You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டன் சிறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதி
பிரிட்டனின் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் ஜூலியன் அசாஞ்ச் தனது காதலி ஸ்டெல்லா மோரிஸை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர், ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோருக்கு ஏற்கெனவே இரண்டு மகன்கள் உள்ளனர், அசாஞ்ச் லண்டனின் எக்வடோர் தூதரகத்தில் இருந்தபோது தான் கருத்தரித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான அசாஞ்சின் விண்ணப்பம் "சிறை நிர்வாகியால் வழக்கமான முறையில் பரிசீலிக்கப்பட்டது" என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிஏ என்ற செய்தி முகமையிடம் பேசிய மோரிஸ், "திருமணத்துக்கான காரணம் ஏற்கப்பட்டதால் நிம்மதியாக உணர்கிறேன்," என்று கூறினார். மேலும், "எங்கள் திருமணத்தில் இனி எந்த இடையூறும் ஏற்படாது என்று நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் திருமணச் சட்டம் 1983-இன் கீழ் சிறையில் திருமணம் செய்து கொள்ள கைதிகள் விண்ணப்பிக்க உரிமை. உண்டு மேலும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டால், வரி செலுத்துவோரின் உதவியின்றி திருமணத்திற்கான முழுச் செலவையும் அவர்களே எதிர்கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டு மெயில் ஊடகத்துக்கு, தென்னாப்பிரிக்காவில் பிறந்த வழக்கறிஞரான ஸ்டெல்லா மோரிஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் 2015ஆம் ஆண்டு முதல் அசாஞ்சுடன் உறவில் இருந்ததாகவும், தங்களுடைய இரண்டு இளம் மகன்களை தானே வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸின் யூடியூப் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், 2011இல் அசாஞ்சின் சட்டக் குழுவில் சேர்ந்தபோது அவரைச் சந்தித்ததாகவும் ஸ்டெல்லா கூறினார்.
"கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அசாஞ்சை தூதரகத்தில் சந்தித்தேன். அவரை நன்றாகத் தெரிந்து கொண்டேன்," என்றும் ஸ்டெல்லா குறிப்பிட்டார்.
2015இல் காதலித்த இந்த ஜோடி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.
தங்களுடைய இரண்டு ஆண் குழந்தைகள் பிறப்பதை காணொளி இணைப்பு மூலம் அசாஞ்ச் பார்த்ததாகவும், பிள்ளைகளும் தங்களுடைய தந்தையை தூதரகத்தில் சந்தித்ததாகவும் ஸ்டெல்லா அந்த பேட்டியின்போது தெரிவித்திருந்தார்.
50 வயதாகும் அசாஞ்ச், உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர்கள் தொடர்பான லட்சக்கணக்காக கசிந்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு தகவலைப் பெற்று வெளியிட்டு சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூலியன் அசாஞ்ச், அமெரிக்காவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இராக்கில் 2010ஆம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்க படையினர் ஹெலிகாப்டரில் இருந்தபடி பொதுமக்களை சுட்டுக் கொன்றதைக் காட்டும் காட்சிகள் உள்ளிட்ட காணொளிகள் விக்கிலீக்ஸ் கசியவிட்ட ஆவணங்களில் அடங்கும்.
ஆஸ்திரேலியரான அசாஞ்ச், லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்திலிருந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக கைதாகி 2019ஆம் ஆண்டு முதல் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வருகிறார்.
2012ஆம் ஆண்டு முதல் அவர் எக்வடோர் தூதரகத்தில் இருந்தார், ஸ்வீடனில் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அவர் அங்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க எக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார். அங்கு தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை எப்போதுமே மறுத்து வந்தார். கடைசியில் அந்த குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.
இந்த நிலையில், பெல்மார்ஷ் சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசுகையில், "அசாஞ்சின் விண்ணப்பம் மற்ற கைதிகளின் விண்ணப்பங்களைப் போலவே சிறை ஆளுநரால் வழக்கமான முறையில் பெறப்பட்டது, அது பரிசீலிக்கப்பட்டது நடவடிக்கை எடுக்கப்பட்டது," என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- வெள்ளத்தை உறிஞ்சும் சீனாவின் 'ஸ்பாஞ்ச் நகரம்' கட்டமைக்கப்படுவது எப்படி?
- பாகிஸ்தானின் கோப்பை கனவு ஆஸ்திரேலியாவின் சிக்ஸர்களால் சுக்குநூறானது எப்படி?
- கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
- மழையில் உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் தூக்கிவந்து காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
- ஜெய்பீம் சர்ச்சையில் அன்புமணிக்கு சூர்யா பதில்: "பெயர் அரசியலில் படத்தை சுருக்க வேண்டாம்"
- அரைகிலோ எடையுடன் பிறந்த குழந்தை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்