ஜெய்பீம் பட சர்ச்சை: புண்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஞானவேல்

JaiBhimOnPrime,

பட மூலாதாரம், @2D_ENTPVTLTD

ஜெய்பீம் படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. வீட்டில் வன்னியர் சங்கத்தைக் குறிக்கும் அக்கினி கலச காலண்டர் இடம் பெற்றக் காட்சிக்கும், உண்மைக் கதைக்கு மாறாக அந்த எஸ்.ஐ. பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும் பாமக தரப்பில் எதிர்ப்புக் காட்டப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்தப் படத்தால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டரில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில்,

'உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வலிகளைப் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என விரும்பினேன். 1990-களில் ராஜாகண்ணு, விர்பலிங்கம் போன்ற பழங்குடிகள் மரணம், சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்த துயரம் என பல்வேறு அதிகார அத்துமீறல்கள் நடந்தன. இன்றுவரையிலும் அம்மக்களுக்கு சமூக பாதுகாப்பின்மையோடு அது தொடரவே செய்கின்றன.

எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கமும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து நீதிக்கான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய வழக்கில், காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து செயல்பட்டால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிக்கை வெளிச்சம் தருகிற வகையில் படமாக்கினோம்' என தெரிவித்துள்ளார்.

"ஜெய்பீம் திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் இருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம் ஒரு சமுதாயத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை .1995 காலத்தை பிரதிபலிப்பதுதான் அந்த காலண்டரின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு அறிக்கை:

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

யாரும் கேட்பதற்கு முன்பே அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன்.

இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்தை திரு. சூரியா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிஷ்டவசமானது. அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவம் திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இயக்குநர் ஞானவேல்
படக்குறிப்பு, இயக்குநர் ஞானவேல்

இதில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மனவருத்தம் அடைந்தவர்களுக்கும் புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் ஞானவேல்.

பின்னணி

1990களில் நடந்த உண்மைக் கதையில் குறவர் சாதியைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் திருட்டு வழக்கில் போலீசால் கைது செய்யப்பட்டு லாக் அப் கொடுமையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான எஸ்.ஐ. பெயர் அந்தோணிசாமி.

ஆனால், படத்தில் இந்த பாத்திரத்தின் பெயர் குருமூர்த்தி என்று மாற்றப்பட்டிருக்கும். அவரது வீட்டில் அவர் போனில் பேசும் காட்சியில் ஒரு காலண்டரில் வன்னியர் சங்க சின்னமான அக்கினி கலசம் இடம் பெற்றிருந்தது.

படம் வெளியான உடனே இந்த காலண்டர் காட்சி குறித்து சிலர் குறிப்பிட்டதும் படக்குழுவினர் இந்த காலண்டரை தொழில்நுட்ப உதவியோடு மாற்றிவிட்டனர்.

ஆனால், குருமூர்த்தி என்ற பெயரும், வேறு சில குறியீடுகளும் வன்னியர்களைக் குறிப்பதாக இருந்ததாகவும் எனவே, படக்குழுவினர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா அறிக்கை விட்டார்.

இந்த வழக்கில் நீதிக்காக போராடிய பலரும் வன்னியர்களாக இருக்கும்போது அவர்களை உண்மைக்கு மாறாக குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையில் படம் அமைந்திருந்ததாக பாமக தரப்பில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். எனவே, ரூ.5 கோடி இழப்பீடு கோரி பாமக தரப்பில் நோட்டீசும் விடப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் கதை வசனத்தை வட தமிழக வட்டார வழக்குக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்ட எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தம் எழுத்துகளை வைத்தே தமது சாதியை சிறுமைப்படுத்திவிட்டதாகவும், படத்தின் பெயர் எலிவேட்டை என்று காட்டியே தம்மிடம் இந்தப் பணியை பெற்றதாகவும் கூறி அறிக்கை விட்டார். அத்துடன், இந்தப் பணிக்காக தமக்கு வழங்கப்பட்ட ரூ.50 ஆயிரம் பணத்தை படக்குழுவுக்கு காசோலையாக திருப்பி அனுப்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த சர்ச்சையை ஒட்டி திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் எதிரும்புதிருமாக பல கருத்துகள் வெளியாகிவந்த நிலையில் தற்போது ஞானவேல் தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :