You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சவால் விட்ட மீரா மிதுன் - கைது செய்த சென்னை காவல்துறை
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பட்டியலினத்தவர் பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.
அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு காவல்துறையில் புகார் அளித்தார்.
7 பிரிவுகளில் வழக்கு
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் காவல்துறையினர் மீரா மிதுன் மீது இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153 (A)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (B) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படிகூறி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதற்குப் பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில் தன்னைக் கைது செய்தால் பரவாயில்லை எனக் கூறியிருந்தார்.
அவர் எங்கே இருக்கிறார் எனத் தேடிவந்த காவல்துறையினர் அவரது செல்போனை வைத்து, அவர் இருக்குமிடத்தை அறிய முயன்றனர். அவர் கேரளாவில் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில், அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விரைவில் அவர் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ்
எட்டுத் தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். பிறகு 2019ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.
பெண் திரைக்கலைஞர்கள் தன்னுடைய முகத் தோற்றத்தை பிரதிசெய்ய முயலுவதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.
பிற செய்திகள்:
- பல சாதிகளை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம்: இதற்கு தமிழ்நாடு எதிர்கொண்ட சவால்கள் என்ன?
- முக்கிய சீனத் துறைமுகத்தில் கோவிட்-19 தொற்று கண்டுபிடிப்பு: உலக வணிகத்துக்கு அச்சுறுத்தல்
- இது செல்போனா? கீ செயினா? மடக்கும் வசதி ஸ்மார்ட்ஃபோன்களோடு களமிறங்கும் சாம்சங்
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்