You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி - “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்”
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை கொடுக்கப்பட்டது ஏன்?
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் வடிவேலு மீது இயக்குநரும், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் தயாரிப்பாளருமான ஷங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டு இருந்தது.
சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2006-ல் வெளியான படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. முதல் முறையாக நடிகர் வடிவேலு முழு நீள கதையில் நாயகனாக, இம்சை அரசன், உக்கிரபுத்திரன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இதன் இரண்டாம் பாகத்திற்குமான எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இந்த நிலையில்தான் இதன் இரண்டாம் பாகம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பு சிக்கல்கள் காரணமாக இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்னை நிலவியது. மேலும், இதற்கு காரணமாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இந்த பிரச்னை மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நடிகர் வடிவேலு மற்றும் லைகா நிறுவனத்திற்கு இடையே சமாதானம் செய்யபட்டது. மேலும் நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க இனி எந்த தடையும் இல்லை என அவருக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, 'Vadivelu Returns', 'Vadivelu For Life' என சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.
அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகளின் வாழ்த்து செய்திகளால் பரபரப்பாக இருந்த வடிவேலுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்.
"ரொம்ப சந்தோசமா இருக்கேன். முதல் முறையாக படங்களில் நடிக்க வந்தபோது இருந்த மகிழ்ச்சியை விட தற்போதுதான் அதிகம் உள்ளது. உலகத்தில் உள்ள எல்லா குடும்பமும் என்னுடையதுதான். ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம்தான். இவர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் உற்சாகமாக.
இவ்வளவு நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தபோது மனநிலை எப்படி இருந்தது?
"இவ்வளவு நாட்கள் நடிக்காமல் இருந்தால் கூட, மீம் கிரியேட்டர்ஸ் என்னை தொடர்ந்து நடிப்பது போலவே, மக்களோடு மீம்கள் மூலம் இருக்க வைத்தார்கள். என்னுடைய எல்லா ரியாக்ஷனும் போட்டு, என்னை படங்களில் இருப்பது போல உயிரோட்டமாக வைத்திருந்தார்கள். மீம் கிரியேட்டர்கள் எனக்கு பெரிய கடவுள் மாதிரி. அவர்கள்தான் மக்களுக்கு என்னை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தார்கள். அவர்கள் எல்லாம் யாரென்று தெரியாது. அவர்களுக்கு எனது நன்றி".
அடுத்து என்ன மாதிரியான படங்களில் நடிக்க திட்டம்?
"'லைகா புரொடக்ஷன்' தயாரிப்பில் முதல் படம் நடிக்க இருக்கிறேன். அதோடு சேர்த்து அடுத்து ஐந்து படங்களும் அவர்கள் தயாரிப்புதான். மக்கள் ஆசையை நிறைவேற்றிய சுபாஷ்கரன் தற்போது 'சபாஷ்கரன்' ஆகிவிட்டார். படத்தின் பெயர் 'நாய் சேகர்'. இயக்குநர் சுராஜ்.
கதையின் நாயகனாகவும், காமெடி நாயகனாகவும் இந்த கதையில் நடிக்க இருக்கிறேன். கதாநாயகன் என்றால் ராஜா வேடம் எல்லாம் இல்லை. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி'-யை தவிர்த்து விட்டேன். இனி எனக்கும் 'எஸ் பிக்சர்ஸ்'-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த படம் நடிக்க போவதில்லை. அதுமட்டுமல்ல, இனி வரலாற்று படங்கள் எதிலுமே நடிப்பதாகவே இல்லை. அந்த படத்தை ஒத்து கொண்டதுதான் என்னுடைய கெட்ட நேரம். அதை விட்டு விலகியதுதான் என்னுடைய நல்ல நேரம்.
தமிழக முதல்வரை சந்தித்த நேரம் நன்றாக இருக்கிறது. நாளையோ அல்லது நாளை மறுநாளோ முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொல்வேன்".
திரையுலகில் இருந்து வாழ்த்துகள் வந்ததா?
"காலையில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தபடியே இருக்கின்றன. நிறைய படங்கள் இனி வரும். தொடர்ந்து நடிப்பேன். மக்களை சிரிக்க வைப்பேன். முன்னணி கதாநாயகர்கள் கூட வாய்ப்பு வந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்பேன்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்