You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடலுறவால் ஏற்படும் நன்மைகள்: பாலியல் இன்பத்தை 40 வயதுக்குப் பிறகு அதிகரிப்பது எப்படி?
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் ஆசைகளும், பாலுறவு கொள்வதற்கான திறனும் குறைகிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
இது உண்மையா? அப்படியெனில் இதற்கான காரணங்கள் என்னென்ன, நாற்பது வயதுக்குப் பிறகு பாலியல் இன்பத்தை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பாலியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி காமராஜ் பதிலளிக்கிறார். பிபிசி தமிழுக்காக ஹேமா ராக்கேஷிடம் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் உரை வடிவம் இது.
கேள்வி: தம்பதிகளுக்கு 40 வயது ஆகும்போது குழந்தைகள் பெரியவர்களாகி விடுகின்றனர். இனி எதற்கு காதல் உணர்வு, பாலுறவு என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் எழுந்து விடுகிறது. இது இயல்புதானா?
பதில்: நாற்பது வயது என்பது முதிய வயது அல்ல. வயதாகிவிட்டது என்ற பொருள் அல்ல. தற்காலத்தில் உள்ள தரவுகளின்படி 40 வயதில்தான் மிட் லைப் என்கிற மத்திய வயது வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு காலத்தில் 30 வயதை இப்படிக் குறிப்பிட்டார்கள். இப்போது 40 வயதில்தான் மிட்-லைஃப் தொடங்குகிறது.
40 வயது என்பது இன்னொரு இளமையின் தொடக்கம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. உடல் பயிற்சி, மருத்துவம் போன்ற காரணங்களால் சராசரி ஆயுள் கூடியிருக்கிறது. அதனால் 40 வயதுக்குப் பிறகு 50 சதவிகித வாழ்க்கை மிச்சமிருக்கிறது என்று கூறலாம்.
குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 40 வயதுக்குப் பிறகுதான் சுவையான பாலியல் இன்பத்தை அதிக தம்பதிகள் பெறுகிறார்கள் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதற்குக் காரணம் வாழ்க்கையில் பல கவனச் சிதறல்கள் 40 வயதுக்குப் பிறகு இருப்பதில்லை. படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும், அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பன போன்ற பல விஷயங்கள் அப்போது முடிந்திருக்கும். ஓரளவுக்கு நிலையான வாழ்க்கைக்கு பலரும் வந்திருப்பார்கள்.
அதனால் இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு பாலியல் உறவு என்பது இனிமையாகிறது. மகப்பேறு, குழந்தைகள் வளர்ப்பு போன்ற பணிகளில் இருந்து பெண்கள் விடுபட்டிருப்பதால் அவர்களால் கணவரோடு நெருக்கமான அன்பைப் பேண முடியும். அதனால் தம்பதிகள் தங்களுக்கு இடையே செலவிடும் தனிப்பட்ட நேரம் அதிகரிக்கிறது. ஆகவேதான் 40 வயதுக்கு மேல் பாலுறவு இனிமையாகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அப்படியெனில் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாமா?
40 வயதுக்குப் பிறகு பாலியல் வாழ்க்கை கடினமாக இருக்கும் என்பது தவறு. 42 வயதில் இருந்து 50 வயது வரை பாலுறவுச் செயல்பாடுகள் தீவிரமாக இருப்போரின் அளவு 70 சதவிகிதம் வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவு எண்ணிக்கையும் 30 முதல் 40 வயது வரை இருப்பதைவிட 40 வயதுக்குப் பிறகு அதிகமாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
இதேபோல 50 வயதைத் தாண்டிய தம்பதிகளில் 50 முதல் 60 வயது வரை பாலுறவில் 46 சதவிகிதம் பேர் வழக்கமாக ஈடுபடுகின்றனர் என்றும். 60 முதல் 70 வயதுவரை 26 முதல் 30 சதவிகிதம் பேர் வரை வழக்கமான பாலுறவில் ஈடுபடுகின்றனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆண்கள் - பெண்கள் என எடுத்துக் கொண்டால், பெண்களை விட ஆண்களே 51 சதவிகிதம் வரை கூடுதலாக பாலுறவில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
அத்துடன், திருமணம் செய்து கொள்வது என்பது பாலுறவை மட்டுமே சார்ந்தது அல்ல. தங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்பதை பலரும் முக்கியமாகக் கருதுகின்றனர். 40 வயதுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு பாலுறவு என்பது பிரச்னையாக இருப்பது இல்லை.
பெண்களுக்கு மாதவிலக்கு நிற்பது, ஈஸ்ட்ரோஜன் குறைவு ஆகிய காரணங்களால் பாலுறவில் நாட்டம் குறைவதை எப்படிச் சரி செய்வது?
35 வயதுக்குப் பிறகுதான் பல பெண்களுக்கு உச்சகட்டம் அடைவது என்பதே என்னவென்று தெரியவருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் மாதவிலக்கு நிற்பது போன்ற பிரச்னைகளால் உடலுறவில் எந்தத் தடையும் ஏற்படுவதில்லை. ஆனால் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார, குழந்தைகள் ரீதியிலான வேறு பிரச்னைகளால் பாலியல் உறவை பல பெண்கள் தவிர்க்கின்றனர்.
பாலியல் வேட்கை அல்லது விருப்பம் என்பதற்கு வயது வரம்பு ஏதேனும் இருக்கிறதா?
பொதுவாக 85 வயதுக்குப் பிறகு பாலியல் வேட்கை குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை தவிர ஆர்த்தரைட்டிஸ் போன்ற வலிகளால் பலருக்கு பாலியல் விருப்பம் குறைகிறது. அவர்களுக்கும் பாலுறவு முறைகளில் மாற்றம் செய்து தீர்வு அளிக்க முடியும். பொதுவாக பெண்களுக்கு பாலியல் விருப்பம் குறைகிறது என்பதைவிட, ஆண்களுக்கு வரும் பிரச்னைகளால்தான் பாலியல் விருப்பம் குறைகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
எந்தவொரு செயலும் வழக்கமானதாக, ஒரே மாதிரியாக இருக்கும்போது அதில் விருப்பம் குறைவது இயற்கைதான். இதன் காரணமாக 40 வயதுக்குப் பிறகு பாலியல் செயல்பாடுகளில் உற்சாகம் குறைந்தால் என்ன செய்வது?
பெண்களுடைய விருப்பத்துக்கு ஆண்களால் செயலாற்ற முடியாமல் போவது, அதேபோல ஆண்கள் விரும்பியபடி பெண்களால் நடந்து கொள்ள முடியாமல் போவது என பிரச்னைகள் இருக்கின்றன. இவர்களை முறையாக ஆய்வு செய்யும்போது பெரும்பாலும் ஆண்களிடமே பிரச்னைகள் இருக்கின்றன என்பது தெரியவருகிறது. அவர்களுக்கு நாங்கள் சொல்லும் அறிவுரையே ஒரு இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான். விடுமுறையில் சுற்றுலா சொல்வது போன்ற பரிந்துரைகளைச் செய்கிறோம். இது அவர்களுடைய பாலியல் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.
இந்தப் பேட்டியை முழுமையாகக் காண:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்