியிருக்கும் போது, மன இறுக்கத்தைக் குறைக்கும் எவ்வித செயல்பாடுகளும் நல்லதுதான். வடிவேல் நகைச்சுவையை பார்ப்பதோ, தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை பார்ப்பதோ, ஆக்டிவிட்டிகளில் ஈடுபடுவது என எதுவாகவும் இருக்கலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் 'ஹாரர்' திரைப்படங்களை பார்க்காமல், மனதுக்கு இலகுவானவற்றை பாருங்கள் என மருத்துவர்களே பரிந்துரைக்கிறோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் வார்டுகளில் தொலைக்காட்சிகளை வைக்கிறோம், அது அவர்களின் மன இறுக்கத்தைக் குறைக்கிறது" என தெரிவித்தார்.

ஆனால், நகைச்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட லேசான நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும் ஒருவருடைய தாம்பத்ய வாழ்க்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறினார்.

ஐவிஎஃப்சிகிச்சையும் மன அழுத்தமும்

ஐவிஎஃப் சிகிச்சையால் ஏற்படும் மன அழுத்தம் குறித்து பேசிய அவர், "தனக்கிருக்கும் கடைசி வாய்ப்பு 'ஐவிஎஃப்' தான் என்ற கட்டாய நிலையிலும், சமூக அழுத்தத்தின் காரணமாகவே இந்த சிகிச்சைக்கு வருகின்றனர். இது லட்சக்கணக்கில் செலவுகரமானது மட்டும் அல்ல, மிக சிக்கலான சிகிச்சை முறையும் கூட. இதனால், மன அழுத்தம் அதிகரிக்கும். முதல் முறையிலேயே இச்சிகிச்சையில் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் குறைவு, தொடர் சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும்.

ஐவிஎஃப் சிகிச்சை முறை என்பது பெண்களின் கருமுட்டையையும் ஆணின் விந்தணுவையும் எடுத்து வெளியில் செயற்கையாக கருவை உருவாக்கி மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை. இதில் பெண்ணுக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். செயற்கையாக பல ஹார்மோன்கள் செலுத்தப்படும். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இச்சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்புகளும் குறைவு. இது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வலிமிகுந்த சிகிச்சை முறை. இயற்கையாக கர்ப்பமாவதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிகபட்சம் 3-4 முறைதான் இச்சிகிச்சையை மேற்கொள்ள முடியும். பல லட்சம் செலவு செய்தாலும் இதனால் குழந்தை பிறக்கும் என்று உத்தரவாதம் இல்லை என்பதே அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும்" என்கிறார் மருத்துவர் சாந்தி.

மேலும், "மன இறுக்கம் இருந்தால் மன ரீதியான நோய்களின் தாக்கும் குறைவதற்கு சற்று வாய்ப்பிருக்கிறது. உடல் ரீதியான பிரச்னைகளுக்கு நம்பிக்கையுடன் சிகிச்சைகளை அனுகுவதற்கு நகைச்சுவை முக்கியம். 'நான் எதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும்?' என்றில்லாமல் நம்பிக்கையுடன் சிகிச்சையை தொடரவும் நேர்மறை எண்ணங்கள் ஏற்படவும் இவை வழிவகுக்கலாம்" என்றார்.

ஆனால், ஐவிஎஃப் போன்ற சிகிச்சைக்கு செல்லலாமா அல்லது அதனை தொடரலாமா என்பதை முடிவெடுப்பது மட்டுமே மனம் சார்ந்தது என்றும் அந்த சிகிச்சை முறை முற்றிலும் அறிவியல்பூர்வமானது என்றும் உடலை சார்ந்து மட்டுமே அச்சிகிச்சை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் மருத்துவர் சாந்தி தெளிவுபடுத்துகிறார். அதேசமயத்தில், அந்த சிகிச்சையை மேற்கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்தைக் குறைப்பதில் இத்தகைய நிகழ்ச்சிகள் பங்காற்றலாம் என அவர் கூறுகிறார்.

வரம்பு மீறும் ட்ரோல்கள்

இத்தகைய ட்ரோல்கள் குறித்து நம்மிடம் பேசிய சினிமா குறித்து தொடர்ச்சியாக எழுதிவருபவரும், 'ஒளிவித்தகர்கள்', 'நீலம் பூக்கும் திருமடம்' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவருமான தீபா ஜானகிராமன், "வெங்கடேஷ் பட் கூறியதை அப்படியே நேரடியாக எடுத்துக்கொண்டு ட்ரோல் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தை பிறக்கும் என ட்ரோல் செய்வது குழந்தை இல்லாத பெண்களின் வலியையும் அவர் குறிப்பிட்ட அந்த பெண்ணின் வலியையும் அவமானப்படுத்துவது போன்று உள்ளது. 'என் மனைவி என்னுடன் பாலியல் உறவு கொள்ள வராமல், அந்த நிகழ்ச்சியையே பார்க்கிறார்' என ஒருவர் பதிவிட்டுள்ளார். இது முட்டாள்தனமாக இல்லையா?

பொது மனப்பான்மையில் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி உள்ளது என்ற ரீதியில்தான் அவர் கூறியுள்ளார்.

ட்ரோல்கள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாக உள்ளது, கார்ட்டூன் போன்றதுதான் ட்ரோல்கள். அது தவறு அல்ல. சிரித்துக்கொண்டே கடந்து செல்லும் 'ட்ரோல்களும்' உள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? இவர்கள் அந்த நிகழ்ச்சியையோ, வெங்கடேஷ் பட்டையோ டார்கெட் செய்யவில்லை. குழந்தை இல்லாத பெண்களை டார்கெட் செய்கின்றனர்" என அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: