ருத்ர தாண்டவம் - சினிமா விமர்சனம்

ருத்ர தாண்டவம்

பட மூலாதாரம், Twitter/RuthraThandavam

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, தம்பி ராமைய்யா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா, ஒய்.ஜி. மகேந்திரன், மனோபாலா, ஜி மாரிமுத்து; இசை: ஜூபின்; இயக்கம்: மோகன் ஜி.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக சேர்ந்திருக்கிறது ரிச்சர்ட் ரிஷி - மோகன் ஜி கூட்டணி.

தர்மபுரியைச் சேர்ந்த ரொம்பவும் நல்லவரான ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) சென்னையில் காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரிகிறார். கஞ்சா விற்கும் இளைஞர்களை துரத்திச் செல்லும்போது அந்த இளைஞர்கள் கீழே விழுந்துவிட, அவர்களுக்கு தலையில் அடிபட்டுவிடுகிறது. அதில் ஒரு இளைஞன் சில நாட்கள் கழித்து இறந்துவிட, அந்த இளைஞன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆய்வாளர் அவனை அடித்துக் கொன்றுவிட்டதாக பிரச்சனை எழுகிறது. இதனால் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதையடுத்து மனைவி (தர்ஷா குப்தா) அவரைப் பிரிகிறார். இந்தப் பிரச்சனையிலிருந்து ருத்ர பிரபாகரன் எப்படி மீள்கிறார் என்பது மீதிக் கதை.

முந்தைய படத்தில் நாடகக் காதல், பதிவுத் திருமணம் போன்றவற்றை வைத்துக் கதைசொல்லியிருந்த மோகன் ஜி, இந்த முறை இளைஞர்களிடம் உள்ள போதைப் பழக்கத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார். ஆனால், அதை மட்டும் வைத்து படத்தை எடுத்தால் பரபரப்பாகாது என்பதால், வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல்களை காட்சிகளாகத் தொகுத்து, படமாக்கியிருக்கிறார்.

கதையின் நாயகனான ருத்ர பிரபாகரன் மிகவும் நல்லவர் என்பதை நிறுவுவதற்காக படத்தின் முதல் கால் பகுதியை செலவழித்திருக்கிறார்கள். காவல்துறையினரை நல்லவர்களாகக் காட்ட எல்லாப் படங்களிலும் வரும் அதே காட்சிகள், இந்த முதல் கால் பகுதியில் அமெச்சூர்தனமாக வந்துபோகிறது.

இறந்துபோனவர் பட்டியலின இளைஞர் என்பதால், ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இளைஞனின் வீட்டிற்கு ஆய்வாளர் போகும்போதுதான் கதாநாயகன் ஒரு பயங்கரமான உண்மையைக் கண்டுபிடிக்கிறார். அதாவது, அந்த இளைஞர் மதம் மாறிவிட்டவர் என்பதுதான் அந்த உண்மை.

இறந்தவர் பட்டியலினத்திலிருந்து மதம் மாறியவர் என்பதால், தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யக்கூடாது என்பதற்காக ஒரு வழக்கைத் தொடர்கிறார். அந்த வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் கிறிஸ்தவர்களை மதம் மாற்றுபவர்கள் என்றும், பலரும் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதைச் சொல்லாமல் கிரிப்டோ கிறிஸ்தவர்களாக வாழ்வதாகவும் விளாசித்தள்ளுகிறார்.

அதற்குப் பிறகு வரும் காட்சிகளும் எதிர்பார்த்தபடியே நகர்கின்றன. ஒரு இளைஞன் போதைப் பொருள் அருந்தி இறந்துபோயிருந்தால், அதை மிகச் சாதாரணமான ரசாயன ஆய்வின் மூலம் கண்டுபிடித்துவிட மாட்டார்களா? அதைச் செய்யாமல், யார் யாரையோ அடித்து வாக்கு மூலம் வாங்கி, கிறிஸ்தவர்களை கேலிசெய்து, சிறிய இயக்கங்களைக் குற்றம்சாட்டி நகர்கிறது படம்.

படத்தின் வில்லன் பெரும்பாலும் கருப்புச் சட்டையும் சில சமயங்களில் நீலச் சட்டையும் அணிந்து வருகிறார். அவரது அலுவலகம் முழுக்க சிவப்புக் கொடியாக இருக்கிறது. பாரக் ஒபாமா, ஜான் எஃப் கெனடி படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது இருக்கைக்குப் பின்பாக, இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளின் வரைபடம் இருக்கிறது. என்ன காம்பினேஷன் இது?

ருத்ர தாண்டவம்

பட மூலாதாரம், Twitter/RuthraThandavam

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த வெகு சில திரைப்படங்களில், வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் தலைவர்களின் படங்கள் குறியீடுகளாக வந்துபோயின. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கிறார் மோகன் ஜி. நீதிமன்ற அறையில் பாரதியார், அம்பேத்கர், காந்தி, அப்துல் கலாம், வாஜ்பாயி, வ.உ.சி., அண்ணா, என ஃப்ரேம் போட்டுத்தரும் கடைகளில் இருப்பதைப் போல ஏகப்பட்ட படங்கள்.

ஒரு மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிப்பது ஒரு திரைக்கதையின் முக்கியப் பகுதியாக இருந்தால், அதனை புத்திசாலித்தனமாகவும் விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்துவார்கள். அப்படி ஒரு காட்சியும் இதில் இல்லை. கிடைக்கும் எல்லாத் தருணங்களிலும் தான் சொல்லவந்ததை சொல்வதிலேயே மும்முரமாக இருக்கிறார் மோகன் ஜி.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட் எல்லாக் காட்சிகளிலும் ஒரே மாதிரி முக பாவனையோடு வந்து போகிறார். கதாநாயகி தர்ஷா குப்தாவின் நடிப்பு ஓகே. தம்பி ராமைய்யா, ராதாரவி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வில்லன் வாதாபியாகவரும் கௌதம் வாசுதேவ் மேனன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்துமே நிமிர்ந்து உட்காரவைக்கின்றன.

படம் பார்ப்பவர்களின் காதுகளைக் கவனத்தில் கொள்ளாமல் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜூபின். பல காட்சிகளில் வசனமே கேட்காத அளவுக்கு பின்னணி ஒலிக்கிறது. படத்திற்கான தீம் மியூசிக் மட்டும் பரவாயில்லை.

படம் மிக சுமாராக இருப்பது பிரச்சனையில்லை. மாறாக, மேலோட்டமான தகவல்களை வைத்துக்கொண்டு சமூகத்தின் ஒரு சில பிரிவினரை தொடர்ந்து மோசமாகச் சித்தரிக்கிறார் மோகன் ஜி. அதுவே தன் பலமென்றும் அவர் கருதுவது துரதிர்ஷ்டவசமானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :