You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்ஜ் பொன்னையா: மதவெறியோடு பேசியதாக கன்னியாகுமரி பாதிரியார் கைது
பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை மோசமாகப் பேசியதோடு, பிற மதத்தினர் குறித்து வெறுப்பை விளைவிக்கும் கருத்துக்களையும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னைய்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 18ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சிறுபான்மையினரின் உரிமை மீட்பு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ஜனநாயக கிறிஸ்தவப் பேரவையைச் சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்ற பாதிரியார், தனது பேச்சில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறித்து வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசினார்.
மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும், அது தொடர்ந்து மேலும் அதிகரிக்குமென்றும் பேசினார். அங்கிருந்த அதிகாரிகளையும் சுட்டிக்காட்டி அவதூறாகப் பேசினார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி குறித்தும் மத நோக்கில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார் அவர்.
அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வெளியானதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஜார்ஜ் பொன்னையா மீது காவல்துறையில் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் புகார் அளித்தன. இதற்குப் பிறகு அவர் மீது மதங்களிடையே பிரிவினையை உருவாக்குதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் அருமனை போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
தலைமறைவு - கைது
அவர் கைது செய்யப்பட்டலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அவர் தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவரது செல்போனை வைத்து, அவரை காவல்துறையினர் தேடினர். முடிவில் அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடியில் தங்கியருப்பது தெரியவந்தது. அங்கு அவரைக் கைது செய்த காவல்துறையினர், கள்ளிக்குடி காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விரைவில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்படவிருக்கிறார்.
பாதிரியார் கைது செய்யப்படாததை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சபை கண்டனம்
இதற்கிடையில், அருட்தந்தை ஜார்ஜ் பொன்னைய்யாவின் பேச்சுகளுக்கும் அவர் சார்ந்திருக்கும் குழித்துறை மறைமாவட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அந்த மறை மாவட்டத்தின் திருத் தூதரக நிர்வாகியும் மதுரை மாவட்டப் பேராயருமான அந்தோணி பாப்புசாமி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
"அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா அவர்களின் கருத்துகள் குழித்துறை மறை மாவட்டத்தைப் பிரதிபலிக்கும் கருத்துகள் அல்ல என்பதையும் அவர் சார்ந்திருக்கும் ஜனநாயக கிறிஸ்தவப் பேரவைக்கும் குழித்துறை மறை மாவட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தும் வேளையில், அவர் பேசியிருக்கும் பேச்சுகள் கண்டனத்திற்கு உரியது என்பதையும் பொதுமக்களுக்கு அறிவிக்கிறேன்" என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழக கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகம் உறுதுணையாக இருக்குமென்றும் அந்தோணி பாப்புசாமி தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
- பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை ஒட்டு கேட்ட RAW - என்ன நடந்தது?
- தம்பதிகள் விருப்பம் இல்லாமல் சேர்ந்து வாழ நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியுமா?
- யார் இந்த தீபிகா குமாரி? இவரது இலக்கு இந்தியாவை பதக்கப் பட்டியலில் உயர்த்துமா?
- "சூர்யா பெரிய நடிகராக வருவார் என்ற ஜோசியம் கேட்டு சிரித்தேன்" - சிவக்குமார் பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்