You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்கவே கூடாது - ஏன் தெரியுமா?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் பாலசேகர் என்கிற 4 வயது சிறுவனுக்கு வயிற்று வலிக்கு மருந்தாக தேன் கொடுக்கப்பட்ட போது மயக்கமடைந்ததால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி டீன் சீனிவாசன் சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விளக்கினார்.
"தேனில் உருவாகும் பொட்டுலினம் என்கிற பொருள் நச்சுத்தன்மையை உருவாக்கி நேரடியாக மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். சுவாசமும் ரத்த ஓட்டமும் உடனடியாக பாதிக்கப்படும். " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சிறுவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்யூனோகுளோபின் மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது." என்றார்.
இதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா என்பது பற்றிய கேள்விகளும் எழுந்துள்ளன.
குழந்தைகள் பிறந்த உடனே தேன் கொடுப்பது அல்லது தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் கொடுப்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளதை பல்வேறு ஆய்வுகள் பதிவு செய்கின்றன. சௌதி அரேபியா போன்ற வளைகுடா நாட்டிலும் கூட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.
அதன்படி, 2022-ஆம் ஆண்டு சௌதி அரேபியாவை மையமாக வைத்து இணைய வழியாக தாய்மார்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 52% பேர் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் குடல் அசைவின்மையில் இருந்து சுவாசப் பிரச்னைகள் வரை ஏற்படலாம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
குமட்டல், வாந்தி, சாப்பிடுவதில் சிக்கல் ஆகியவை இந்த நோயின் பிரதான அறிகுறிகளாக இருந்தாலும் கூடுதல் அறிகுறிகளையும் இந்த ஆய்வு பட்டியலிடுகிறது. அவை
- முக தசை சுருக்கம்
- மலச் சிக்கல்
- முக தசை பிடிப்பு
- மூளை பாதிப்பு
- வலிப்பு
- உடல் வெப்பநிலை குறைவது
ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பொட்டுலிசம் என்கிற தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாட்டுக்கான மையம் (சிடிசி) தெரிவிக்கிறது.
தேனை நேரடியாக மட்டுமல்லாமல் உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரவ உணவு ஆகியவற்றில் சேர்த்தும் கூட வழங்கக்கூடாது என அந்த மையம் குறிப்பிடுகிறது.
"குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது. தண்ணீர் கூட கொடுக்கக்கூடாது. சிலர் உணவு கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்திலும் அல்லது தாய்ப்பால் போதவில்லையோ என்கிற கவலையிலும் பால் மற்றும் தேன் ஆகியவற்றை கொடுக்கின்றனர். இது தான் பொட்டுலிசம் பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்கிறார் குழந்தைகள் நல மருத்துவரான வித்யா.
இதற்கான காரணத்தை விளக்கிய அவர், "பச்சிளம் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்காது. அதோடு உணவுகளை செரிமானம் செய்யும் சக்தியும் குறைவாக இருக்கும். மருத்துவமனைகளில் இவை தெளிவாக எடுத்துரைக்கப்படுவதோடு குழந்தைகளின் உணவு முறையும் கண்காணிக்கப்படுகிறது." என்றும் குறிப்பிட்டார்.
தேனில் உள்ள கிளாஸ்டிரிடியம் பொட்டுலினம் ஸ்போர்கள் மூலம் உருவாகும் பாக்டீரியாக்கள் குழந்தையின் குடலில் நச்சுக்களை உற்பத்தி செய்யும் என்றும் இது மிகவும் தீவிரமான நோய் பாதிப்பான இன்ஃபேன்ட் பொட்டுலிசத்தை (ஐபி) ஏற்படுத்தும் என்றும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்.ஹச்.எஸ்) கூறுகிறது.
இன்ஃபேன்ட் பொட்டுலிசம் என்பது உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோய் என்று அமெரிக்க தேசிய மருத்துவ நூலக இணையதளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு கூறுகிறது. இது தீவிரமான நரம்பியல் பிரச்னைகளுக்கும் வித்திடலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.
இந்த பாதிப்பை உடனடியாக அடையாளம் காண்பது கடினம் எனக் கூறும் மருத்துவர் வித்யா, சில மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார், "குழந்தைகளின் குடலில் தான் தொற்று பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் சோர்வுற்று இருப்பது, தாய்ப்பால் குடிக்காமல் இருப்பது, வயிறு வீக்கமாக தெரிவது ஆகியவை இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள்," என்றார்.
குழந்தைகளின் குடல் மற்றும் செரிமான அமைப்பு முறையாக வளர 12 மாதங்கள் ஆகும். அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது என பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார்.
2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15.6% குழந்தைகள் பிறந்த உடனே தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் கொடுக்கப்படுவது பதிவாகியுள்ளது. வீட்டில் உள்ள முதியவர்கள் தான் இந்த முடிவிற்கு காரணமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்றதொரு ஆய்வில், தாய்மார்களும் வயதில் மூத்தவர்களும் குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் தாய்ப்பாலுக்கு முன்பாக தேன் போன்றவற்றை கொடுக்கலாம் என நம்புவது தெரியவந்துள்ளது.
"பொட்டுலிசம் என்கிற பாதிப்பு அனைத்து வயதினருக்கும் வரும். ஆனால் குழந்தைகளிடம் அதன் தீவிரத்தன்மை அதிகமாக இருக்கும். ஆரோக்கியமற்ற தேன் சாப்பிட்டால் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும், ஆனால் குழந்தைகள் ஆரோக்கியமான தேன் சாப்பிட்டாலும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். " என்றார் மருத்துவர் வித்யா.
"ஒரு வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தேன் ஒரு ஆரோக்கியமான சர்க்கரை. பெற்றோர்கள் தெரிவித்தால் தான் எங்களுக்கு தேன் கொடுக்கப்பட்டதே தெரியவரும் என்றாலும் இது மிகவும் அரிதாகவே நிகழும்," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு