தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சினிமாவிலும் வாழ்க்கையிலும் வளர்ந்தது எப்படி?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமான மகேஷிற்கும் 2020-ல் இருக்கும் 'கர்ணன்' படத்துக்கும் இடைப்பட்ட தனுஷின் சினிமா பயணம், அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உருவ கேலி, படங்கள் தோல்வி என ஆரம்ப காலத்தில் தனுஷை சுற்றிய சர்ச்சைகள் அதிகமாக இருந்தன.

தனுஷ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

• நடிகர் ராஜ்கிரணை தனது குடும்பத்துக்கே 'கடவுள் மாதிரி' என்பார் தனுஷ். முதன்முதலில் கஸ்தூரி ராஜாவுக்கு படம் தயாரித்ததும், தனுஷ் முதன் முதலாக இயக்குநராக அறிமுகமான 'பா. பாண்டி' படத்திலும் ராஜ்கிரண் நடித்திருப்பதால் அந்த மரியாதை தனுஷுக்கு எப்போதுமே உண்டு.

• வெற்றிமாறனும் தனுஷும் நெருங்கிய நண்பர்கள். 'என்னுடன் போட்டி போட்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்தவர், பின்பு யோகாவிற்கு மாறி விட்டார். ஏனெனில் அதுதான் அவருக்கு எளிதாக இருக்கும். சரியான சோம்பேறி' என ஜாலியாக வெற்றிமாறனை கலாய்ப்பார்.

• அனிருத்தை இசையமைப்பாளராக முதன் முதலில் '3' படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் தனுஷ்.

• ட்விட்டரில் ஒரு கோடி பேர் தனுஷை பின் தொடருகிறார்கள். கோலிவுட்டில் முதல் முறையாக 10 மில்லியன் பேரை பின்தொடருவோராகக் கொண்டவர் தனுஷ்தான்.

• கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து கொண்டிருக்கும் 43வது படத்தின் அறிவிப்பு தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியிருக்கிறது.

• 'மாறன்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ்.

• 'இன்ஜினியரா, டாக்டரா, செஃப் ஆவதா' என அந்த வயதில் குழம்பி திரிந்தவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது அவரது அண்ணன் செல்வராகவன். ''இப்போது நான் இருக்கும் இந்த நிலைக்கு அவர்தான் காரணம்''. எனவே, சினிமா உலகில் இயக்குநர் செல்வராகவனே என்னுடைய குரு என்பார் தனுஷ்.

• 'ராஞ்சனா' படம்தான் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் நடித்த படம். அப்போது படத்தின் இயக்குநர் ஆனந்த் எல்.ராயிடம் 'எனக்கு இந்தி தெரியாது' என தனுஷ் சொல்லியிருக்கிறார். அதற்கு, 'பரவாயில்லை தனுஷ். நீங்கள் தமிழிலேயே நடியுங்கள். நான் டப்பிங்கின் போது வேறொருவரை வைத்து பார்த்து கொள்கிறேன்' என இயக்குநர் ஆனந்த் சொல்ல அடுத்த நாளே தன்னுடைய காட்சிக்கான வசனத்தை இந்தியில் இருந்து தமிழில் எழுதி அதை மனப்பாடம் செய்து அடுத்தடுத்த நாட்களில் படப்பிடிப்பில் இந்தியிலேயே பேசி ஒன்றிரண்டு டேக்குகளில் முடித்து அசத்தியிருக்கிறார் தனுஷ்.

• தனுஷ் கூறும்போது, 'உண்மையில், நடிகராக என் மீது இயக்குநர் எதிர்ப்பார்ப்பு வைத்திருந்திருப்பார். அப்படி இருக்கும் போது அவரது நம்பிக்கையை பொய்யாக்க கூடாது என்பதுதான் மனதில் இருந்தது' என்பது இதற்கு தனுஷ் சொன்ன காரணம்.

• தனுஷ் ஒரு அம்மா பிள்ளை. 'அம்மாவின் சமையல்' என்றால் அலாதி பிரியம்.

• பாடலாசிரியராக 'கொலவெறி'யில் ஆரம்பித்த ட்ரெண்டிங் பயணம் கடந்த 10 ஆண்டுகளில் முப்பதிற்கும் மேற்பட்ட பாடல்களை எழுத வைத்திருக்கிறது.

• முதன் முதலாக தனுஷ் பாடியது யுவன் ஷங்கர் ராஜா இசையில்தான். ஜிவி பிரகாஷ்குமார், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களிடம் பாடினாலும் அனிருத் இசையில் பாடுவது இன்னும் பிடித்தமானது என்பதை இயக்குநர் கெளதம் மேனனுடனுனான உரையாடல் ஒன்றில் பதிவு செய்தார் தனுஷ்.

• 'தனுஷிடம் அபாரமான இசை அறிவு இருக்கிறது. அதை அவர் எளிதில் கடந்து செல்கிறார். 'ஜகமே தந்திரம்' படத்தின் பாடல் இசை நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை தனுஷ் சொல்லும் பதிலில் இருந்துதான் இறுதி செய்வோம்' என பிபிசி தமிழ் பேட்டியில் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

• 'ஜகமே தந்திரம்' பாடலுக்கு முன்பு சந்தோஷ் நாராயணன் தனுஷின் 'கர்ணன்' படத்திற்கும் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் தனுஷ் 'தட்டான் தட்டான்' பாடலை 45 நிமிடங்களில் முடித்து கொடுத்த பின்பே 'தி கிரேமேன்' படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.

• தனது 'வுண்டர்பார் ஃப்லிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் இதுவரை 16 படங்களை தயாரித்திருக்கிறார். அதில் 'காக்கா முட்டை', 'விசாரணை', 'காலா', 'வடசென்னை' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதில் 'காக்கா முட்டை', 'விசாரணை' படங்களுக்காக இணை தயாரிப்பாளராகவும் இரண்டு முறை தேசிய விருது வாங்கியிருக்கிறார் தனுஷ்.

• 'தி கிரேமேன்' படம் மூலமாக பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டிலும் நடிகராக களம் இறங்குகிறார் தனுஷ்.

• பாலிவுட், ஹாலிவுட்டை தொடர்ந்து இயக்குநர் சேகர் கமுலாவுடன் இணைந்து டோலிவுட்டிலும் கால் பதிக்கிறார் தனுஷ். சமீபத்தில் இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் உறுதி படுத்தியிருக்கிறார் தனுஷ்.

• சிறந்த நடிகருக்காக 'ஆடுகளம்', 'அசுரன்' படங்களுக்கு இரண்டு முறை தேசிய விருது வாங்கியிருக்கிறார்.

• மிகத்தீவிரமான இளையராஜாவின் ரசிகர். அவர் இசையை விட வேறெதுவும் பெரியதில்லை என்பார்.

• "இளையராஜாவின் இசையில் இருந்து நடிப்பு எடுத்து கொள்வேன்" என்பார். எதாவது ஒரு சோகமான, மகிழ்ச்சியான, காதல் காட்சி என வந்தால் அவரது இசை கேட்டுவிட்டு நடிக்க செல்வது வழக்கம்.

• ''முன்பு எல்லாம் ஆங்கிலத்தில் பேச அவ்வளவு தைரியம் இருந்தது இல்லை. யாராவது ஆங்கிலத்தில் பேசினால், 'யெஸ், நோ' என்பதோடு நிறுத்தி விடுவேன். என் மனைவி ஆங்கில புத்தகங்களை தொடர்ச்சியாக படிக்க வைத்தார். அதில் இருந்து எடுத்த பயிற்சிதான் இப்போது ஓரளவாவது பேசும் ஆங்கிலம்'' என்பார்.

• ''நான் நடிகராக எந்த மாதிரியான நடிப்பை கொண்டு வர வேண்டும் என்பதை இயக்குநர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என இயக்குநரின் நடிகன் நான் என்பார் தனுஷ்.

• செஃப் ஆக வேண்டும் என்பது விருப்பம். அம்மாவுக்கு சமையலில் உதவி செய்வது, வீட்டில் அனைவருக்கும் உணவு பரிமாறுவது விருப்பமான ஒன்று. ஆனால், சமைக்க தெரியாது என்பார் சிரித்து கொண்டே.

• 'வடசென்னை', 'மாரி-2', 'அசுரன்', 'பட்டாஸ்', 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' என கடந்த இரண்டு வருடங்களாக தனுஷின் கரியரில் வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.

• 'படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் என்னை பார்க்க பார்க்க, பழக பழகதான் பிடிக்கும்' என்பது தனுஷின் ஸ்டேட்மெண்ட்.

• தனுஷ் முதன் முதலில் இயக்குநராக அறிமுகமான 'பா. பாண்டி' படத்தில் ராஜ்கிரண் கதாப்பாத்திரத்திரம் போலவே, 'பா. பாண்டி2'-வில் கவுண்டமணியை நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார்.

• நடிகர் கவுண்டமணியின் தீவிரமான ரசிகரான தனுஷ், அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

• 'நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகன், பிறகுதான் மருமகன்' என்பார் எப்போதும்.

• திருமணம் செய்யும் போது தனுஷின் வயது 21. இவ்வளவு சீக்கிரம் திருமணம் ஏன் என்ற கேள்வி எழுந்தபோது என்னுடைய இளமை காலத்தை என்னுடைய குழந்தைகளுடன் செலவிட விரும்புகிறேன் என்றார். மூத்த மகன் யாத்ராவிற்கு வயது 15, இளையமகன் லிங்காவிற்கு வயது 10.

• தற்போது போயஸ் கார்டனில் ரஜினி வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்டி வருகிறார் தனுஷ்.

• 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'ஆடுகளம்', 'வடசென்னை', 'அசுரன்', 'கர்ணன்' உள்ளிட்ட படங்கள் அவரை நடிகராக வேறுதளத்திற்கு அழைத்துச் சென்றது.

• 'இந்த இயக்குநர் வந்து கேட்டால், கதை கேட்காமல் கூட நடித்து விடுவேன்' என சொல்வது இரண்டே பேரைதான். ஒன்று இவரது அண்ணன் செல்வராகவன், இன்னொன்று வெற்றிமாறன்.

• முதன் முறையாக மாரி செல்வராஜூடன் இணைந்த 'கர்ணன்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற அடுத்து ஒரு படம் அவருடன் நடிப்பேன் என படம் வெளியாகி வெற்றி பெற்ற சில நாட்களிலேயே அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் தனுஷ்.

• 'அத்ரங்கிரே', 'மாறன்', செல்வராகவனுடன் அடுத்த படம், 'ஆயிரத்தில் ஒருவன்2', மித்ரன் ஜவகருடன் ஒரு படம், 'தி க்ரேமேன்' என அடுத்த மூன்று வருடங்களுக்கு நடிகர் தனுஷின் கால்ஷீட் டைட்.

• மேலே சொன்ன படங்களை எல்லாம் முடித்து கொடுத்துவிட்டுதான் அடுத்து இயக்கம் குறித்து யோசிக்க வேண்டும் என்கிறார்.

• அடுத்து செல்வராகவன் படம், தெலுங்கு படம் என சினிமாவில் தனுஷ் பிஸியாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :