விஜய் நடித்த பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் பேட்டி: படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கிறதா?

    • எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'கோலமாவு லோகிலா', 'டாக்டர்' படங்களின் வெற்றிக்கு பிறகு அடுத்து 'பீஸ்ட்' மோடில் வருகிறார் இயக்குநர் நெல்சன். நடிகர் விஜய்யுடன் முதன் முறையாக நெல்சன் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.

'பீஸ்ட்' வெளியீட்டு பரபரப்பிற்கிடையே இயக்குநர் நெல்சன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்.

கேள்வி: நடிகர் விஜயின் ரசிகர் நீங்கள். அவரை வைத்து 'பீஸ்ட்' படம் இயக்கி, பத்தாண்டுகளுக்கு பிறகு நேர்காணலும் செய்து விட்டீர்கள். உண்மையில் இப்போது உங்கள் மனநிலை எப்படி உள்ளது?

பதில்: ஆமாம், நடிகர் விஜய்யுடைய தீவிர ரசிகன் நான். எப்போது அவர் படம் வந்தாலும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடுவேன். 'பீஸ்ட்' படமும் அப்படி தான். நான் இயக்கி இருக்கிறேன் என்பதைத் தாண்டி, அந்த மனநிலை எப்போதும் எனக்கு உண்டு. ரசிகனாக 'பீஸ்ட்' படம் திரையில் பார்க்கவும் ரசிகர்களின் மனநிலை தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன்.

முதல் பேட்டி எப்படி அமைந்தது?

கேள்வி: நடிகர் விஜயை இயக்கியது ஒரு பக்கம் என்றால் பல வருடங்களுக்கு பிறகு நீங்கள் அவரை எடுத்த பேட்டி பரவலாக பேசப்பட்டது. முதன் முறையாக அவரை நீங்கள்தான் பேட்டி எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட போது என்ன நினைத்தீர்கள்?

பதில்: இதை என்னிடம் முதன் முதலாக சொன்ன போது, 'நானா?' என நினைத்தேன். மிக இயல்பான ஜாலியான ஒரு பேட்டியாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். படத்தில் இவ்வளவு நாட்கள் வேலை பார்த்ததால் அவருடன் எனக்கு ஒரு நல்ல பிணைப்பு இருந்தது. அதனால், 'ஏன் நாமே நேர்காணல் செய்ய கூடாது? நல்லா தானே இருக்கும்?' என யோசித்து சம்மதித்தேன்.

கேள்வி: பேட்டிக்காக சமூக வலைதளங்களில் உங்களுக்கு வந்த பாராட்டுகளை கவனித்தீர்களா?

"இல்லை. சமூக வலைதளங்களில் வரும் கமெண்ட்டுகளை நான் பெரிதாக கவனிப்பதில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எப்படி தொழில்முறையாக நேர்த்தியாக ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என தெரியாது. இயல்பாக விஜய் சாருடன் எப்படி பேச வருமோ அப்படி தான் அந்த நேர்காணல் அமைந்தது. அது எல்லாருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி".

கேள்வி: அதே பேட்டியில் 'பீஸ்ட்' படக்குழு விஜயுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றது பற்றி பேசியிருப்பீர்கள். அது முன்பே திட்டமிட்ட ஒன்றா?

"நிச்சயமாக இல்லை. ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் சென்றதெல்லாம் ஒரு ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் கார் இருந்தது. அதில் எங்களை ஒருமுறை கூட்டி செல்லுங்கள் என அவரிடம் கேட்டு கொண்டே இருந்தோம். அப்படி தான் அந்த ஜாலி ரைட் அமைந்தது".

செல்வராகவன் கதாபாத்திரம்

கேள்வி: உங்களுடைய முந்தைய படங்களில் உங்களுடைய இயல்பான சாயல் தென்படும் வகையிலான கதாபாத்திரம் ('கோலமாவு கோகிலா'வில் யோகிபாபு, 'டாக்டர்' படத்தில் ரெடின்) அமைந்து விடுகிறது. 'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன் கதாபாத்திரத்தில் கூட உங்களது இயல்பு இருக்கிறது. இது திட்டமிட்டு எடுத்ததா?

" செல்வராகவன் கதாபாத்திரத்தை நாங்கள் தனித்தன்மையுடன் சிறப்பாக வடிவமைத்துள்ளோம். அது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெளிவாக தெரியும். அமைதியாக இருக்கக்கூடிய அதே சமயம் அந்த சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பது போல இருக்கும் ".

கேள்வி: இயக்குநர் செல்வராகவனை எப்படி நடிகராக இந்த கதைக்கு சம்மதிக்க வைத்தீர்கள்?

"'பீஸ்ட்' படத்திற்கு முன்பே அவர் வேறொரு படத்தில் நடித்து கொண்டிருந்தார். அதனால், அவரை சந்தித்து பத்து நிமிடங்கள் கதை சொல்லி இருப்பேன். கேட்டதும் உடனே 'சரி, நடிக்கிறேன்' என சொன்னார்".

பிடித்த வசனம்

கேள்வி: படத்தின் முன்னோட்டத்தில் விஜய் 'பயமா இருக்கா, இனிமேதான் பயங்கரமா இருக்க போகுது' என்று பேசிய வசனம் தவிர படத்தில் வேறு எது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தது?

" எல்லாமே பிடிக்கும்! படத்தை நான்தானே இயக்கினேன். குறிப்பிட்டு ஒன்றை மட்டும் சொன்னால் அப்போது பிடிக்காத மற்றதை எல்லாம் ஏன் வைத்தாய் என கேட்பார்கள். படத்தில் இதுக்கு முன்பு நீங்கள் கேட்டு பழகிய ஒரு வசனம் ஒன்று வரும். அது படத்துடன் பார்க்கும் போது உங்களுக்கு பிடிக்கும். அது எனக்கு பிடித்த ஒன்று".

கேள்வி: பெரிய நட்சத்திர நடிகர்களுக்காக கதை எழுதும்போது இயக்குநர்கள் அவர்களுடைய தனிப்பட்ட வழக்கத்தில் இருந்து சில விஷயங்களை கதையில் மாற்ற வேண்டி இருக்கும். அந்த சிக்கல் உங்களுக்கும் இருந்ததா?

"அப்படி இல்லை! இந்த படம் விஜய் சாருக்கு என்றுதான் ஆரம்பத்தில் இருந்தே செய்தது. கதையில் என்ன இருந்ததோ அதை தான் விஜய்யும் செய்திருக்கிறார். அவருக்காக கூடவோ குறையவோ எதுவும் செய்யவில்லை. உண்மையை சொல்லப்போனால், இந்த கதைக்கு அவர்தான் தேவையாக இருந்தார். மற்றபடி கதையை மையமாக வைத்து அதை சுற்றி ரசிகர்கள் என்ன விரும்புவார்களோ அதை செய்திருக்கிறேன்".

கேள்வி: நடிகர் விஜய்யின் முந்தைய படங்களை விட 'பீஸ்ட்' சற்றே மாறுபட்டு குறைவான லொகேஷன், பெரும்பாலும் ஒரே காஸ்ட்யூம் என இதை சுற்றியே இருக்கிறதே. எப்படி விஜய்யை இதற்கு சம்மதிக்க வைத்தீர்கள்?

"விஜய் இதற்கு சம்மதித்தது எனக்கே ஆச்சரியமான ஒன்று தான். கதை சொல்லும் போது இதனால் அவர் எதுவும் டிஸ்டர்ப் ஆவாரோ என நினைத்தேன். ஆனால், கதை கேட்டு விட்டு, 'நீங்கள் எதோ வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள். நிச்சயமாக செய்யலாம்' என்றார்.

முடிவில் அது நன்றாக வந்தால் நல்லது தானே. படம் எடுத்து முடித்ததும் பார்த்து விட்டு, 'நீங்கள் என்ன சொன்னீர்களோ, அப்படியே எடுத்து இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது' என்றார்".

கோபப்பட்டால் வேலை நடக்காது

கேள்வி: படப்பிடிப்பு தளத்தில்கூட நெல்சன் கோபப்படாமல் ஜாலியாக இருக்கும் நபர் என கேள்வி பட்டோம். உங்களை கோபப்படுத்தும் விஷயம் என்றால் எதை சொல்வீர்கள்?

"வேலையில் எதாவது முன்ன பின்ன இருந்தால் கோபம் வரும். மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் என்னை பொருத்தவரை கோபப்பட்டால் வேலை நடக்காது. அன்று நமக்கு மனநிலை சரி இல்லை என்றால் யாரிடமும் அங்கு பேச முடியாது. அதனால் ஜாலியாக இருந்தால்தான் வேலை சரியாக நடக்கும் என்பது என்னுடைய எண்ணம்.

யாரையும் போட்டு டார்ச்சர் செய்யாமல் அமைதியாக ஜாலியாக கொண்டு செல்ல வேண்டும். இதுவே நிஜ வாழ்க்கையிலும் அப்படியா என்றால் அது என்னுடன் பழகுபவர்களை தான் நீங்கள் கேட்க வேண்டும்".

கேள்வி: நீங்கள் எந்த ரியாக்‌ஷன் கொடுத்தாலுமே அது இணையத்தில் மீம் ஆகி விடுகிறதே! அதை எல்லாம் கவனிக்கிறீர்களா?

" சிலது எல்லாம் பார்பேன். மற்றபடி நண்பர்களும் எனக்கு அனுப்புவார்கள். நீங்கள் கேட்பதை பார்த்தால் என்னை வைத்து நீங்களும் மீம் போட்டு இருப்பீர்கள் போலயே?"

கேள்வி: விஜயுடனான பேட்டி ஆரம்பிக்கும் போது இரண்டு பேரும் சில நிமிடங்கள் மாறி மாறி பார்த்து கொள்வீர்களே, அந்த ரியாக்‌ஷன் தான் உங்களது சமீபத்திய மீம் வைரல். ஏன் அப்படி பார்த்து கொண்டீர்கள்?

"இல்லை, அந்த பேட்டியில் சில கேள்விகள் அவரை பார்த்து முன்ன பின்ன என கேட்க வேண்டி இருந்தது. அதனால் அவரை அப்படி பார்த்தேன். 'கேட்கலாமா வேண்டாமா' என்பது போன்று என் பார்வை இருக்கும். 'இவன் இப்ப என்ன கேட்க போறான்' என்பது போல விஜய் சாரின் பார்வை இருக்கும். அவ்வளவு தான்".

அடுத்து ரஜினி படம் எப்படி இருக்கும்

கேள்வி: உங்களுடைய அடுத்த படம் நடிகர் ரஜினிகாந்த்துடன். எந்த மாதிரியான ரஜினியை நெல்சன் படத்தில் எதிர்ப்பார்க்கலாம்?

"ரஜினி சார் இத்தனை வருடம் இவ்வளவு கதாப்பாத்திரங்களில் நடித்து விட்டார். அவர் ஒரு லெஜெண்ட். எனக்கு இப்போது மனதில் இருப்பதெல்லாம் உலகம் முழுக்க இருக்கும் அவருடைய ரசிகர்களுக்கு பிடித்ததுபோல எந்த அளவுக்கு ஜாலியாக என்கேஜ்டாக எடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் மனதில் இருக்கிறது. ரஜினி படமாக அதே சமயத்தில் எந்த அளவுக்கு வித்தியாசமாக காட்ட முடியும் என்பதை சுற்றிதான் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறேன்".

கேள்வி: முதல் படம் நயன்தாரா, அடுத்து சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என அடுத்தடுத்த உயரங்களுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா இல்லை பயமா?

"பயம் என்பது இல்லை. 'கோலமாவு கோகிலா' படம் மட்டும் தான் என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அது நல்லபடியாக முடிந்தது. அடுத்தடுத்த படங்களில் அந்த பிராசசை மகிழ்ச்சியாக அனுபவிக்க ஆரம்பித்து விட்டேன்".

பீஸ்ட் -இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கிறதா?

கேள்வி: குவைத் உள்ளிட்ட சில நாடுகளில் 'பீஸ்ட்' படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக சொல்லி வெளியிட தடை செய்திருக்கிறார்கள். உண்மையில் படத்தில் அப்படி காட்சிப்படுத்தி இருக்கிறீர்களா?

"இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எடுத்த படம். படத்தை முழுதாக பார்த்தார்கள் என்றால் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்பது அவர்களுக்கு புரிய வரும்".

சிம்புவுடன் இணைவது எப்போது ?

கேள்வி: உங்களுடைய முதல் படம் நடிகர் சிலம்பரசனுடன் 'வேட்டை மன்னன்'. அது சில காரணங்களால் நடைபெறாமல் போனது. மீண்டும் அந்த படத்தின் கதையில் அவருடன் இணைகிறீர்கள் என்றெல்லாம் தகவல் வந்தது. உண்மைதானா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

"நமக்கு அது போன்ற கதை, சூழ்நிலை எல்லாம் ஒன்றாக அமைந்தால் நிச்சயம் செய்யலாம். ஆனால், அதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும்".

கேள்வி: டாக்டர்' பட பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் நீங்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட விரும்பி அது நிறைவேறாமல் போனதால்தான் படங்களில் அது போன்ற ஒன்லைனை எப்படியும் புகுத்தி விடுகிறீர்கள் என ஜாலியாக சொன்னார். அவர் சொன்னது போல, உங்கள் படங்களின் கதையில் அதையே ரிப்பீட் செய்வது ஏன்?

"படத்தில் அதில் எதுவும் ஜாலியான விஷயங்கள் கிடைக்குமா என்பதற்காக அப்படி அமைத்து விடுவேன். உண்மையில், கடத்தலில் ஆர்வம் என்றால் நான் ஏன் படங்கள் இயக்கி கொண்டிருக்க வேண்டும்? என் படங்களில் வரும் கடத்தலை செய்தியாக பார்க்கவில்லை. மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக தான் பார்க்கிறேன். இரண்டு மணி நேரம் படம் பார்ப்பவர்கள் ஜாலியாக வந்து செல்ல வேண்டும் அவ்வளவு தான்".

கேள்வி: இப்பொழுது Pan India என்ற சொல் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. நீங்கள் பான் இந்தியா இயக்குநர் ஆகும் திட்டம் இருக்கிறதா?

" இது எல்லாம் திட்டமிட்டு நடக்காது. அது நடக்க வேண்டும் என்று இருந்தால் நிச்சயம் நடக்கும். 'பீஸ்ட்' படம் கூட பான் இந்தியா என திட்டமிடவில்லை. Regional Film ஆக தான் எடுத்தோம். பின்பு தான், தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளில் டப் செய்தோம்".

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: