யுக்ரேன் - ரஷ்யா போர்: யுக்ரேனியர்களின் அன்பே என்னை காப்பாற்றியது: ஓர் இந்திய மாணவரின் அனுபவம்

    • எழுதியவர், அலிஸ் இவான்ஸ் & புனம் தனேஜா
    • பதவி, பிபிசி நியூஸ்

தென் இந்தியாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருக்கும் விஷ்ணு, கேமராவில் சிரிக்கிறார். அவரது செல்ல பிராணி லியோ அவர் மடியில் இப்போது இருக்கிறது; ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளான யுக்ரேனின் வின்னிட்சியா நகரில், அவர் இறக்க போகிறார் என்று நினைத்தார். சில நாட்கள் கழித்து அவர் இங்கு இருப்பதை விஷ்ணுவால் நம்ப முடியவில்லை.

வின்னிட்சியா நகரம் யுக்ரேனின் மேற்கு பகுதியில் உள்ளது. அது ரஷ்யா எல்லையில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், தாக்குதல்களை சந்தித்தது. நகருக்கு வெளியில் இருக்கும் விமான நிலையத்தில், கடந்த வாரம் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா தனது படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, அந்நாட்டில் இருந்து தப்பித்த ஆயிரக்கணக்கான மாணவர்களில் ஒருவர், 21 வயதான போல்லா விஷ்ணு வர்தன் ராவ்.

யுக்ரேனியர்களின் அன்பே தான் உயிருடன் இருப்பது காரணம் என்று அவர் கூறுகிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன், நான்காம் ஆண்டு மருத்துவ மாணவராக விஷ்ணு தனது வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டிருந்தார்.

பல்கலைக்கழகத்திலும், அந்நகர மருத்துவமனையிலும் வகுப்புகளில் இருப்பதும், நூலகத்தில் படிப்பதும், லியோவுடன் ஆற்றில் நீச்சலடிப்பதுமாக விஷ்ணுவின் வாழ்க்கை இருந்தது.

"யுக்ரேன் மிகவும் அழகான, அமைதியான நாடு. வின்னிட்சியாவில் பல அமைதியான இடங்கள் உள்ளன" என்று விஷ்ணு கூறுகிறார்.

ஆனால், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று, ரஷ்யா படையெடுப்பு தொடங்கிய நாள், குண்டு வெடிப்பு சத்தங்களிலும், துப்பாக்கிச் சூடு சத்தங்களிலும் விழித்தார்.

அங்கு என்ன நடக்கிறது என்று அவருக்கும் அவருடன் தங்கி இருந்த மற்ற இருவருக்கும் முதலில் எதுவும் புரியவில்லை.

"நாங்கள் மிகவும் பதட்டம் அடைந்தோம்", என்று அவர் கூறுகிறார்.

"நான் ஜன்னல் வழியாகப் பார்த்த போது யுக்ரேனியர்கள் பைகளுடன் ஓடிக்கொண்டிருந்தனர் - அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை", என்று கூறுகிறார்.

வான்வழி கண்காணிப்பு எச்சரிக்கை ஒலியின் சத்தத்தை அவர் ஒருபோதும் கேட்டதில்லை. மேலும், யுக்ரேன் மொழியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நல்வாய்ப்பாக, விஷ்ணுவின் யுக்ரேனிய பக்கத்து வீட்டுக்காரர்கள், இந்த எச்சரிக்கைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்தனர். போர் தொடங்கிவிட்டது என்று அவருக்கு விளக்கினர்.

சில விமானங்களும் பீரங்கிகளும் வந்து, யுக்ரேனில் போர் நடத்துகின்றன என்று அவர்கள் கூறினர். அதனால், வெளியில் செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருங்கள்", என்று அவர் கூறினார். அடுத்த இரண்டு நாட்களில், வின்னிட்சியாவில் எச்சரிக்கை மணிகள் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை அடித்தது. இதனால், விஷ்ணுவும், அவரது நண்பர்களும் அவர்களின் குடியிருப்புக்கு கீழ் இருக்கும் பதுங்கும் குழியில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த குழி முழுவதும் இடிக்கப்பட்ட கற்கூளங்கள் நிறைந்து இருந்தது.

அவரால் அங்கு தூங்க முடியவில்லை; அதனால் இந்த நகரத்தை விட்டு வெளியேறும் திட்டத்தைச் செயல்படுத்த, அலைபேசியில் பல மணி நேரத்தை செலவழித்தார்.

"இந்த சூழ்நிலையில் தான் இறக்ககூடும் என்று நான் நினைத்தேன்", என்று அவர் கூறுகிறார்.

விஷ்ணுவின் நண்பர்களில் ஒருவர் யுக்ரேனிய சிறிய பேருந்து ஓட்டுநர், 250 கிமீ (155 மைல்) தொலைவில் உள்ள ரோமானிய எல்லைக்கு அழைத்துச் செல்ல தயாராக இருப்பதைக் கண்டறிந்தார்.

வின்னிட்சியாவிலிருந்து ஒரு நாள் பயணத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்த ஓட்டுநர், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நாட்டை விட்டு வெளியேற இன்னும் தயாராக வில்லை. எனவே அவர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார், அதற்காக இவர்கள், அவருக்கு மொத்தம் 12,000 யுக்ரேனிய ஹிரிவ்னியா (£300) கொடுத்தனர்.

இந்த ஓட்டுநருக்கு தன் வாழ்நாள் முழுவதும் கடன் பட்டிருப்பதாக விஷ்ணு கூறுகிறார்.

"என்னால் அதை வெளிப்படுத்த முடியாது - நாங்கள் காப்பாற்றப்பட்டது அவரால் மட்டுமே நடந்தது. நான் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகளை கூறுக்கொள்கிறேன்."

செல்லப்பிராணிகளை எல்லையில் அனுமதிக்க மாட்டார்கள் என்று விஷ்ணு கவலையுற்றார். அதனால் அவர் லியோவை யுக்ரேனிய ஆசிரியருடன் விட்டுவிட்டு மினிபஸ்ஸில் ஏறினார்.

தென்மேற்கு யுக்ரைனின் சாலைகளில் பேருந்து சென்றபோது, விஷ்ணுவும் அவரது நண்பர்களும் ஓய்வெடுக்கத் தொடங்கினர். அப்போது ஒருமுறை விமானங்கள் தலைக்கு மேல் பறந்தபோது ஒரு கணம் பதற்றம் ஏற்பட்டது. அது யுக்ரேனியர்களா அல்லது ரஷ்யர்களாக என்று விஷ்ணுவுக்கு தெரியாது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்வதைப் போல உணர்ந்தனர்.

ஆனால் விஷ்ணுவின் பயணத்தின் கடுமையான பகுதி இன்னும் வரவில்லை.பேருந்து ஓட்டுநர் விஷ்ணுவையும் அவரது நண்பர்களையும் எல்லையில் இறக்கி விட்டார். அப்போது, ​​அவர்கள் எல்லையில் உள்ள ஒரு வாயில் வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான மக்களுடன் சேர்ந்துகொண்டனர்.

யுக்ரேனியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக விஷ்ணு கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அவர் கடக்கும் இடத்திற்கு அருகில் வரும்போது, ​​காவலர்கள் அவரை மீண்டும் பின் தள்ளிவிட்டுவிடுவார்கள்.

ஒரு நாள் முழுவதும் பெருகி வரும் கூட்டத்தில் நின்ற பிறகு, விஷ்ணு எல்லையை கடக்கவே முடியாது என்று கவலைப்படத் தொடங்கினார்.

அகதிகளுக்கு சேவை செய்யும் தற்காலிக கஃபேக்களில், உணவுகளும், பானங்களும் தீர்ந்துவிட்டன. மேலும், விஷ்ணு சிற்றுண்டியாக தன்னுடன் எடுத்துவந்த வாழைப்பழங்களும் ரொட்டிகளும தீர்ந்துவிட்டன. இறுதியில், அவர் காவலர்களிடம் தன்னையும் அவரது நண்பர்களையும் அனுமதிக்குமாறு கெஞ்சினார்.

"இறுதியாக, அவர்கள் ஏற்றுக்கொண்டனர்."

அதனால், விஷ்ணு தனது நண்பர்கள் சிலருடன் அந்நாட்டு எல்லை வழியாகச் சென்றார். ஆனால் 20 பேர் கொண்ட அவரது குழுவில் 13 பேர் பின்தங்கிவிட்டனர்.அந்த தருணம் குறித்து அவர் எப்படி உணர்ந்தார் என விஷ்ணு விவரிக்கையில், " தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், பல நண்பர்கள் என்னுடன் வரவில்லை. அந்த சமயத்தில் நான் சுயநலவாதியாக இருந்தேன். நாம் சுயநலவாதியாகத்தான் இருந்தாக வேண்டும். ஏனென்றால், அது நம்முடைய வாழ்க்கை. நம் நண்பர்களுக்காக நாம் நம்முடைய வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க முடியாது. அதனால், நாங்கள் முன்னோக்கி சென்றோம்".

விஷ்ணுவின் குழுவில் இருந்த 20 பேரும், தங்களின் சொந்த நாடான இந்தியாவுக்கு வந்தடைந்தனர்.

ஆனால், கீயவில் உள்ள தனது மற்ற நண்பர்கள் குறித்து, அவர் கவலைக்கொள்கிறார். மேலும் பங்கர்களில் சிக்கி இருக்கும் இந்திய மாணவர்கள் குறித்து அவர் கவலைக்கொள்கிறார். அந்நாட்டு தலைநகரை ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. ருமேனியாவிலுள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன், எல்லையில் இருந்து புக்கரெஸ்ட் விமான நிலையத்திற்கு விஷ்ணு அழைத்து செல்லப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியபோது, கவலையில் இருந்த அவரது அம்மாவும் அப்பாவும் அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டனர். தெலங்கானாவின் சூர்யாபேட்டையில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு அவர் வந்த சில நாட்களுக்குப் பிறகு, விஷ்ணுவும் தனது அன்புக்குரிய லியோவுடன் மீண்டும் சேர்ந்தார். யுக்ரேனில் உள்ள அவரது ஆசிரியர் தனது குடும்பத்துடன் மால்டோவாவுக்கு தப்பி வந்தார். ஆனால், லியோவை பேருந்தில் ஏற்றிக்கொண்டு புக்கரெஸ்ட் வரை அவர்கள் வந்தனர். பின், லியோ இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.

வின்னிட்சியா மக்களின் அன்பு இல்லாமல் தானும் லியோவும் வீட்டிற்கு வந்திருக்க முடியாது என்று விஷ்ணு கூறுகிறார்.

"என் பக்கத்து வீட்டுக்காரர்கள், பேருந்து ஒட்டுநர், என் ஆசிரியர் என பலரும் எனக்கு உதவினார்கள்"

"யுக்ரேனிய மக்கள் மிகவும் நல்லவர்கள்."

"பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: