'குக் வித் கோமாளி' தீபா: "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தும் போகாததற்கு காரணம் இதுதான்"

    • எழுதியவர், ச.ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"ஒரு காலத்தில் நாமும் பிரபலம் ஆக மாட்டோமா என ஏங்கியிருக்கிறேன். தற்போது ஏன் அப்படி ஆனோம் என வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறேன்" என்று மனம் நொந்து பேசுகிறார் நடிகை தீபா.

தொலைக்காட்சி, சினிமா ரசிகர்களுக்கு நடிகை தீபா மிகவும் பரிச்சயம். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி இவரை சமூக வலைத் தளங்களிலும் பிரபலமாக்கியது.

ஆனால், தற்போது அதே சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை கண்டு நொந்து போயிருக்கிறார் தீபா.

ஒரு தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உடல் கேலி செய்யும் வகையில் பேசிய ஒரு நபரை கண்டித்தார் தீபா. அப்போது சற்று ஆவேசமாக பேசிய அவர், இறுதியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் ஏற்பாட்டின் பேரில் அப்படிப் பேசியதாகக் கூறினார்.

இதுதான் எதிர்மறை விமர்சனங்களுக்கு காரணமாகி இருக்கிறது.

தேவையில்லாத எதிர்மறை விமர்சனங்களால் மன உளைச்சலில் இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்த தீபா, அந்த நிகழ்ச்சியில் தான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும், நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பே சொல்ல சொல்லியிருந்தாலும் கூட தன் சொந்த வாழ்வில் நடந்ததை வைத்து ஆத்மார்த்தமாக கூறியதாகவும், தன்னைப் போல வேறு பிள்ளைகள் யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற சமூக நோக்கத்தில்தான் அந்த கருத்தை தெரிவித்ததாகவும் கூறுகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தீபா பேசிய அந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பலர் தீபாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தயாரிப்பாளர் சொன்னதால் தான் இந்த கருத்தை பேசியதாக தெரிவித்திருப்பதால் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

எதிர்மறை கருத்துகள்

"இது மாதிரியெல்லாம் செய்யுறதுக்கு நீ வீட்டில் உட்காரு" என்றெல்லாம் சமூக வலைதளங்களில் தன்னுடைய வீடியோவுக்கு விமர்சனங்கள் வந்ததாக தீபா தெரிவிக்கிறார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்கமால் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வைத்து பேசுவது தவறு. இதனால் நான் அனுபவித்த வேதனையையும், வலியையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது என்கிறார் தீபா.

ஏன் அப்படி சொன்னேன்?

"ஒரு காமெடி நிகழ்ச்சியில் உட்கார்ந்து கொண்டு நான் காமெடி செய்ய மாட்டேன் என சொல்லமுடியாது. உடல் கேலிகள் குறித்து நான் பேசியது இதயத்தில் இருந்து பேசிய வார்த்தைகள். நிகழ்ச்சி தயாரிப்பு ஏற்பாட்டின் பேரில் அப்படி பேசினேன் என சொன்னது அந்த தருணத்தின் இறுக்கத்தை குறைக்க சொல்லப்பட்டவை'' என விவரிக்கிறார் தீபா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் - போகவில்லை

"பணத்தை விட சுயமரியாதை முக்கியம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிடைக்கும், நல்ல வருமானம்தான். என்னால் அங்கு போயிருக்க முடியும். ஆனால் அதற்கு நான் போகவில்லை. நான் காசு பணத்திற்கு அடிமை அல்ல, அன்புக்குத்தான் அடிமை" என்றார் அவர்.

தமிழ் தொலைக்காட்சி சேனல்களிலும் சரி, சில திரைப்படங்களிலும் சரி நகைச்சுவை என்ற பெயரில் உருவகேலி, உடல் கேலி செய்யும்போக்கு அதிகரித்து வருகிறது. அதே சமயம் இதற்கு அவ்வப்போது கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

என்ன பேசினார் தீபா?

இந்த சூழலில், தமிழகத்தின் பிரபல பொழுதுபோக்கு சேனல் ஒன்றில், சின்னத்திரை கலைஞர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்பாளர் ஒருவர் உடல்கேலி செய்யும் வகையில் பேசத் துவங்கியபோது தீபா குறுக்கிட்டார்.

"ஒரு காலத்தில் நாங்களும் உடல் இளைத்து காணப்பட்டவர்கள்தான். ஆனால், இப்போது எப்படி இப்படி பருமனானோம் என யாராவது யோசித்தீர்களா? எங்கள் உடலை சிதைத்து, இன்னொரு உயிரை தருகின்ற தாய் நாங்கள். ஒரு தாயை இப்படி கேலி செய்வது உங்களுக்கு தவறாக தெரியவில்லையா? நான் வீட்டுக்கு செல்லும்போது என்னை இரண்டு பிள்ளைகள் எதிர்பார்த்து இருக்கும்.

அப்போது நீ கிளியோபாட்ராவையோ அல்லது ஐஸ்வர்யா ராயையோ கொண்டு போய் நிறுத்தினாலும் அம்மா என்று கட்டிப்பிடிக்க மாட்டான். என் பிள்ளைகளுக்கு நான்தான் அழகி. படத்திலும், சீரியலிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் இது போன்று வருவதை நான் விரும்பவில்லை," என அதில் பேசியிருந்தார்.

ஆனால், அந்த நிகழ்ச்சியிலேயே தனது பேச்சு எழுதி கொடுத்து பேசியது என கூறினார். இதன்பின்னரே கடும் கேலிகளை சந்திக்க வேண்டியிருந்தது.

"ஒரு காலத்தில் நாமும் பிரபலம் ஆக மாட்டோமா என ஏங்கியிருக்கிறேன். தற்போது ஏன் அப்படி ஆனோம் என வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறேன். பணத்துக்காக ஸ்க்ரிப்டுக்காக பேசுபவள் என்றெல்லாம் வைக்கப்படும் விமர்சனங்களை பார்த்தால் எனது பிள்ளைகள் பாதிக்கப்படுவர். நடிப்பு துறையில் நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு மட்டுமே தெரியும். என்னை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம். கீழே தள்ளவும் வேண்டாம்" என்கிறார் தீபா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :