ராஜ் குந்த்ராவுக்கு எதிராக திரும்புகிறாரா ஷில்பா ஷெட்டி? ஆபாச பட தயாரிப்பு சர்ச்சை

ஆபாச படங்களில் மாடல்களை நடிக்க வைத்து, அதை ஆபாச இணையதளங்களில் பதிவேற்றி பணம் சம்பாதித்ததாக தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது காவல்துறையினர் குற்றம்சாட்டிய விவகாரத்தில் அவர் என்ன செய்தார் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார், அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஷில்பா ஷெட்டி.

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் மாடல்கள் மற்றும் பிரபலங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அதை ஹாட்ஷாட்ஸ் எனப்படும் செல்பேசி செயலியில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா பதிவேற்றியதாகக் கூறி அவரை கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் கூட்டாக செயல்பட்டதாக ரயான் தோர்ப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும் ஜூலை 27ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

6 மணி நேர விசாரணை

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடிகை ஷில்பா ஷெட்டியிடம் காவல்துறையினர் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இது குறித்து மும்பை போலீஸ் வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவிக்கையில், "இந்த ஆபாச பட தயாரிப்பு தொடர்பான செயலிக்கும் தனது கணவருக்கும் தொடர்பு இல்லை. குந்த்ராவின் மைத்துநர் லண்டனைச் சேர்ந்த பிரதீப் பக்ஷி என்பவர்தான் ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியை நடத்தி வந்தார்," என்று ஷில்பா ஷெட்டி கூறியதாக குறிப்பிட்டன.

"எனது கணவர் தயாரித்தது கவர்ச்சிப்படங்களே தவிர ஆபாச படங்கள் அல்ல. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது," என்றும் ராஜ்குந்த்ராவின் தொழில் குறித்து ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் மேலும் கூறின.

ஹாட்ஷாட்ஸ் செயலியில் எத்தகைய படங்கள் விநியோகம் செய்யப்பட்டன, அதன் தொழில்முறை செயல்பாடுகள் குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

காவல்துறையினர் இதுவரை நடத்திய விசாரணையில் ராஜ்குந்த்ராவின் தயாரிப்பு வேலைக்கும் ஷில்பா ஷெட்டிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷில்பாவின் உருக்கமான பதிவு

இந்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு பிறகு, வெள்ளிக்கிழமை இரவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இடுகையை பதிவு செய்தார் ஷில்பா. அதில் ஜேம்ஸ் தர்பர் என்பவரின் வாசகம் இடம்பெற்ற பக்கத்தை அவர் பகிர்ந்துள்ளார், "Do not look back in anger, or forward in fear, but around in awareness!" (கோபத்தில் திரும்பிப் பார்க்க வேண்டாம் அல்லது அச்சத்துடன் முன்னேற வேண்டாம். ஆனால், எப்போதும் சுற்றுமுற்றும் விழிப்பாக இருங்கள்) என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்களை காயப்படுத்தியவர்கள், விரக்தியடையச் செய்த உணர்வுகள், நாங்கள் அனுபவித்த துரதிருஷ்டம் போன்றவை மீது கோபத்துடன் நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம். நாம் வேலையை இழக்கலாம், நோயால் பாதிக்கப்படலாம் அல்லது நேசிப்பவரின் மரணத்தால் நேரும் துன்பத்தை அச்சத்துடன் எதிர்நோக்குகிறோம்," என்று அந்த பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

"நான் உயிருடன் வாழ்வதே அதிர்ஷ்டம் என்பதை அறிந்து மூச்சை இழுத்து விடுகிறேன். கடந்த காலங்களில் சவால்களில் இருந்து மீண்டு வந்ததை போல எதிர்காலத்திலும் சவால்களில் இருந்து மீளுவேன். இன்றைக்கான எனது வாழ்க்கையை வாழும் எனது எண்ணத்தில் இருந்து எதுவும் என்னை திசை திருப்பாது," என்றும் ஷில்பா ஷெட்டி பகிர்ந்த பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு புறம் கணவருக்கு ஆதரவாக போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்த ஷில்பா ஷெட்டி, இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக ஒரு செய்தியை தனது ரசிகர்களுக்கும் இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பின்தொடருவோருக்கும் விடுத்துள்ளதாகவே அவரது செயல்பாடு பார்க்கப்படுகிறது.

48 டெர்ராபைட்ஸ் ஹார்ட் டிஸ்கில் ஆபாச காணொளிகள்

கைது நடவடிக்கைக்கு முன்பாக காவல்துறையினர் ராஜ் குந்த்ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் படங்கள், காணொளிகள் நிறைந்த கோப்புகள் நிறைந்த 48 டெர்ராபைட்ஸ் ஹார்ட் டிஸ்கை பறிமுதல் செய்தனர். அதில் இருப்பவை பெரும்பாலும் ஆபாசமான காட்சிகள் மற்றும் படங்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தவிர, தனியார் வங்கியில் ராஜ் குந்த்ரா வைத்துள்ள வங்கிக் கணக்கில் இருந்து யூனியன் பாங்க் ஆஃப் ஆப்ரிக்கா என்ற வங்கியில் ராஜ்குந்த்ரா வைத்திருந்த வங்கிக் கணக்குக்கும் இடையே நடந்த பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான ஆதாரங்களையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வங்கிகளில் உள்ள பணம் பெரும்பாலும் ஆபாச பட தயாரிப்புக்கும், ஆன்லைன் சூதாட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இது தவிர இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு இதுவரை மொத்தம் ரூ. 7.5 கோடி ரொக்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

ஆர்ம்ஸ்ப்ரைம் மீடியோ என்ற நிறுவனத்தை ராஜ்குந்த்ரா உருவாக்கியதாகவும் அதன் மூலம் லண்டனில் உள்ள கென்ரின் நிறுவனத்துக்கு பணம் பரிமாற்றப்பட்டு ஹாட்ஷாட்ஸ் என்ற செயலியை ராஜ்குந்த்ரா குழு நிறுவியதாகவும், அதைக் கொண்டு ஆட்சேபகர காணொளிகள் அந்த செயலியில் பகிரப்பட்டதாகவும் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையில் தெரிய வந்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, ராஜ் குந்த்ரா தன்னை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆபாச பட விவகாரத்தில் விசாரணைக்காக நேரில் வருமாறு அழைத்து விட்டு பிறகு ராஜ் குந்த்ராவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67ஆவது பிரிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன்படி ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள், காட்சிகள் திரையிட்டிருந்தால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத வகையில் வழக்கு தொடரப்படும்.

கைது நடவடிக்கையை எதிர்க்கும் ராஜ் குந்த்ரா தரப்பு

ஆனால் ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர் அபாத் பொண்டா, இது ஆபாச படம் தொடர்புடைய விவகாரம் அல்ல என்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 292ஆம் பிரிவின்படியே இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

45 வயதாகும் ராஜ் குந்த்ரா, ஆபாச படங்கள் தயாரிப்பு விவகாரத்தில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது செல்பேசி வாட்ஸ்அப்பில் , ஆபாச படங்கள் தயாரிப்பு, முதலீடு போன்றவற்றை விவாதிக்க தனியாக ஒரு குழுவொன்றை அவர் நடத்தி வந்ததாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, அவருக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதியே அவரை கைது செய்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஆபாச பட விவகாரம் கடந்த பிப்ரவரி மாதமே சமூக ஊடகங்களில் வெளியாயின. அதைத்தொடர்ந்து அப்போதே சிலரை காவல்துரையினர் விசாரித்தனர். திரைப்படத்தில் நடிப்பதற்காக வந்த தன்னை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக ஒரு மாடல் காவல்துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்தே இந்த விவகாரம் சூடிபிடித்தது. ஆனால், இதில் ராஜ் குந்த்ரா சிக்குவார் என்று பலரும் எதிர்பார்க்காத நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், ஒரு வலைபின்னல் போல ஆபாச படங்களை எடுப்பதற்காக இயங்கி வந்த குழுவினர் யார் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் ராஜ் குந்த்ராவுக்கும் 2009ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :