You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
LoL - எங்க சிரி பார்ப்போம் - விவேக்கின் கடைசி ஷோ விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பங்கேற்பாளர்கள்: சதீஷ், பிரேம்ஜி அமரன், மாயா, ஷ்யாமா ஹரிணி, ஆர்.ஜே. விக்னேஷ் காந்த், ஹாரத்தி, பார்கவ் ராமகிருஷ்ணன், அபிஷேக் குமா், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், புகழ்; தொகுப்பாளர்கள்: விவேக், சிவா; வெளியீடு: அமேசான் பிரைம்.
நடிகர் விவேக் மரணமடைவதற்கு முன்பாக தொகுத்துக் கொடுத்துவிட்டுச் சென்ற ரியாலிட்டி நிகழ்ச்சி இது. அவருடன் சேர்ந்து சிவாவும் தொகுத்து வழங்குகிறார் என்பதால் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்தத் தொடர்.
ஹிடோஷி மட்சுமோடோ இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் டாக்குமென்டல் என்ற தொடர் இருக்கிறது. அதன் தமிழ் வடிவம்தான் இந்தத் தொடர். ஒரிஜினல் தொடரே ரொம்பவும் சுமாராக இருக்கும் நிலையில், தமிழ் வடிவத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை.
தொடரின் கான்செப்ட் இதுதான்: ஒரு வீடு. அதில் 8 நகைச்சுவை நடிகர்கள், மேடைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் குழுவில் உள்ள மற்றவரை சிரிக்க வைக்க வேண்டும். யாராவது சிரித்தால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கடைசியாக எஞ்சியிருப்பவர்கள் வெற்றிபெற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.
இந்தத் தொடரில் மொத்தம் ஆறு எபிசோடுகள். இந்த ஆறு எபிசோடுகளும் சேர்த்தே மொத்தமாக இரண்டரை மணி நேரம்தான் ஒடுகிறது என்பதுதான் இந்தத் தொடரின் ஒரே சிறப்பம்சம்.
போட்டி துவங்கியதிலிருந்து முடியும்வரை போட்டியாளர்களில் யாரும் வாய்விட்டு சிரிப்பதில்லை. அந்த அளவுக்கு போட்டி கடுமையாக இருக்கிறது என கருதக்கூடாது. ஒட்டுமொத்தப் போட்டியிலும் சிரிக்கும்படி எதுவுமே நடப்பதில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
காமெடி என்கிற பெயரில் கழுத்தை அறுத்திருக்கிறார்கள். இந்த இரண்டரை மணி நேரத்திலும் ஒரு சின்ன காமெடிகூட ஒர்க் அவுட் ஆகவில்லை. இதைவிடக் கொடுமை, சதீஷ் போன்ற போட்டியாளர்கள் அருவருக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருப்பதுதான். ஒருகட்டத்தில் தொடரைப் பார்ப்பதையே நிறுத்திவிடலாமா என்று யோசிக்கவைக்கிறார்கள்.
குக் வித் கோமாளியில் வரும் புகழ், அந்தத் தொடரில் எப்படியெல்லாம் சிரிக்கவைத்தார்? ஆனால் இதில் ஓர் இடத்தில்கூட அவரது முயற்சி வெற்றிபெறவில்லை. தொடரில் வரும் மற்றவர்கள் எல்லாம் பள்ளிக்கூட நாடங்களில் வரும் நகைச்சுவை அளவுக்குக்கூட எதையும் முயற்சிக்காமல், அடுத்தவர்களைக் கேவலமாகப் பேசுவது, ஆபாசமாக பேச முயற்சிப்பது, அருவருப்பாக பேசுவது என்றே நேரத்தைக் கடத்துகிறார்கள்.
விவேக்கும் சிவாவும்தான் தொடரில் ஒரே ஆறுதல். போட்டி நடக்கும் வீட்டிற்குள் நடப்பதைப் பார்த்து இருவரும் அவ்வப்போது சிரிப்பதைப் போல காட்சிகள் வருகின்றன. அந்தக் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு விவேக்கும் சிவாவும் சிரித்து வைத்திருக்கிறார்கள்.
தொடர் முடியும்போதுதான் ஒரு விஷயம் புரிகிறது. அதாவது, "எங்க சிரி பார்ப்போம்" என்பது போட்டியாளர்களுக்கான சவால் இல்லை. பார்வையாளர்களுக்கான சவால். இந்தத் தொடரைப் பார்த்து ஒருவராலும் சிரிக்க முடியாது என்பதால்தான் இப்படி ஒரு தலைப்பு போலிருக்கிறது.
ம்ஹும்.. விவேக்கிற்கு கடைசியாக வேறு ஒரு படமோ, தொடரோ வந்திருக்கலாம்.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். புள்ளி மீது "ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்ற" அமெரிக்கா
- கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் பகிர்ந்தளித்த இலங்கையர்
- விடுமுறையில் ரூ.2.9 கோடி சம்பாதித்த 12 வயது சிறுவன்: அப்படி என்ன தொழில் செய்தார்?
- இறுதி நொடி வரை மக்கள் வெளியேற்றப் பணிகள் தொடரும் - அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்