You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இயக்குநர் லிங்குசாமி பேட்டி; 'நடிகர் விஜய்க்கு சொன்ன கதை விஷாலுக்கு போனது ஏன்?'
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
'ஆனந்தம்', 'ரன்', 'சண்டைக்கோழி', 'பையா' என தமிழ் சினிமாவில் இயக்குநர் லிங்குசாமியின் படங்களுக்கு என தனி ரசிகர்கள் உண்டு.
'சண்டைக்கோழி2'க்கு பிறகு தற்போது தெலுங்கு, தமிழ் என இருமொழிகளிலும் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தில் பிஸி. அவரது பிறந்த நாள் நவம்பர் 14ஆம் தேதி வருவதையொட்டி, ஒரு காலைப்பொழுதில் லிங்குசாமியை அவரது அலுவலகத்தில் பிபிசி தமிழுக்காக சந்தித்தோம்.
'நீண்ட நாள் கழித்து பேட்டி கொடுக்கிறேன்' என்றவர் தன்னுடைய முதல் படத்தில் ஆரம்பித்து தற்போது இயக்கும் படம், இடையில் தன் சினிமா பயணத்தில் சந்தித்த சவால்கள், கொரோனா காலத்தில் இயக்குநர் வசந்த பாலனுக்கு நேரில் சந்தித்து கொடுத்த ஆறுதலுக்கு பின்னுள்ள நட்பு என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இனி பேட்டி:
வசந்தபாலனை கொரோனா காலத்தில் சந்தித்த போது இருந்த மனநிலை என்ன?
"வசந்தபாலனும் நானும் அறைத்தோழர்கள். சாலிகிராமத்தில், 18, சாரதாம்பாள் தெருவில் ஒரே அறையில் நான், வசந்தபாலன், பிருந்தா சாரதி, நந்தா பெரியசாமி என நாங்கள் பெரிய வட்டமாக வாழ்ந்தோம். இவர்களில் பெரும்பாலானோர் இப்போது இயக்குநர்கள். என்னை உதவி இயக்குநராக சேர்த்து விட்டது வசந்தபாலன்தான். என் வாழ்க்கையில் இருந்து வசந்தபாலனை பிரிக்கவே முடியாது. அந்த அளவிற்கு எனக்கு முக்கியமான நண்பர் அவர்.
விடிய, விடிய சாலிகிராம சாலையில் நிறைய கனவுகளோடு கதை பேசுவோம். 'ஒரே நேரத்தில் உன் படமும், என் படமும் தியேட்டரில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்குடா' என பேசியிருக்கிறோம். 1996இல் அது உலக கோப்பை கிரிக்கெட் சமயம். எல்லோரும் கிரிக்கெட் பார்த்து கொண்டிருக்கும்போது நாங்கள் இங்கு தனியாக, அடுத்த உலக கோப்பை நடக்கும்போது நாம் அனைவரும் இயக்குநர்கள் ஆகி இருப்போம்' என பேசியது எல்லாமே வாழ்வில் அடுத்த கட்டமான விஷயம் மட்டும்தான்.
அவரிடம் பேசும்போது தனி ஒரு உற்சாகம் கிடைக்கும். வாடகை கூட கொடுக்க முடியாத பல சந்தர்ப்பங்களில் அந்த அறையில் தங்கியிருக்கிறோம். நாங்கள் எல்லாம் அப்போது வேலை இல்லாமல் இருந்த சமயத்தில் அவர் குஞ்சுமோன் அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் ஆக இருந்தார். அதனால், அப்போது அவரிடம் கை நிறைய பணம் இருக்கும். அவருக்கு எந்த பழக்கமும் இருக்காது. எங்களுக்கு எல்லா பழக்கமும் இருக்கும். அந்த அறைக்கு நாங்கள் வாடகை கொடுக்கவில்லை என்றால் வீட்டு உரிமையாளர் இன்னொரு பூட்டு எடுத்து பூட்டி விடுவார். அப்போது எல்லாம் பாலன் வேலை செய்த குஞ்சுமோன் அலுவலக மாடியில் சென்றுதான் படுப்போம். இப்படி வாழ்க்கை முழுவதும் பாலன் எனக்கும் முக்கியமான நண்பர்.
அப்படி இருக்கும்போது, பாலனுக்கு இப்படி ஒரு விஷயம் என சொன்னவுடனே எனக்கு அவரை பார்க்க வேண்டும் என தோன்றியது. கூடவே இன்னொரு நண்பர் சந்தோஷையும் அழைத்துக் கொண்டு அவரை நேரில் பார்த்தேன். முதலில் டாக்டரைதான் பார்க்க நினைத்தோம். பிறகு, திடீரென பாலனையும் போய் பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டபோது, அனுமதித்தார்கள். அவரை பார்த்ததும், அந்த அன்பில் எனக்கு எந்த ஒரு அபாயமும் நினைக்க தோன்றவில்லை. அவரை பார்த்து பேசிவிட்டு வந்தேன்.
குணமாகி வந்ததும், 'நீ கண்டிப்பா வருவேன்னு தெரியும்டா' என சிரித்தார். அவர் என்றில்லை. என்னுடைய நண்பர்கள் யார் என்றாலும் நின்றிருப்பேன். பாலன் என்றதும் அது சற்று கூடுதலாக அமைந்து விட்டது" என்றவரிடம் வசந்தபாலன் குணமாகி வந்ததும் லிங்குசாமிக்கு எழுதிய கடிதம் ஒன்று நெகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அது குறித்து கேட்டேன்,
"பாலனுடைய எழுத்து மிகவும் அருமையாக இருக்கும். எதிர்காலத்தில் ஜெயமோகன், எஸ்.ரா. போல பாலனும் பெரிய எழுத்தாளராகவும் வருவான் என தோன்றும். பார்த்துவிட்டு வந்ததும், அது குறித்து பாலன் எழுதியதை பார்த்து நிறைய பேர் என்னிடம் தொலைபேசியில் பேசியிருந்தார்கள். எனக்கும் நெகிழ்வாகதான் இருந்தது".
உங்களுடைய முதல் படமான 'ஆனந்தம்' உங்கள் குடும்பக்கதை. இதில் உங்களுடைய கதாபாத்திரம் திரையில் எது? முதல் படத்திலேயே மம்முட்டி போன்ற பெரிய நடிகரை நடிக்க சம்மதிக்க வைத்தது எப்படி?
'ஆனந்தம்' படத்தின் திரைக்கதை எழுதும்போது மம்முட்டி எனதான் முடிவு செய்தோம். ஆனால், படத்தின் வர்த்தக காரணங்களுக்காக சரத்குமார், விஜயகாந்த் போன்றவர்களையும் நடிக்க வைக்கலாம் என யோசனை கூறப்பட்டது. இருப்பினும், நான் மம்முட்டியை நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். என் குடும்பத்தில் நடந்த கதை என்பதால், இத்தனை பேரை வைத்து படம் செய்கிறேன் என்ற பயம் அப்போது இல்லை. படம் செய்யும் போதும் பெரிய அண்ணாவை கூப்பிடுங்கள், சின்ன அண்ணாவை கூப்பிடுங்கள் என்றுதான் அப்போது வேலை செய்தோம்.
'எப்படி இத்தனை பேரை வைத்து படம் செய்தது சாத்தியமாயிற்று?' என பலர் இப்போது கேட்கும்போதுதான் எனக்கே, 'பெரிய வேலைதான் போலிருக்கிறது' என தோன்றுகிறது. இதில் அப்பாஸ் கதாபாத்திரம் என்னுடையது".
'ரன்' படத்தில் விவேக்கின் காமெடி ட்ராக் இப்போது வரை ரசிக்கப்படுகிறது. விவேக் நடித்த பாத்திரம் யாரைப் பார்த்து வந்தது?
"இயக்குநர் மணிரத்தினம் போலவே, ராம்கோபால் வர்மா படங்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. அவருடைய படங்களில் வருவதை போலவே காதல், சண்டை என ஒரு ஸ்டைலிஷ் ஆன படம் உருவாக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதில் நான் காமெடி ட்ராக் என்ற விஷயத்தை நினைத்து பார்க்கவே இல்லை. ரத்தினம் சாரிடம் கதை சொல்லி முடித்ததுமே, 'கதை மிக நன்றாக இருக்கிறது. இது இன்னும் நன்றாக இருக்க ஒரே ஒரு விஷயம் இருந்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே, நம் கம்பெனியில் விவேக் இரண்டு, மூன்று படங்கள் நடிக்கிறார். உங்களுடைய இந்த படத்திற்கும் சேர்த்து அவரை புக் செய்கிறேன். அவரை வைத்து காமெடி ட்ராக் பண்ணுங்கள் என்றார். முன்பு 'ஆனந்தம்' படத்தில் செளத்ரி சார் தினமும் என்னை கூப்பிட்டு, காமெடி வைக்க சொல்லி சொல்வார்.
அப்போது, காமெடி ட்ராக்குகள் படத்தில் இருந்து தனியாக இருந்த சமயம். குடும்ப கதை, படம் நேர்த்தியாக செல்கிறது என்பதால், அந்த தன்மையில் இருந்து காமெடியால் கதை தனியாக தெரிய கூடாது என்பதால் 'வேண்டாம்' என அவரை பார்த்தாலே ஓடுவேன். அடுத்த படத்துக்கும் தயாரிப்பாளர் காமெடி ட்ராக் என சொன்னதும், 'சரி யோசிப்போம்' என இரண்டு நாளில் பிடித்ததுதான் விவேக் காமெடி. பிறகு, ரைட்டர் பிரசன்னா, விவேக்குடன் இருந்த செல்முருகன் என இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வசனம் எழுதி ட்ராக்கை உருவாக்கினோம். படப்பிடிப்பு தளத்தில் நிறைய காட்சிகள். அப்போது உருவாக்கினோம். ஒரு நாளில் ஏழு காட்சிகள் என்ற அளவில் கூட பணியாற்றி உள்ளோம்.
வாகினி ஸ்டுடியோஸ்ஸில் செட் அமைத்து மூன்றே நாட்களில் மொத்த நகைச்சுவை காட்சிகளையும் எடுத்து முடித்தோம். அந்த படத்தில் காமெடி, ஆக்ஷன், காதல், பாடல் என எல்லாமே உச்சமாக இருந்தது. அமைந்து வந்தது என சொல்வார்கள் இல்லையா? அது இந்த படத்தில் நடந்தது".
'சண்டக்கோழி' படம்தான் முதன் முதலில் விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்திய படம். அவரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்தது எப்படி?
"'சண்டக்கோழி' படத்தின் கதை ஏற்கனவே முடித்தாயிற்று. விஷாலுக்கென்று தனியாக எழுதவில்லை. கதையை அப்போது நடிகர் விஜயிடம் சொல்லியிருந்தேன். பிறகு வேறு யாரை அணுகலாம் என யோசித்தபோது, விஷால் கம்பெனியில் முதல் படம் பண்ணியிருந்தேன். அதனால், அப்போது என்னை சந்தித்து ஒரு படம் செய்யலாம் என என்னிடம் கேட்டார்கள். விஷால் போன்று அப்போது புதிய ஒருவர் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கதைக்குள் வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன்.
ஆனால், விஷாலுடன் படம் செய்ய வேண்டும் என நான் முடிவு செய்தபோது யாரும் ஒத்துக்கொள்ளவே இல்லை. புதுமுக நடிகர் வைத்து நல்ல ஒரு ஆக்ஷன் கதை என்பதால் அந்த பயம் என்னுடன் இருந்தவர்களுக்கு இருந்தது. இதை எல்லாம் தாண்டி நான் விஷாலுடன் படம் செய்கிறேன் என சொல்லிவிட்டேன். அவரும் அதை நம்பி, வேறு எந்த படமும் ஒத்துக் கொள்ளாமல் காத்திருந்தார்.
அந்த சமயத்தில் அஜீத்தை வைத்து 'ஜீ' என்றொரு படம் இயக்கி கொண்டிருந்தேன். அது இரண்டு, மூன்று வருடங்கள் போய்க் கொண்டிருந்தது. அதுவரை விஷால் காத்திருந்தார். அந்த நம்பிக்கையும் சேர்த்து அவருடன் படம் செய்ய வைத்தது. படமும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி பெற்றது. இப்போது நான் தெலுங்கு பக்கம் சென்றாலும், 'பந்தங்கோழி' இயக்குநர் என்றால் பார்க்க மக்கள் வந்துவிடுவார்கள் 'ரன்', 'சண்டக்கோழி', 'பையா' இந்த படங்கள் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்து அங்கும் வெற்றியடைந்தன".
'சண்டக்கோழி' படத்தில் மீரா ஜாஸ்மின் கதாபாத்திரம் ரசிக்கப்பட்டதே. அவருக்கென மாற்றங்கள் எதும் செய்தீர்களா?
"மீரா ஜாஸ்மின் அப்போது வளர்ந்துகொண்டிருந்த கதாநாயகிதான். ஆனால், ஏற்கனவே அவருடன் 'ரன்' படத்தில் வேலை பார்த்து விட்டதால் மீண்டும் அவருடன் வேலை பார்க்காமல், புதிதாக யாரையாவது கொண்டு வரலாம் என்ற எண்ணம்தான் அப்போது இருந்தது. 'அடுத்து என்ன படம்?' என மீரா ஜாஸ்மின் என்னிடம் எதேச்சையாக கதை கேட்டுவிட்டு, 'ஏன் இதை நான் செய்ய கூடாது?' என கேட்க 'சரி' என்றேன்.
முன்பு யார் தெரியுமா கதாநாயகி இந்த படத்திற்கு? தீபிகா படுகோனே! அவர் அப்போது கன்னடத்தில் 'கஜினி' படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாம்பேயில் அடுத்த கதைகள் செய்வதற்கான வேலைகளில் இருந்தார். அவரை பார்க்க, நானும் விஷாலும் மும்பை சென்றோம்.
அவருடைய மேனேஜர் கதை கேட்டார். கதை அவருக்கு பிடித்து போய் நடிக்க சம்மதம் சொன்னார். ஆனால், அவர் கேட்ட சம்பளம் பெரியது. அதனால், வேறு கதாநாயகி தேடிக்கொண்டிருந்த நிலையில், பின்பு மீரா ஜாஸ்மின் உள்ளே வந்தார். இப்போது படம் பார்க்கும்போது மீராவை தவிர வேறு யாரும் அந்த கதாபாத்திரம் செய்திருக்க முடியாது எனும் அளவிற்கு நடித்திருக்கிறார்".
'பையா' படத்தின் பாடல்கள் வெளிவந்த சமயத்தில் பல விருதுகளை பெற்றது. உங்களுடைய முந்தைய கதைகளிலும் பாடல்கள் பல ரசிக்கப்பட்டன. கதையின் போக்கில் பாடல்கள் அமைவதுதானா அல்லது இதற்கென தனி மெனக்கெடல்கள் உண்டா?
"இரண்டுமேதான். முழு மனதோடு அந்த நேரத்தில் எங்களுக்கு கிடைக்கும் உற்சாகம்தான் பாடல்கள். படத்தின் கதை, இசையமைப்பாளருடைய அந்த மனநிலை இதெல்லாம் சேர்ந்துதான் என் பட பாடல்களின் வெற்றிக்கு காரணம். கவிதைகள் ரசிக்கும் தன்மை எனக்கு இருப்பதால், அதற்கேற்ப கவிதை நண்பர்களும் கிடைத்தார்கள்.
மற்றபடி, யுவனுடன் சேர்ந்து பாடல்கள் வேலை செய்யும் போது அந்த பாடல் சூழ்நிலையை அழகாக அவருக்கு விளக்கினால் போதுமானது. இதற்காக மூன்று, நான்கு நாட்கள் எல்லாம் எடுத்து கொள்ள மாட்டார். சூழ்நிலை கேட்டதும் உடனே அவருக்கு ஒன்று தோன்றும். என் மீது அவருக்கு எப்போதும் தனிப்பிரியம் உண்டு. மற்ற வேலைகள் இருந்தாலும் நான் வந்து பாடல் என்று கேட்டால் உடனே நேரம் ஒதுக்கி செய்து தருவார்.
அதிலும் குறிப்பாக, 'பையா' பட பாடல்கள் ஓடும் நேரம் அளவுதான் நாங்கள் பாடல் உருவாக்க எடுத்திருக்கும் நேரமும் இருக்கும். அந்த அளவுக்கு நேரம் எடுக்காமல் சீக்கிரம் முடித்தோம்".
"கதை நிறைய இருக்கும்போது கதையில் இருந்து பாடல்கள் பிதுங்கி தனியாக தெரியும். அதுவே, எளிதான ஒரு கதை இருக்கும் போது அதில் பாடல்கள் உள்ளே போக அதிக வாய்ப்புகள் உண்டு. அதுதான் 'பையா'வில் நடந்தது. 'பியார் பிரேமா காதல்' படம் பண்ணும்போது 'பையா' படத்தைதான் முன்மாதிரியாக எடுத்து கொண்டதாக யுவனும், அந்த படத்தின் இயக்குநரும் சொன்னார்கள்.
அதேபோல, செல்வராகவன் யுவனை சந்திக்கும்போது 'எனக்கு தர வேண்டிய பாடல்களை எல்லாம் லிங்குசாமிக்கு கொடுத்து விட்டீர்கள்' என்பார் சிரித்து கொண்டே. 'பையா' பட பாடல்கள் வெற்றிக்கு இன்னுமொரு முக்கிய காரணம் நா. முத்துக்குமார். அவர் இசையமைக்கவில்லையே தவிர யுவன் கையை பிடித்து, 'இப்படி திருப்பி விடலாம்' என சொல்லி அவர் ஒரு இசை சொல்வார். அந்த தகுதியும் முத்துக்குமாருக்கு உண்டு. யுவனுக்கும் சரி என்று தோன்றினால் உடனே ஒத்துக்கொள்வார்".
'ஆனந்தம்' டூ 'சண்டக்கோழி - 2' வரை உங்களுடைய படங்களை நீங்களே மதிப்பீடு செய்வீர்களா?
"ஆரம்பத்தில் அது குறித்து யோசித்து இருக்கிறேன். ஆனால், இப்போது அதிகம் இல்லை. முன்பே சொன்னது போல, அந்த பட ஆட்கள் நமக்கென்று அமைவது, அந்த நேரத்து மனநிலை இதெல்லாமே மிக முக்கியம். உதவி இயக்குநர் ஒருவர் சரியாக இல்லை என்றால் கூட படத்தில் எதாவது ஒன்று குறையாக போக வாய்ப்பு உண்டு. இதுவரை நான் கதையாக எந்த படமும் செய்ததில்லை. காட்சி, அந்த நேர மனநிலை, திரைக்கதை என இப்படிதான் வேலை பார்த்திருக்கிறேன்.
ஆனால், இப்போது வேலை பார்க்கும் படத்தில் திரைக்கதையிலும் வேலை பார்த்து எடுத்திருக்கிறேன். இப்போதுதான் சினிமாவே கற்று கொண்டது போல உணர்கிறேன். அதனால், எப்போதும் 100% சினிமாவை கற்று விட்டேன் என்று சொல்ல முடியாது. சமீபத்தில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தை சந்தித்த போது, நடிகர் சிரஞ்சீவி சொன்ன ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். சிரஞ்சீவி ஒரு முறை நேர்த்தியாக ஆட வேண்டும் என தினமும் இரவு பகல் என நடனம் பயிற்சி செய்தாராம். அப்படி பயிற்சி எடுத்து நடனம் ஆடிக்கொண்டிருந்த போது அங்கு வந்து அவரது நடனத்தை பார்த்த ஒரு பெரிய தயாரிப்பாளர் 'டான்சருக்கும் உனக்கும் என்னய்யா வித்தியாசம்' என சொல்லி விட்டு போய்விட்டாராம். அதற்கு பிறகுதான் சிரஞ்சீவிக்கு கதாநாயகனாக நடனத்தில் தனித்து தெரிய தனக்கென தனி ஒரு ஸ்டைல் உருவாக்க வேண்டும் என அவருடைய 100வது படத்தில் அவருக்கு தோன்றியது.
அதனால், சினிமாவில் இருக்கும்போது கற்று கொண்டே இருக்க நிறைய இருக்கிறது. என்னுடைய படம் ஒன்று சரியாக போகாதபோது, மனோபாலா என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயம் இது. 'டேய், பாரதிராஜாவிடம் நீங்கள் முன்பு செய்த படங்களையே மீண்டும் ஒருமுறை பாருங்கள். நம்பிக்கை கிடைக்கும்' என சொல்வேன். அதுவேதான் உனக்கும்' என்பார். ஆனால், மீண்டும் அதை பார்ப்பது என்பது எனக்கு சலிப்பானது. ஏனெனில் மணிரத்தினம் அடிக்கடி ஒன்று சொல்வார். 'அதெல்லாம் முடிந்துவிட்டது. அடுத்து என்ன? எல்லாம் புதிதாக வந்துவிட்டார்கள்' என்பார். இந்த இரண்டு மனநிலையிலும் இருப்பேன்".
விஷால், மாதவன் என அப்போது வளர்ந்து வரக்கூடிய கதாநாயகர்களை வைத்து நீங்கள் செய்த படங்கள் பேசப்பட்டது. இதுவே, அஜீத், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களை வைத்து நீங்கள் செய்த படங்கள் பேசப்படாமல் போயின. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
"அதிக அளவிலான எதிர்ப்பார்ப்புதான். 'பீமா', 'ஜீ' படங்களில் நடந்த தவறு சரியான நேரத்தில் அந்த படம் வெளிவராதது. நான் நினைத்த நேரத்தில் நடக்கவில்லை. திரைக்கதையில் நான் நினைத்த நேரமும் படப்பிடிப்பும் ஒரே வேகத்தில் நடக்க வேண்டும். அது இல்லை என்றால் எல்லாமும் மாறும். நினைத்தோமா எடுத்தோமா என்று இருக்க வேண்டும். அந்த மனநிலையும் வேண்டும். கதையிலும் சில தவறுகள் இருந்தது என்பது உண்மைதான். 'பீமா'வின் க்ளைமேக்ஸ்ஸில் நம்மிடம் வேறு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
நாமும் சாதாரண ரசிகர்கள்தானே. சில நேரங்களில் தவறு நடக்கும். சில நேரங்களில் சரியாக போகும். எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பேற்க முடியாது. ஓரளவு ஏற்று கொள்ளலாம். பொறுப்பை தட்டி கழிக்கவில்லை. அடுத்த கட்டத்தில் சரி செய்து கொள்ளலாம்".
ஹீரோக்களுக்கான கதை, சினிமாவுக்கான கமர்ஷியல் விஷயங்கள் என வழக்கமான தன் பாணியில் இருந்து தற்போதைய தமிழ் சினிமா சற்று விலகியிருப்பதை கவனித்து வருகிறீர்களா? அப்படி சமீபத்திய இயக்குநர்களின் வரவில் உங்களை ஈர்த்தவர் யார்? எந்த படம்?
"சமீபத்தில் பார்த்த படங்களில் '96', 'ராட்சசன்', லோகேஷின் 'கைதி', 'மாநகரம்', 'மாஸ்டர்' படங்களும் பிடிக்கும். 'பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரிசெல்வராஜ் போல நிறைய பேர் புதிதாக வந்திருக்கிறார்கள். எப்போதும் யாரும் புதிதாக முற்றிலும் மாற்றிப்போட்டார்கள் என்பதை நான் நம்பவே மாட்டேன். புதிதாக மாற்றி போட்டதாக சொல்லப்படும் சினிமாக்கள் ஒரு பக்கம், வழக்கமான சினிமாக்கள் ஒரு பக்கம் என எல்லா காலத்திலும் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
தற்போது பார்த்த 'டாக்டர்' படம் நன்றாக இருக்கிறது. அது கமர்ஷியல் படம்தான். அதனால், நீங்கள் கேட்கும் மாற்றம் பெரிதாக இல்லை. அதே சமயம் ஓடிடி ஒரு புது புரட்சியை செய்திருக்கிறது என்பதை ஒப்பு கொள்ளதான் வேண்டும். இதையெல்லாம் தாண்டி நமக்கென்று ஒரு அடிப்படை சினிமா ரசனை இருக்கிறது அல்லவா? அதனை மெருகேற்றி கொள்ளலாம். அதை விட்டுவிட்டு 'நான் எடுப்பதுதான் சினிமா. நான் எல்லாம் கற்று கொண்டு விட்டேன்' என நினைத்தால் அங்குதான் நாம் பின்னோக்கி செல்கிறோம் என்று பொருள்".
'அஞ்சான்' பட தோல்வி தந்த அழுத்தத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்? பிறகு அடுத்த படத்திற்கு ஏன் அவ்வளவு இடைவெளி?
"உலகம் முழுவதும் எவ்வளவு பெரிய தத்துவங்கள், வார்த்தைகள் படித்திருந்தாலும், பேசியிருந்தாலும் நமக்கென்று அடிவிழும்போது வலிக்கதானே செய்யும். எழுந்து நடக்க சிறிது நாட்கள் ஆகும். அதுபோல, எனக்கும் அதில் இருந்து வெளியே வர நேரம் எடுத்தது. அடுத்த கட்ட வேலைகளில் கூட மனம் செல்லாமல் தள்ளித் தள்ளி போனது. ஆனால், வேறு வழியில்லை. இங்கு எல்லாவற்றையும் சந்தித்துதான் ஆக வேண்டும்.
அந்த சமயத்தில் நம்மை மிகப்பிடித்தவர் கூட எந்த உதவியும் செய்ய முடியாமல், நம்மோடு வந்தால், அவர்களுக்கும் சிக்கலாகும் வாய்ப்பு இருந்தது. இதில் அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. சில நேரங்களில் நாம் செய்வது மக்களுக்கு பிடித்து போகிறது, சில நேரங்களில் அது நடக்காமல் போகிறது. தோல்வியை சந்திக்காத இயக்குநர்களே இருக்க முடியாது. இப்போது தத்துவம் போல பேசி கொண்டிருக்கிறேன். என்னுடைய குடும்பம் வரைக்குமே அந்த தோல்வி தந்த வலி இருந்தது. ஆனால், இப்போது அதில் இருந்து மீண்டு வந்தாகி விட்டது.
அந்த நேரத்தில் என் மீது எதிர்ப்பார்ப்பும், அக்கறையும் வைத்து விமர்சனங்கள் சொன்னவர்களை வரவேற்கிறேன். ஆனால், வேண்டும் என்றே செய்தவர்களை ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அந்த காலக்கட்டத்தில் நான் சிக்கிவிட்டேன். ஆனால், எப்போதாவது மனதின் ஓரத்தில் லேசாக இருக்கும். பார்ப்போம்".
உங்களுடைய முந்தைய படங்கள் பலவும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டன. இப்போது நீங்களே நேரடியாக தெலுங்கில் படம் (ராம் பொத்தினேனி19) இயக்க முடிவு செய்ததன் காரணம்?
"இந்த தெலுங்கு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுத்து வருகிறேன். இது நேரடி தெலுங்கு, ராம் பொத்தினேனியை தமிழில் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறோம். நான் 'ரன்' செய்த சமயத்திலேயே தெலுங்கில் வெங்கடேஷ், பிரபாஸ், மகேஷ் என பல கதாநாயகர்களுடனும் சந்திப்பு நடத்தி இருக்கிறேன். 'ரன்' சமயத்தில் ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருப்பேன். கடைசியாக அல்லு அர்ஜுன் உடன் நடக்க இருந்த படம் கூட தள்ளிப்போனது.
ஆனால், ராம் பொத்தினேனி சரியான நேரத்தில் அமைந்தது. நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே செய்கிறார். மாதவன் உடன் வேலை பார்த்த போது ஒரு எனர்ஜி, ஒரு திருப்தியான மனநிலை இருந்தது. அதை ராமிடமும் பார்க்கிறேன்".
தயாரிப்பாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் (தீபாவளி, வழக்கு எண் 18/9, உத்தமவில்லன், கும்கி...) இயக்குநராக நீங்கள் இயக்கும் படங்களும் எதிரான திசையில் இருக்கின்றனவே?
"நான் இயக்குநராக படம் பண்ணும் போது, என்னுடைய பட்ஜெட் என்பது நான் பார்க்கும் படங்கள், ரசனை இதைப் பொறுத்து அமையும். 'பூவே பூச்சூடவா' படமும் பார்ப்பேன், 'பில்லா'வும் பார்ப்பேன். இயக்குநராக நான் எடுக்கும் படங்களுக்கும், தயாரிப்பாளராக நான் தேர்ந்தெடுக்கும் படங்களுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருக்கும். கமர்ஷியல் படங்கள் எடுப்பதும், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எடுப்பதும் எளிதல்ல.
தெரிந்தோ தெரியாமலோ நமக்கே தெரியாமல் ஒரு கமர்ஷியல் டச் இருக்கும். 'கோலிசோடா', 'சதுரங்கவேட்டை' படங்கள் என்னுடைய ரசனையை ஒத்த அலைவரிசையில் இருக்கும். அதனால்தான் அந்த படங்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது" என்றவரிடம் தயாரிப்பாளராக எந்த கதை கேட்டதும் மிகப்பிடித்தது என்றால் 'கும்கி'யை குறிப்பிடுகிறார். "தலைப்பே புதிதாக இருக்கிறதே என கேட்டால், படம் வெளியானதும் யானையையே 'கும்கி' என்றுதான் அழைப்பார்கள் என பிரபு சாலமன் நம்பிக்கையாக சொன்னார். அதேபோல குழந்தைகள் யானையை 'கும்கி' என அழைத்ததை நேரில் பார்த்தேன். 'கோலிசோடா', 'காக்கா முட்டை' எல்லாம் அப்படிதான்".
அடுத்த தமிழ்ப்படம் எப்போது?
"தெலுங்கில் இந்த படத்தை முடித்ததும் மேலும் அங்கு சில படங்களை இயக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. இடையில் தமிழ் படமும் 'ராம் பொத்தினேனி19' படத்துக்கு பிறகு நடக்கலாம்" என்கிறார் சிரித்து கொண்டே.
பிற செய்திகள்:
- பருவநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாடு தொடர்பாக சமரசம் - என்னதான் சாதிக்கும் இந்த மாநாடு?
- இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
- விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி
- கிராம மக்களே களமிறங்கி தூர் வாரிய கால்வாய்: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய்
- அண்டார்டிகா பென்குயின்: 3,000 கிலோமீட்டர் பயணித்து வந்தது ஏன்? கடல் சூழலில் மாற்றம் காரணமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்