ஒரு நகைச்சுவை தவறாக போனால் என்னாகும்? கலைஞர்கள் பகிரும் அனுபவங்கள்

    • எழுதியவர், ராபின் லிவின்சன் கிங்
    • பதவி, பிபிசி நியூஸ், டொரென்டோ

ஆஸ்கர் விருது விழாவில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கிறிஸ் ராக் அறை வாங்கும் அளவுக்கு, அவர் கூறிய நகைச்சுவை மிகவும் தவறான பார்வையில் இருந்தது. வில் ஸ்மித் மனைவியான ஜாடா பிங்கெட் ஸ்மித்திற்கு இருக்கும் மருத்துவ பிரச்சனை குறித்து அந்த நகைச்சுவை இருந்தது.

"நான் எல்லை மீறி நடந்து கொண்டேன். நான் செய்தது தவறு." என்று ராக்கிடம் வில் ஸ்மித் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

ஒரு நகைச்சுவை தவறாக போனால் என்னாகும் என்று பிபிசி பல நகைச்சுவை கலைஞர்களிடம் கேட்டது.

"போராடுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு"

இந்தியாவைச் சேர்ந்த அபிஷ் மாத்யூ, மதம் குறித்த சர்ச்சைக்குரிய நகைச்சுவைகளை கூறியதால், அவர் மறைந்து வாழும் நிலைக்கு நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அத்தகைய நிலைக்குதான் தள்ளப்பட்டனர்.

"நாங்கள் அனைவரும் பம்பாயில் [மும்பை] எங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. மேலும், நாங்கள் ஒரு வாரத்திற்கு மேல் மிகவும் பயந்து, ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது," என்று அவர் கூறுகிறார்.

அவரும் மீதும், அவரது சக நகைச்சுவை கலைஞர்கள் மீதும் காவல்துறை புகார்களை பதிவு செய்தது. ஆனால் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை . இந்திய அரசியலமைப்பு வெளித்தோற்றத்தில் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும். அதே சமயத்தில், மத உணர்வுகளை சீர்குலைக்கும் பேச்சுக்கு எச்சரிக்கை விடுக்கும்படியாகவே உள்ளது.

ஸ்டாண்ட்-அப் காமெடிக்கு தனது நாடு தயாராக உள்ளதா என்று யோசிக்க ஆரம்பித்ததாக அவர் தெரிவிக்கிறார். ஆனால், உலகம் முழுவதும் உள்ள சக நகைச்சுவை கலைஞர்களுடன் பேசிய பிறகு, நீங்கள் என்ன சொல்ல முடியும், என்ன சொல்ல முடியாது என்பது உலகம் எங்கும் நிலவும் விஷயம் என்பதை உணர்ந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

சில நேரங்களில், இத்தகைய சவால்கள் நேர்மறையானதாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். ஒருமுறை, ஒரு நிகழ்ச்சியின் போது தில்லி பல்கலைக்கழகத்தில் பெண் மாணவர்கள் குழு ஒன்று, அவரது நகைச்சுவைகள் பாலின பாகுபாடுடன் இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

"அவர்கள் வன்முறையை தேர்ந்தெடுக்கவில்லை. அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர்," என்று அவர் தெரிவிக்கிறார். "அவர்களுக்குப் பேச உரிமை உண்டு என்று கூறும் மாத்யூ, அவர்களின் கருத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார்.

ஸ்மித் ஓர் உணர்ச்சிபூர்வமான செயலை செய்தார் என்பதை அவர் பாராட்டுகிறார். ஆனால், அந்த வன்முறை எல்லையை தாண்டியது என்று அவர் தெரிவிக்கிறார்.

"இது ஓர் அணை போன்றது. இது மற்றவர்களையும் அதே வழியில் செயல்பட தூண்டும் அல்லது அது இயல்பானது என்று நினைக்க வைக்கும்", என்று அவர் தெரிவிக்கிறார்.

"நான் மேடையில் தாக்கப்பட்டேன்"

நகைச்சுவை கலைஞர் சாமி ஒபிட் ( Sammy Obeid), கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்த காட்சியைப் பார்த்த போது, ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவர் அமெரிக்காவில் தாக்கப்பட்டது அவருக்கு நினைவு வந்தது.

ஒரு மேடை நிகழ்ச்சியில், அவர் பங்கேற்ற போது, குடிபோதையில் இருந்த ஒருவர் அவரை முகத்தில் குத்த முயற்சி செய்தார்.

அந்த நாள் அவருக்கு அது ஒரு பாடமாக அமைந்தது. "உங்களின் நகைச்சுவை ரசிக்கும்படி இல்லாவிட்டால், மக்கள் மிகவும் கோபமடைவார்கள்", என்று தெரிவிக்கிறார்.

தான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டதாக வில் ஸ்மித் தெரிவித்தார்.

ஆனால், "ஒருவர் உங்கள் மீது கோபப்பட நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பது எப்போதும் முக்கியமாக இருப்பதல்ல. மக்கள் உணர்ச்சிவசமாக செயல்பட, அவர்களுக்கு பிடிக்காத ஏதாவது ஒன்றை செய்தாலே போதும்." என்றார் சாமி.

"இங்கு நடுநிலையான எதிர்வினை என்பது மிகவும் குறைவே. அவர்களை சிரிக்க வைத்தால், நீங்கள் நகைச்சுவை செய்கிறீர்கள் என்று நினைப்பார்கள். இல்லையெனில், நீங்கள் முட்டாளாக இருக்கிறீர்கள் அல்லது புண்படுத்திவிட்டீர்கள் என்று நினைப்பார்கள்", என்று அவர் தெரிவிக்கிறார்.

சாமி ஒபிட் தாக்கப்படுவதற்கு, அவர் கூறிய நகைச்சுவை பூனைகள் பற்றியது. ஆனால், அவரை தாக்கிய நபர் தொடக்கத்திலிருந்தே சாமியின் நடவடிக்கையை ரசிக்கவில்லை.

"எங்களுக்கு மீண்டும் நிதி கிடையாது"

பிரிட்டிஷ் மற்றும் மலாவியைச் சேர்ந்த நகைச்சுவை கலைஞரான டாலிசோ சபோண்டா, தனது இருபது ஆண்டு கால அனுபவத்தில் இது போன்ற விஷயங்களை பலமுறை சந்தித்திருக்கிறார்.

ஒருமுறை, அவரது கையில் இருந்து, ஒருவர் மைக்கை பிடுங்கி இருக்கிறார்.

மற்றொரு முறை, அவரை அடிப்பதற்காகவே, பார்வையாளர்களில் ஒருவர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வெளியே காத்திருந்தார்.

அரசு ஊழியராக இருந்த அவரது தந்தை, அரசுக்கு எதிராக செயல்பட்டதாக அவர் கூறிய நகைச்சுவையால், ஒருமுறை அவர் கைது செய்யப்பட்டார்.

"நீங்கள் எங்கு சென்றாலும், நீங்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதற்கு சில எழுதப்படாத விதிகள் உள்ளன என்று சபோண்டா தெரிவிக்கிறார்.

ராபர்ட் முகாபே ஆட்சியில் இருந்தபோது ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு கிளப்பில் இவரது நிகழ்ச்சி நடந்தது. சபோண்டா தன்னைப் பற்றி அதிகம் பயப்படவில்லை. ஆனால், அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு அவரது செயல் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைப் பற்றி அவர் அறிந்திருந்ததாகத் தெரிவிக்கிறார். .

அவர்கள் தயவுசெய்து அரசாங்கத்தைப் பற்றி எதுவும் கூற வேண்டாம். நீங்கள் ஒரு வெளிநாட்டவர். அவர்கள் ஒருவேளை உங்களை விட்டுவிடுவார்கள். ஆனால், எங்களுக்கு இனி ஒருபோதும் நிதி கிடைக்காது என்று கூறியதாக அவர் தெரிவிக்கிறார்.

"இது ஒரு நுட்பமான சமநிலை"

'கன்சல் கல்ச்சர்' (Cancel Culture) எனப்படும் பொதுவெளியில் பிரபலங்களை ஒதுக்கி வைக்கும் போக்கு, பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.

சில நகைச்சுவை கலைஞர்கள், நாம் புண்படுத்தி விட்டோம் என்ற அச்சமும், அதைத் தொடர்ந்து வரும் விளைவுகளும், தங்களின் நகைச்சுவையைக் கொல்வதாகக் கூறுகிறார்கள்.

ஆனால் நகைச்சுவை நடிகர்கள் தங்கள் "உணர்ச்சி நுண்ணறிவை" பயன்படுத்த வேண்டும் என்று எழுத்தாளரும் நகைச்சுவை கலைஞருமான மெரில் டேவிஸ் நினைக்கிறார்.

"தாம் ஒரு நகைச்சுவை கலைஞராக இருந்தால், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று பல நகைச்சுவை கலைஞர்கள் நினைக்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை," என்று அவர் தெரிவிக்கிறார்.

"ஓர் அறிவார்ந்த நகைச்சுவை கலைஞருக்கு பார்வையாளர்களை அறிவதற்கும், அந்த சூழ்நிலையை அறிவதற்கும் இடையே ஒரு நுட்பமான சமநிலை இருப்பதாக நான் நினைக்கிறேன்."

அவர் மேடையில் சில சிக்கல்களை கடந்திருந்தாலும், ஒருபோதும் தாக்கப்படவில்லை என்கிறார்.

"யாரேனும் ஒருவர் நாற்காலியில் இருந்து எழுந்து, என்னை நோக்கி வந்து என்னை ஏதாவது செய்தால், நான் மீண்டும் மேடை ஏற நீண்ட காலம் பிடிக்கும்," என்று அவர் தெரிவிக்கிறார். ஆனால், பணியில் யாரும் தாக்கப்படக்கூடாது என்று அவர் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :