You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபியா பணக்கார நாடாக உருவானது எப்படி?
- எழுதியவர், அகீல் அப்பாஸ் ஜாஃப்ரி
- பதவி, ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர், கராச்சி
செளதி அரேபியாவின் நிறுவன நாள் பிப்ரவரி 22ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 1727ஆம் ஆண்டில் முகமது பின் செளத், முதல் செளதி அரசை நிறுவிய நாள் அது. இந்த கட்டுரையில் செளதி அரேபியா எப்படி, எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை தெரிந்துகொள்வோம்.
இஸ்லாமிய உலகில் சமய அடிப்படையில் செளதி அரேபியா மிக முக்கியமான நாடாக கருதப்படுகிறது.
இந்த நாட்டின் நிறுவனர் ஷா அப்துல் அஜிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத் ஆவார். அவர் 1877 ஜனவரி 15 ஆம் தேதி பிறந்தார். ஆனால் இந்த அரசை நிறுவுவதற்கான போராட்டம் 1725இல், அல் செளதின் தலைவரான அமீர் செளத் பின் முகமது பின் மக்ரன் காலமான பிறகு,18 ஆம் நூறாண்டில் துவங்கிவிட்டது.
அந்த நேரத்தில் அரேபியாவில் சிறிய மாகாணங்கள் இருந்தன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி ஆட்சியாளர் இருந்தார்கள். அமீர் செளத் பின் முகமதிற்கு நான்கு மகன்கள் இருந்தனர். அரேபியாவில், ஒரு செளதி அரசை அமைக்க அவர் உறுதிபூண்டார்.
அமீர் செளத் பின் முகமதுவின் மூத்த மகனின் பெயர் முகமது பின் செளத். அவர் திரியாவின் ஆட்சியாளரானார் மற்றும் ஷேக் முகமது பின் அப்துல் வஹாப்பின் உதவியுடன் திரியாவில் தனது ஆட்சியை நிறுவினார். பின்னர் படிப்படியாக அதை வலுப்படுத்தத் தொடங்கினார்.
ஷேக் முகமது பின் அப்துல் வஹாப், அரேபியாவின் புகழ்பெற்ற அறிஞர். முஸ்லிம்களின் கொள்கைகளை சீர்திருத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
1745 ஆம் ஆண்டு முகமது பின் செளத் மற்றும் ஷேக் முகம்மது அப்துல் வஹாப் ஆகியோருக்கு இடையே ஒரு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. அதில் அரேபியா மற்றும் ஹிஜாஸ் ஆகிய இடங்களில் எப்போதாவது தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் முகம்மது பின் செளத் வெற்றி பெற்றார் என்றால், அங்கு ஷேக் முகமது பின் அப்துல் வஹாபின் கொள்கைகள் அமல்செய்யப்படும் என்று இருவரும் முடிவு செய்தனர்.
இளவரசர் முகமது 1765 இல் இறந்தார் மற்றும் ஷேக் முகமது பின் அப்துல் வஹாப் 1791 இல் காலமானார். அந்த நேரத்திற்குள்ளாக, பெரும்பாலான அரேபிய தீவுகளில் அல் செளதின் ஆட்சி நிறுவப்பட்டது.
இளவரசர் முகமதுக்குப் பிறகு, இமாம் அப்துல் அஜீஸ் இப்பகுதியின் ஆட்சியாளரானார், ஆனால் 1803 இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். இமாம் அப்துல் அஜிஸுக்குப் பிறகு அவரது மகன் செளத் ஆட்சியாளராக ஆனார். அவர் 1814 இல் காலமானார்.
ரியாத் எப்போது, எப்படி தலைநகரானது?
செளதின் மகன் அப்துல்லாவும் ஒரு சிறந்த அறிஞர். அவரது ஆட்சியின் போது அந்தப்பிரதேசத்தின் பெரும்பகுதி, அவரது கைகளில் இருந்து கைவிட்டுப்போனது. திரியா பகுதி ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
இமாம் அப்துல்லா சிறைபிடிக்கப்பட்டு இஸ்தான்புல்லுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் விரைவில் அவரது சகோதரர் மஷாரி பின் செளத் தனது நாட்டை திரும்பப் பெறுவதில் வெற்றி பெற்றார். ஆனால் அவரால் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியவில்லை, அவரது நாடு மீண்டும் ஒட்டோமான் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
அதைத் தொடர்ந்து, அவரது மருமகன் இளவரசர் துர்கி பின் அப்துல்லா, ரியாதைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். இங்கு அவர் 1824 முதல் 1835 வரை ஆட்சி செய்தார்.
அடுத்த பல தசாப்தங்களுக்கு அல் செளதின் அதிர்ஷ்டம் மேலும் கீழுமாக இருந்தது. எகிப்து, ஒட்டோமான் பேரரசு மற்றும் பிற அரபு பழங்குடியினர், தீவுப்பகுதியான செளதி அரேபியாவின் கட்டுப்பாட்டிற்காக சண்டையிட்டனர். அல் செளதின் ஆட்சியாளர்களில் ஒருவரான இமாம் அப்துல் ரஹ்மான் 1889 இல் பேயத் (அவர் மீதான விசுவாசப் பிரமாணம்) பெறுவதில் வெற்றி பெற்றார்.
இமாம் அப்துல் ரஹ்மானின் மகன் இளவரசர் அப்துல் அஜீஸ் ஒரு துணிச்சலான மனிதராக இருந்தார்.1900 ஆம் ஆண்டில், அவரது தந்தை உயிருடன் இருக்கும்போதே, அவர் இழந்த சாம்ராஜ்யத்தை மீண்டும் பெறவும் விரிவுபடுத்தவும் முயற்சிகளை ஆரம்பித்தார்.
1902 இல், அவர் ரியாத் நகரைக் கைப்பற்றி அல் செளதின் தலைநகராக அறிவித்தார். பின்னர் அவர் அல்-எஹ்சாய், குதைஃப் மற்றும் அரேபியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றினார்.
மெக்கா, மதீனா மீது ஆக்கிரமிப்பு
ஒட்டோமான் பேரரசின் கடைசி கட்டத்தில், ஹிஜாஸ் பிராந்தியத்தை(மெக்கா மற்றும் மதீனா பகுதிகளை உள்ளடக்கியது) ஷெரீப் மெக்கா ஹுசைன் ஆட்சி செய்தார். அவர் 1916 ஜூன் 5 ஆம் தேதி துருக்கிக்கு எதிராக கிளர்ச்சியை அறிவித்தார். ஹுசைனுக்கு அரேபியாவின் பல்வேறு பழங்குடியினர் மட்டுமின்றி பிரிட்டனின் ஆதரவும் இருந்தது. 1916 ஜூன் 7 ஆம் தேதி ஷெரீப் மெக்கா ஹுசைன், ஹிஜாஸின் சுதந்திரத்தை அறிவித்தார்.
ஜூன் 21 அன்று மெக்கா மீதான அவரது ஆக்கிரமிப்பு நிறைவடைந்தது. அக்டோபர் 29 அன்று அவர் தன்னை முழு அரேபியாவின் ஆட்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும், துருக்கிக்கு எதிராக போரை அறிவிக்குமாறு எல்லா அரேபியர்களையும் கேட்டுக் கொண்டார். 1916 டிசம்பர் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசு ஹுசைனை, ஹிஜாஸ் பேரரசராக அங்கீகரிப்பதாக அறிவித்தது.
இதற்கிடையில், அமிர் அப்துல் அஜிஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத், கிழக்கு அரேபியாவின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, 1915 டிசம்பர் 26 அன்று பிரிட்டனுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர் 1924 செப்டம்பர் 5 ஆம் தேதி ஹிஜாஸை கைப்பற்றினார்.
மக்கள், அமீர் அப்துல் அஜீஸை ஆதரித்தனர். ஷெரீப் மெக்கா ஷா ஹுசைன் அரசில் இருந்து ராஜினாமா செய்தார் மற்றும் தனது மகன் அலியை, ஹிஜாஸின் பேரரசராக ஆக்கினார். ஆனால் அமீர் அப்துல் அஜீஸின் அதிகரித்து வந்த விரிவாக்க நடவடிக்கைகளால் அவரும் தனது சிம்மாசனத்தில் இருந்து இறங்க வேண்டியிருந்தது.
1924 அக்டோபர் 13 ஆம் தேதி, ஷா அப்துல் அஜீஸ், மெக்காவையும் கைப்பற்றினார். இந்த காலகட்டத்தில் அவர் அரசின் விரிவாக்கத்தில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தார்.
1925 டிசம்பர் 5 ஆம் தேதி அவர் மதீனாவின் அதிகாரத்தையும் பெற்றார். 1925 நவம்பர் 19 அன்று ஷெரீப் மெக்கா அலி தனது அதிகாரத்தை முழுமையாகத் துறப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெட்டாவும் அல் செளதின் பிடியில் வந்தது. 1926 ஜனவரி 8 அன்று, ஹிஜாஸின் பேரரசர் அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத், ஒரு சிறப்பு விழாவில், அரேபியா மற்றும் ஹிஜாஸின் முழு கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.
வல்லுநர்களும் திகைத்துப் போன அளவுக்கு எண்ணெய் வளம்
1927 மே 20 ஆம் தேதி ஹிஜாஸ் மற்றும் நஜத்(அரேபியா) என்று அழைக்கப்பட்ட அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் அப்துல் அஜிஸ் பின் செளதின் ஆட்சியை பிரிட்டன் அங்கீகரித்தது. 1932, செப்டம்பர் 23 அன்று, ஷா அப்துல் அஜீஸ் பின் செளத், ஹிஜாஸ் மற்றும் நஜத் ராஜ்ஜியத்தின் பெயரை 'அல்-முமாலிகத்-அல்-அரேபியா-அல்-சௌதியா' (செளதி அரேபியா) என்று மாற்றுவதாக அறிவித்தார்.
ஷா அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத் விரைவில் தனது அரசை இஸ்லாமிய அரசாக மாற்றினார். மறுபுறம், அவருக்கு அதிருஷ்டம் கைகொடுத்தது. செளதி அரேபியாவில் பெருமளவு எண்ணெய் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.1933 ஆம் ஆண்டில், ஷா அப்துல் அஜீஸ், கலிபோர்னியா பெட்ரோலிய நிறுவனத்துடன் எண்ணெய் அகழ்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
முதல் சில ஆண்டுகள் முயற்சிகளுடன் கடந்தன. ஆனால் 1938 ஆம் ஆண்டில், கலிபோர்னியா பெட்ரோலியம் நிறுவனத்தின் வல்லுநர்கள் தோல்வியடைந்து திரும்பவிருந்த போது, திடீரென்று ஒரு கிணற்றில் இருந்து எண்ணெய் புதையல் வெளிப்பட்டது. அங்கிருந்த எண்ணெய் வளத்தின் அளவு, அந்த நிபுணர்களை திகைப்பில் ஆழ்த்தியது.
இப்போது வரலாற்றின் புதிய சகாப்தம் ஆரம்பமானது.
செளதி ஆட்சியாளர்களுக்கும், கலிபோர்னியா நிறுவனத்திற்கும் மட்டுமின்றி முழு அரேபிய தீவுக்கும் ஒரு பேரதிசயமாக, இந்த நிகழ்வு இருந்தது. எண்ணெய் கண்டுபிடிப்பு செளதி அரேபியாவிற்கு மிகப்பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மையை அளித்தது மற்றும் அங்கு செழிப்பு ஏற்பட ஆரம்பித்தது.
ஷா அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத் 1953 நவம்பர் 9 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
ஜன்னத் அல்-பாக்கி இடிப்பு
மன்னர் அப்துல் அஜீஸ் தனது ஆட்சியின் போது, செளதி அரேபியாவை ஒரு பெரிய வல்லரசாக மாற்றினார். ஆனால் இஸ்லாமிய உலகின் பெரும்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்திய சில சமய நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார்.
அவர் ஷேக் முகமது பின் அப்துல் வஹாபின் கொள்கைகளின்படி தனது பேரரசை உருவாக்கினார். பிதத்(இஸ்லாத்தில் பின்னர் சேர்க்கப்பட்ட விஷயங்கள்)ஐ ஒழித்தார். இவருடைய காலத்தில் மதீனாவில் இருந்த இஸ்லாமிய உலகின் முக்கிய கல்லறையான ஜன்னத்-அல்-பாக்கி இடிக்கப்பட்டது.
காட்டு மரங்கள் மற்றும் செடிகள் அதிகம் காணப்படும் இடம் பாக்கி என்று அழைக்கப்படுகிறது. இந்த மயானத்தில் முட்கள் நிறைந்த புதர்கள் மற்றும் முட்கள் நிறைந்த மரங்கள் இருந்ததால், இந்த கல்லறைக்கு பாக்கி (கர்கத்) என்ற பெயர் வந்தது.
இந்த கல்லறையில், இஸ்லாமியர்களை அடக்கம் செய்யும் செயல்முறை இஸ்லாத்தின் நபி காலத்திலிருந்தே தொடங்கியது. இந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட முதல் சஹாபி (நபிகளின் தோழர்) ஹஸ்ரத் உஸ்மான் பின் மசூன் ஆவார். அதன் பிறகு, ஆயிரக்கணக்கான பேர் இந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஷா அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் செளத், ஜன்னத்-அல்-பாக்கியில் உள்ள எல்லா குவிமாடங்களையும் இடிக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் 1926 ஏப்ரல் 21 அன்று நடந்தது. ஜன்னத் அல்- பாக்கியின் இடிப்புக்கு இஸ்லாமிய உலகம் கடுமையான கண்டனங்களை வெளியிட்டது.
இப்போது இந்த கல்லறைப்பகுதி முழுவதும் சமவெளியாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், மதீனாவிற்கு செல்லும் யாத்ரீகர்கள், ஜன்னத் அல்- பாக்கிக்கு வருகை தருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்