You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா? - உடல்நலம்
ஆண் பெண் பாலுறவில் உச்சகட்டம் என்பது முக்கியமான அம்சம். ஆயினும் இது தொடர்பான இன்று வரையிலும் ஆராய்ச்சிக்குரிய அம்சமாகவே இது நீடித்து வருகிறது. இது தொடர்பான அடிப்படையான தகவல்களை விளக்கும் வகையில் மகப்பேறு மற்றும் பாலியல் சிகிச்சை நிபுணர் ஜெயராணி காமராஜ் அளித்த பேட்டியின் உரை வடிவம். (பாலியல் உடல்நலம் குறித்து விளக்கும் வகையில் பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் இரண்டாவது பாகம் இது.)
உடலுறவில் உச்சகட்டம் என்பது என்ன?
உச்சகட்டம் என்பது ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது, பெண்களுக்கு கருப்பை வாயில் சுருக்கம் ஏற்படுவது அத்துடன் இருவருக்கும் ஓர் உன்னதமான உணர்வு ஏற்படுவது ஆகியவையே உச்சகட்டம் என்ற பொதுவான கருத்து உள்ளது.
உச்சகட்டம் அடைந்த பெண்களிடம் கருப்பை வாய் சுருக்கம், உன்னதமான உணர்வு உள்ளிட்டவை பற்றிய கேள்விகளுடன் மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன் எனும் இரு பாலியல் நடத்தை குறித்த ஆய்வாளர்கள் விரிவான ஆய்வு நடத்தினர். இதில் ஆய்வில் பங்கேற்ற மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு உடல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.
இதேபோல் ஆண்களை எடுத்துக் கொண்டால், விந்து வெளியேறுவதுதான் உச்சகட்டம் என்று கூறப்பட்டாலும், விந்து வெளியேறாமலேயே உச்ச கட்டம் அடையும் ஆண்கள் இருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன.
தங்களுடன் உடலுறவில் ஈடுபடுபவர் உச்சகட்டம் அடைந்துவிட்டார் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
விந்து வெளியேறிவிட்டால் ஆண்கள் உச்சகட்டம் அடைந்துவிட்டதாக பொதுவாக உணர முடியும். ஆனால், பெண்கள் உச்சகட்டம் அடைந்துவிட்டனரா என்பது பல நேரங்களில் தெளிவாகத் தெரிவதில்லை. வாழ்நாள் முழுவதுமே சுமார் 10 சதவிகிதம் பெண்கள்தான் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறார்கள் என்று இது பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.
சுமார் 30 ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்தவர்கள்கூட உச்சகட்டம் என்ன என்பதே தெரியாமல் பாலியல் உறவை அனுபவித்திருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை பலருக்கு உச்சகட்டம் அடைவதற்கு முன்பே உடல் ரீதியிலான மாற்றங்கள் வந்து உச்சகட்டத்தை அடைய முடியாமல் போகிறது. பல பெண்கள் உச்சகட்டம் என்பது மன ரீதியிலானது என்றே ஆய்வுகளில் கூறுகிறார்கள்.
உச்சகட்டம் அடைவதில் குறைபாடு என்பது என்ன?
இளம் வயதில் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள், பாலியல் கொடுமைகள் போன்றவற்றால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உச்சகட்டம் அடைவதில் குறைபாடு ஏற்படுகிறது.
உடல் சோர்வு, உடல் ரீதியிலான எல்லா வகையான நோய்கள் போன்றவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உச்சகட்டம் அடைவதற்குத் தடையாக இருக்கும். மனக் குழப்பம், பதற்றம் போன்ற மனோவியாதிகளும் உச்சகட்டம் அடைவதற்குத் தடையை ஏற்படுத்தும். இவை தவிர சில மருந்துகள் உச்சகட்டம் அடைவதைத் தூண்டுவதற்குத் தடையாக இருக்கும்.
பல தருணங்களில் தம்பதிக்கு இடையே சரியான புரிதல் இல்லாமலும், இணக்கம் இல்லாமலும் இருந்தாலும் உச்சகட்டம் அடைவதில் சிக்கல் ஏற்படும்.
உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் பெண்கள் கருவுற முடியுமா?
உடலுறவில் உச்சகட்டம் அடைந்தால்தான் கருத்தரிக்க முடியும் என்பது தவறான நம்பிக்கை. கருவுறுவதற்கும் உச்சகட்டத்துக்கும் தொடர்பே இல்லை. திருமணம் செய்து பல குழந்தைகளைப் பெற்ற ஏராளமான பெண்கள் உடலுறவில் உச்சகட்டம் அடையாமலேயே தங்களது பாலியல் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பான விரிவான பேட்டியைக் காண காணொளியைப் பார்க்கவும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்