You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மழையில் உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் தூக்கிவந்து காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்து விரைத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் உடலை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை கொண்டு செல்ல ஓடி வந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய டி.பி. சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விழுந்து கிடந்த மரம் ஒன்றை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இது தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், ஒரு நபர் இறந்து கிடப்பதாகவே அந்த அழைப்பு கூறியதாகவும் கூறினார்.
"அங்கே ஒரு சிறிய சந்தில் இரவு முழுவதும் நனைந்து உடல் விரைத்துப் போய் அந்த நபர் இருந்தார். இறந்துவிட்டதைப் போலத் தோன்றியது. ஆனால், அதற்கு உள்ளே போய் நாங்கள் எங்கள் குழுவோடு அவரை வெளியே தூக்கி வந்தபோது லேசாக உயிர் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது. உடனே அவரது கை, கால்களை தேய்த்து கொஞ்சம் சூடுபடுத்திவிட்டு, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டும் என்று அவரை என் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஜீப்புக்கு கொண்டு சென்றேன்.
108 ஆம்புலன்சுக்கு போன் செய்தால் கொஞ்சம் நேரம் ஆகலாம். அதற்குள் உயிர் போய்விட்டால் என்ன செய்வது? அந்த நிமிடம் அவரைத் தூக்கிக் கொண்டு போய் அவரது உயிரைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் மனதில் இருந்தது. அதனால் அவரை தூக்கிச் சென்று காப்பாற்றினேன் என்று அவர் கூறினார்."
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு அவரைக் காப்பாற்றிவிட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார் ராஜேஸ்வரி.
1990களில் பல பேரை பலி கொண்ட கும்பகோணம் மகாமகக் குள நெரிசல் சம்பவத்தின்போதும் தாம் கீழே விழுந்து, மிதிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல பெண்களை தாம் தோளில் தூக்கிப் போட்டு கொண்டு சென்று காப்பாற்றியிருப்பதாகவும், அதனைப் பாராட்டி தேவாரம், விஸ்வநாதன் போன்ற பல உயர் போலீஸ் அதிகாரிகள் கடிதம் அனுப்பியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
வேறு எவருக்காகவும் காத்திராமல் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை தன் தோளில் போட்டுத் தூக்கிக் கொண்டு ஓடிவருவதில் காணப்பட்ட ராஜேஸ்வரியின் அர்ப்பணிப்பையும், உறுதியையும் சமூக ஊடகங்களில் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
பிற செய்திகள்:
- `பருவநிலை பிரச்னையை எதிர்கொள்ள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்` - COP26 மாநாட்டில் வெளியான அறிவிப்பு
- 'அந்த 3 ஓவர்கள்' இங்கிலாந்தை நியூசிலாந்து வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
- முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா?
- மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்