ஜெய் பீம்: நடிகர் சந்தானத்தின் கருத்தால் டிவிட்டரில் ட்ரெண்டாகும் எதிர்ப்பு ஹேஷ்டேக்

சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைக் குறிக்கும் சின்னம் இடம்பெற்றது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து பெரிதாகி வருகிறது. தற்போது நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து அமெசான் ப்ரைமில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் குருமூர்த்தி என்ற காவலரின் வீட்டில் வன்னியர்களின் சின்னமான 'அக்னிகும்பம்' இடம்பெற்ற நாட்காட்டி சுவற்றில் தொங்குவதைப் போன்ற காட்சி இடம்பெற்றது.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும் பிற வன்னியர் அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, கடவுளின் படம் உள்ள நாட்காட்டி அங்கு உள்ளதைப் போல மாற்றப்பட்டது.

இருந்தபோதும் சூர்யாவும் படக்குழுவினரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லாவிட்டால் 5 கோடி ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டுமெனக் கோரி சூர்யாவுக்கு வழக்கறிஞர் கே. பாலு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், இதற்குப் பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதற்கிடையில் பா.ம.கவின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி சூர்யாவைத் தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும் என பேட்டியளித்தது நிலைமையை இன்னும் சூடாக்கியது.

இந்த விவகாரத்தில் சூர்யா மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக #IStandwithSurya என்ற ஹேஷ்டாகின் கீழ், சூர்யாவுக்கு ஆதரவாக கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவாக ஆரம்பித்தன.

திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் வெற்றி மாறன், பாரதிராஜா, கருணாஸ், சத்யராஜ் போனறோர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று அவர் நடித்து வெளிவரவுள்ள சபாபதி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் சந்தானம், இது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரிடம் செய்தியாளர்கள், "#IStandwithSurya என ட்விட்டரில் ட்ரண்ட் ஆகிறதே, பார்த்தீர்களா?" என கேட்டபோது, நான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக மும்முரமாக இருந்ததால் பார்க்கவில்லை என பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜெய்பீம் தொடர்பான சர்ச்சை குறித்து நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சந்தானம், "எதை வேண்டுமானாலும் உயர்த்திப் பேசுங்க. இன்னொருத்தரைத் தாழ்த்திப் பேச வேண்டாம். முழுப் படத்தையும் பார்க்காமல் பேசுவது தவறு. முழு படத்தையும் பார்த்துவிட்டு பேசுவதுதான் சரியான முறை. விமர்சனம் செய்யலாம் குறைகளைக் கேட்கலாம். தவறு என்றால் சரி செய்து கொள்ள வேண்டும்.

எல்லா ஜாதி மக்களும்தான் ஒன்றாகப் படம் பார்க்கிறார்கள். இதைக் கொஞ்சம் தவிர்க்கலாம். யாரை வேண்டுமானலும் உயர்த்திப் பேசலாம். மற்றவர்களைத் தாழ்த்திப் பேசக்கூடாது. ஜாதி, மதம் ஆகியவற்றைக் கடந்து எல்லோருக்கும் உரிய படமாகத்தான் இருக்க வேண்டும்" என்றார்.

அவர் இப்படிப் பேசியதையடுத்து, ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் கூடிய ஹேஷ்டேக்கை செவ்வாய்க்கிழமை மாலை முதல் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர். சில, சந்தானத்தின் ரசிகர்கள் #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பார்வதிக்கு 15 லட்ச ரூபாய் நிதி

இதற்கிடையில், ஜெய் பீம் திரைப்படத்தில் கொல்லப்பட்டவராகக் காட்டப்படும் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு வைப்புத் தொகையாக ரூ. 15 லட்சத்தை சூர்யா வழங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் முன்னிலையில் இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது.

நடிகர் சூர்யாவைத் தாக்கினால் ஒரு லட்ச ரூபாய் பரிசு என அறிவித்த பா.ம.க. நிர்வாகி சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :