கொத்தமல்லி காதல்: இந்திய சமையல் கலைஞரின் முயற்சிக்கு பெருகும் நெட்டிசன்களின் ஆதரவு

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், தில்லி

லட்சக்கணக்கான இந்தியர்களைப் போல, ஒரு மூலிகை இல்லாமல் என்னால் வாழ முடியாது எனில், அது 'கொத்தமல்லியே'. நான் இதை பருப்பு கூட்டு, காய்கறிகள், மற்றும் தக்காளிகள், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து செய்யப்படும் சட்னியை அலங்கரிக்கப் பயன்படுத்துவேன் என்கிறார் பிரபல சமையல் கலைஞர் ரன்வீர் பிரார்.

இந்தியாவின் பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவரான ரன்வீர் பிரார், இந்த எளிமையான இலை, தழையை இந்தியாவின் தேசிய மூலிகையாக அறிவிக்க வேண்டும் என்று இணையதளத்தில் கையெழுத்து மனு இயக்கம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

அமெரிக்காவில் சிலண்ட்ரோ என்று அழைக்கப்படும் கொத்தமல்லிதான், சமையலறையின் சூப்பர்ஸ்டார் என்று சமையல் கலைஞர் ரன்வீர் பிரார் கூறுகிறார்.

"கொத்தமல்லி இல்லாமல் எந்த இந்திய உணவும் முழுமையடையாது. இதன் பன்முகத்தன்மைக்கு எந்த ஒரு மூலிகையும் இதற்கு ஈடாகாது", என்று மும்பையில் உள்ள தனது வீட்டிலில் இருந்தபடி என்னிடம் கூறினார் ரன்வீர்.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் இரண்டு உணவகங்களை நடத்தி வரும் இவர், இந்தியாவில் பிரபல சமையல் கலைஞர். இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் இவரை பின்தொடருவோரின் எண்ணிக்கை தலா 1.7 மில்லியன். ஃபேஸ்புக்கில் 3.3 மில்லியன் பின் தொடர்கிறார்கள். இவரது யூ-டியூப் சேனலுக்கு ஐந்து மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

நீங்கள் கொத்தமல்லியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால், பெரும்பாலானவர்கள் அதை விரும்புவார்கள். பூ போன்ற தோற்றமும், மிளகு போன்ற சுவையும் இதனை தனித்துக்காட்டுகிறது. எலுமிச்சைத் தோல், மிளகு போல் சற்றே வித்தியாசமாக இருக்கும்", என்று கொத்தமல்லியை வர்ணிக்கிறார் ரன்வீர்.

அவர் வீட்டிலும் கொத்தமல்லியை அதிகம் பயன்படுத்துவார் என்று அவர் கூறுகிறார். சமையலில் அது எப்போது சேர்க்கப்படுகிறது என்பதை பொருத்து, அதன் சுவை மாறுப்படும். உதாரணமாக, சமையலில் தொடக்கத்தில் அது சேர்க்கப்படுகிறதா அல்லது முடிவில் சேர்க்கப்படுகிறதா என்பதை பொருத்து அதன் சுவை மாறுப்படும் என்கிறார்.

வேரிலிருந்து பழம் வரை பயன்படுத்தக்கூடிய தாவரம் இது என்பதால் இது மேலும் தனித்துவம் பெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.

"நமது சமையலில் அதன் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்தப்படுகிறது. பருப்புக்கூட்டிலும், குழம்பிலும், பிரட்களிலும், இறைச்சி உணவுகளிலும் அலங்கரிக்க அதன் தழைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிறகு, அதன் தண்டுகளும், வேர்களும் சூப்களில் பயன்படுத்தப்படுகிறது. அதன் விதைகளும், பழங்களும் மசாலாவாக பயன்படுத்தப்படுகின்றன" என்கிறார் ரன்வீர்.

சில மாதங்களுக்கு முன், இன்ஸ்டாகிராமில், கொத்தமல்லிக்கு தேவையான மரியாதையை செலுத்தலாம் என்று விளையாட்டாக ரன்வீர் பதிவிட்டார். மேலும், இதை தேசிய மூலிகையாக அறிவிக்க ஒரு பிரசாரத்தை தொடங்குவோம் என்று சமையல் கலைஞர் பிரார் ஒரு யோசனையை முன்மொழிந்தார்.

"கொத்தமல்லியை தேசிய மூலிகையாக அறிவிக்க வேண்டும் என்கிற என் சிந்தனையை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்", என்று கூறி வந்த இவர், கடந்த வியாழக்கிழமை change.org என்ற இணையதள கையெழுத்து பிரசார பக்கத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் கடிதத்தில் ஆர்வலர்கள் கையெழுத்திட வேண்டும் என அழைப்பு விடுத்தார். அந்தப் பதிவு மிகவும் சுவாரஸ்சியமான உரையாடலை தொடங்கியது. எங்கு கையெழுத்திட வேண்டும் என்று பலர் கேட்டனர்.

"இன்று நீங்கள் எதையாவது சமைத்திருந்தால், நீங்கள் கொத்தமல்லியை நீட்டி, நறுக்கி, உங்கள் சமையலில் சேர்க்கலாம் அல்லது அதன் பச்சை இலைகளை அலங்காரமாகப் பயன்படுத்தியிருக்கலாம்" என்று அவர் எழுதினார்.

"இந்த மூலிகையில் சுவைகள் நிரம்பியுள்ளன. நீங்கள் செய்யும் எந்த உணவையும் இது மசாலாப் பொருளாக மாற்றும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஒவ்வொரு இந்தியரும் கிட்டத்தட்ட அனைத்து உணவுகளிலும் கொத்தமல்லியை விரும்புகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த மனுவில், ஏற்கனவே 5,500க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

"தனியா இல்லாத உணவு, தலைப்பாகை இல்லாத இளவரசி போன்றது", என்று கையெழுத்திட்டவர் ஒருவர் எழுதியிருந்தார். "தனியா இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது" என்று மற்றொருவர் எழுதினார். இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் தனது சமூக ஊடகப் பதிவில் தனது கடையில் இந்த பொருள் தீர்ந்துவிட்டால் "அச்சம் அடைவார்" என்று எழுதியதற்கு பலர் ஆதரவை தெரிவித்திருந்தனர்.

என்சைக்ளோபீடியா ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷனின்படி (Encyclopaedia of Food Sciences and Nutrition) , கொத்தமல்லி 5000 பி.சிக்கு முன்பே அறியப்பட்டது; பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரோமானியர்களாலும், கிரேக்கர்களாலும் செரிமான, சுவாச மற்றும் சிறுநீர் அமைப்புகளின் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. மேலும் சீனர்கள், இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதை பயிரிட்டுள்ளனர்.

இன்று, இது ஐரோப்பா, மெடிடெரிரரியன், வட ஆப்ரிக்கா, அமெரிக்கா, சீனா மற்றும் பங்களாதேஷ் முழுவதும் பரவலாக வளர்த்து பயன்படுத்தப்படுகிறது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் காய்கறி அறிவியல் பிரிவின் தலைவரும், பயிர் விஞ்ஞானியுமான டாக்டர் போபால் சிங் தோமர் கூறுகையில், நாடு முழுவதும், ஆண்டு முழுவதும் கொத்தமல்லி விளைகிறது என்கிறார்.

"நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, இது இந்தியாவில் ஒரு பருவகால பயிராக இருந்தது. குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும்; பெரும்பாலும் நகரங்களில் விற்கப்பட்டது," என்று அவர் என்னிடம் கூறினார். "ஆனால் இன்று, இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் மூலம் ஆண்டு முழுவதும் கொத்தமல்லி வளர்க்கப்படுகிறது, மேலும் லட்சக்கணக்கான இந்தியர்கள் சொந்த தோட்டத்தில் இதனை வளர்கிறார்கள்.

சுவை, பயன்பாடு தவிர, மூலிகையின் பிரபலமடைந்து வரும் மற்றொரு காரணம், அதற்கு முக்கியமான சில ஆரோக்கிய நன்மைகள் உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி குடிசைப்பகுதியில், பணியில் இருந்தபோது, ​​ஒரு மகளிர் மருத்துவ நிபுணர், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு, கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அத்தியாவசியமான இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், "மலிவாகக் கிடைக்கும் கொத்தமல்லியை" தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதைக் கேட்டேன்.

இதன் தாவர விதைகள் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.

சமையல் கலைஞர் பிரார் தனது மனுவில் கொத்தமல்லியை "ஒரு சூப்பர்ஃபுட்" என்று அழைக்கிறார். குறிப்பாக, இது "நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது" என்று அவர் வலியுறுத்துகிறார்.

80 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் வசிக்கும் இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 17 மில்லியனுக்கும் அதிகமான இருதய நோய்களால் உயிரிழக்கின்றனர். "நம் இதயங்களில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஒரு மூலிகை கொத்தமல்லி, உண்மையில் அது தகுந்த மதிப்பைப் பெற வேண்டும்" என்று கையெழுத்து இயக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரன்வீர் பிரார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: