'சார்பட்டா பரம்பரை' VS 'இடியாப்ப பரம்பரை' - மீண்டும் தொடங்கிய சண்டை, கேலி செய்த சந்தோஷ் நாராயணன்

சமீபத்தில் இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை' படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கபிலனாக ஆர்யாவும், சார்பட்டா பரம்பரையின் வாத்தியாராக ரங்கன் கதாபாத்திரத்தில் பசுபதியும் நடித்திருப்பார்கள்.

இப்போது அந்த படத்தில் கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் அழைத்து செல்லும் காட்சியை சிலர் மீம்ஸ்களாக பகிரும் படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இப்போது 'சார்பட்டா பரம்பரை'க்கு போட்டியாக இந்த மீம்ஸ் களத்தில் 'இடியாப்ப பரம்பரை' வந்துள்ளது.

'சார்பட்டா பரம்பரை'

1970களில் வட சென்னையில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரை என இரு பரம்பரைகளுக்கு இடையே நடக்கும் ஆக்ரோஷமான குத்துச் சண்டையை மையப்படுத்திய கதைக்களம்தான் 'சார்பட்டா பரம்பரை'.

ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய் என பலரது நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பேசப்பட்டன.

அதிலும் குறிப்பாக 'டான்சிங் ரோஸ்' கதாபாத்திரம் பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது.

படத்தை பாராட்டிய கமல்

சமீபத்தில் 'சார்பட்டா' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை அழைத்து தனது பாராட்டு தெரிவித்துள்ளார்.

"'சார்பாட்டா' படத்தில் வரும் உலகத்தை நேரடியாக நான் பார்த்திருக்கிறேன். என் நண்பர்களில் பலர் பாக்ஸர்கள்தான். இயக்குநர் இரஞ்சித் தனது கருத்துகளை மக்களிடம் நேரடியாக எளிமையாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார்" என கமல் பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் புகைப்படங்களையும் படக் குழுவினர் ஒவ்வொருவரும் தாங்கள் கமலுடன் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து 'மறக்க முடியாத நடிகர் கமல்ஹாசனுடனான சந்திப்பு மறக்க முடியாது' எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

வைரலாகும் வாத்தியார்

இந்த நிலையில், படத்தில் ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் அழைத்து செல்வது போன்று ஒரு காட்சி வரும். அதில் கபிலன், 'வாத்தியாரே… நீ தான் எனக்கு எல்லாம் வாத்தியாரே' என சொல்லி அவரிடம் பேசிக்கொண்டு செல்வது போன்று அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தற்போது அந்த காட்சியைதான் இணையவாசிகள் விதவிதமான வடிவங்களில் மீம்ஸ் தயாரித்து பகிர்ந்து வருகின்றனர்.

வடசென்னையில் இருந்து அவதார் உலகத்துக்கு வாத்தியாரை கபிலன் வைத்து அழைத்து செல்வது போலவும், கடல் மேலே சைக்கிளில் பயணப்படுவது போலவும், 'எல்லா மீம்ஸ்களிலும் மாஸ்க் இல்லாமலே வரோம் வாத்தியாரே' என மாஸ்க் அணிந்து கொண்டு வருவது போலவும், சைக்கிளில் இருந்து இறங்கி குதிரை சவாரி, புல்லட் ரைட் இரண்டு பேர் போவது போலவும் மீம் கிரியேட்டர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு சிரிக்க வைக்கும் மீம்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், 'மாஸ்டர்' படத்தில் நடிகர் விஜய்யின் வாத்தி கதாப்பாத்திரத்தையும் அவர் சைக்கிளில் செல்வது போன்ற காட்சியில் ரங்கன் வாத்தியாரையும் இணைத்து 'வாத்தியுடன் வாத்தி' எனவும் மீம் உருவாக்கி வருகின்றனர்.

படம் வெளியான சமயத்தில் 'டான்சிங் ரோஸ்' குறித்து ரங்கன் வாத்தியார், கபிலனிடம் விவரிக்கும் வசனங்கள் வைரலானது.

இதற்கு முன்பு நடிகர் பசுபதி நடித்திருந்த 'அசுரன்', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' போன்ற படங்களில் இடம்பெற்ற 'நீ நம்பலைன்னாலும் அதான் நெசம்', 'சுகர் பேசண்ட்ரா நானு' என்ற வசனங்களும் அதன் காட்சிகளும் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளாக புகழ்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

படக்குழுவினர் ரியாக்‌ஷன் என்ன?

படத்தில் இடம்பெற்றுள்ள இந்த காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து, நேற்று படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அதில், தனது மனைவியுடன் சைக்கிளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, 'என்னை வேலை செய்ய விடுங்க வாத்தியாரே' என இந்த மீம் டெம்ப்ளேட்டுகளுடன் பொருத்தி ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், படத்தில் சார்பட்டாவின் எதிர் அணியான இடியாப்ப பரம்பரையை சேர்ந்த டான்சிங் ரோஸ்ஸூம், வேம்புலியும் அவர்களது வாத்தியாரான துரைக்கண்ணுவை சைக்கிளில் வைத்து, 'வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்' என புகைப்படங்களை ஜாலியாக பதிவிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :