You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கணவன் அல்லது மனைவி விருப்பம் இல்லாவிட்டாலும் சேர்ந்து வாழுமாறு நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியுமா?
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்தியாளர்
கணவன்- மனைவிக்கு இடையே எந்தவிதமான உடல் உறவும் இல்லை அல்லது அவர்கள் ஒன்றாக வாழவில்லை என்றால், இந்த பிரச்னை அவர்களுக்குள்ளாக தீர்க்கப்பட வேண்டுமா அல்லது நீதிமன்றத்தின் மூலமாக தீர்க்கப்பட வேண்டுமா?
நீதிமன்றத்தின் தலையீடு அவர்களின் அந்தரங்கத்தை மீறுவதாக ஆகுமா? இந்த விவகாரத்தில் தற்போதுள்ள சட்ட விதிகள், பெண்களை வீட்டு வன்முறை அல்லது திருமணத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகின்றனவா?
குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் கருத்தை கேட்டுள்ளது.
'இந்து திருமணச் சட்டம் 1955' இன் ஒன்பதாவது பிரிவு மற்றும் 'சிறப்பு திருமணச் சட்டம் 1954' இன் 22 வது பிரிவின்படி, ஒரு ஆணோ பெண்ணோ தனது மனைவி அல்லது கணவர் திருமண உறவைத் தொடர கட்டாயப்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்திற்கு செல்லலாம்.
"திருமண உறவை மீட்டெடுக்கும் சட்ட விதிகள் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை, அவை அகற்றப்பட வேண்டும்" என்று இந்த மாணவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து இருந்துவரும் தனிநபர் உறவுகள் தொடர்பான இரண்டு சட்டங்கள் குறித்து 2018 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி பிரிவு 377ன் கீழ் இரண்டு வயது வந்த நபர்களுக்கு இடையே பரஸ்பர ஒப்புதலுடனான ஓரினச்சேர்க்கை குற்றம் என்றும் பிரிவு 497 இன் கீழ் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது குற்றம் என்றும் கூறும் இரண்டு சட்டங்களுமே அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
தற்போதைய சட்டம் என்ன சொல்கிறது?
'இந்து திருமணச் சட்டம் 1955' மற்றும் 'சிறப்பு திருமணச் சட்டம் 1954' ஆகியவற்றின் கீழ், கணவன் அல்லது மனைவி ஒருவர் மற்றவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் புகார் செய்து, மீண்டும் உடல் உறவு கொள்ளவும், ஒன்றாக வாழவும் உத்தரவு பெறலாம்.
திருமணத்திற்கு பிறகு, பிரிந்து வாழ்வதற்கான சரியான காரணம் இல்லை என்பதை புகார் தரும் தரப்பு நிரூபிக்க வேண்டும்.
திருமண பந்தத்தை தொடர நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு இணங்காத பட்சத்தில் தண்டனையும் வழங்கப்படக்கூடும்.
ஒரு வருடத்திற்குள் உத்தரவைப் பின்பற்றாவிட்டால், நீதிமன்றம் அந்த நபரின் சொத்தை புகார்தாரரின் பெயருக்கு மாற்றமுடியும். நீதிமன்றம் அவரை 'சிவில் சிறையில்' வைக்கலாம் அல்லது இந்த அடிப்படையில் விவாகரத்துக்கும் அனுமதி வழங்கலாம்.
இந்திய சட்டத்தில் இருக்கும் இந்த விதிகள் பிரிட்டிஷ் ஆட்சியின்போது அமல்செய்யப்பட்டவை. மனைவி, கணவரின் 'சொத்து' என்று கருதப்பட்ட காலத்தில் பிரிட்டன் இந்த சட்டங்களை இயற்றியிருந்தது.
திருமண உறவுகளை தொடர்வதற்கான இந்த ஏற்பாட்டை பிரிட்டன், 'திருமண நடைமுறைச் சட்டம் 1970' மூலம் நீக்கியது. ஆனால் இது இந்தியாவில் தற்போதும் அமலில் உள்ளது.
இந்த செயல்முறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
திருமணத்தை பாதுகாக்கும் குறிக்கோளுடனான இந்த செயல்முறையின் மிகப்பெரிய குழப்பம், அதை தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதுதான்.
திருமண உறவு மிகவும் மோசமாகிவிட்டால், கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு இடையே எந்தவிதமான உடல் உறவும் இல்லை என்றால், ஒரு நபரால் பெறப்பட்ட சட்ட உத்தரவு மற்றவரை எவ்வாறு கட்டாயப்படுத்த முடியும்.
உண்மையில் இந்தச் சட்டம், உறவை மீட்டெடுப்பதற்கு குறைவாகவும் ,பிற நோக்கங்களை அடைவதற்கு அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, மனைவி ஜீவனாம்சம் கோரினால், அதை செலுத்தும் பொறுப்பைத் தவிர்ப்பதற்காக கணவர் உறவில்லாமையை மேற்கோள் காட்டி, திருமண மறுசீரமைப்பை நாடலாம்.
கணவன், தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பராமரிப்பிற்காக மாதாந்திர ஜீவனாம்சம் செலுத்தவேண்டும் என்று இந்திய சட்டத்தின் கீழ் நீதிமன்றம் உத்தரவிடலாம்.
மனைவி நன்றாக சம்பாதித்தால், அவருக்கும் இதேபோன்ற உத்தரவை வழங்க முடியும்.
இது தவிர, விவாகரத்து பெறுவதற்கும் இந்த ஏற்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. விவாகரத்து செய்ய கணவன் அல்லது மனைவிக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றால், கணவன்-மனைவி உடல் உறவு கொண்டிருக்கவில்லை அல்லது அவர்கள் ஒன்றாக வாழவில்லை என்ற அடிப்படையில் விவாகரத்து கோரப்படுகிறது.
இந்த செயல்முறை பெண்களுக்கு உதவுகிறதா அல்லது ஆபத்தானதா?
சட்டம், கணவன் மனைவிக்கு சமமான உரிமையை அளிக்கிறது அதாவது, இருவரில் ஒருவர் திருமண உறவைப் புதுப்பிக்கக் கோரலாம்.
ஆனால் சமுதாயத்தில் திருமண முறைமையில் இப்போதும் நிலவும் ஏற்றத்தாழ்வு காரணமாக, மனைவியின் மீது உரிமை கொண்டாட அல்லது அவளது உரிமைகளை பறிக்க கணவன் தரப்பில் இந்த ஏற்பாடு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பல வழக்குகள் காட்டுகின்றன.
குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த மெளனம் மற்றும் திருமணத்தில் பாலியல் வன்கொடுமை சட்டப்பூர்வமாக குற்றம் என்று அங்கீகரிக்கப்படாததால், இத்தகைய விதிகள் பெண்களை திருமண பந்தத்தில் தொடர கட்டாயப்படுத்தக்கூடும். அங்கு அவர்கள் வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று பெண்ணிய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
2015 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 'பெண்களின் நிலை' குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கையில், இந்த செயல்முறை தவறாகப் பயன்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரு பெண் ஜீவனாம்சம் அல்லது வன்முறை பற்றி புகார் கூறும்போதெல்லாம், கணவன் சார்பாக திருமண உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இது தவிர இந்த செயல்முறை மனித உரிமைகளுக்கு எதிரானது . காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு நபரை இன்னொருவருடன் வாழ கட்டாயப்படுத்துவது தவறு," என்று இந்தக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.
அதை நீக்க கோரிக்கை விடுக்கப்படுவது ஏன்?
2018 ஆம் ஆண்டில் 'குடும்பச் சட்டத்தில் சீர்திருத்தங்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆலோசனைக் கட்டுரையில், திருமண உறவுகளை மறுசீரமைப்பதற்கான இந்த விதிகளை நீக்க சட்ட ஆணையம் பரிந்துரைத்தது.
'பெண்களின் நிலை குறித்த உயர் மட்டக் குழுவின்' அறிக்கையுடன் உடன்பட்ட ஆணையம், "சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஏற்பாடுகள் தேவையில்லை. உடல் உறவு இல்லாவிட்டால் விவாகரத்து செய்ய சட்டத்தில் ஏற்கனவே ஒரு விதி உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது நியாயமற்றது," என்று தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மாணவர்கள் இந்த இரண்டு அறிக்கைகளையும் மேற்கோள் காட்டி, அந்த விதிமுறையை நீக்குமாறு கோரியுள்ளனர்.
"இது இருபாலருக்கும் சமமான சட்டம் போல தோற்றமளிக்கிறது. ஆனால் விருப்பம் இல்லாவிட்டாலும் கூட ஒரு பெண்ணை தனது புகுந்த வீட்டில் தங்க அது நிர்பந்திக்கிறது. அவள் கணவரின் சொத்தாக பார்க்கப்படுகிறாள். கணவன் மற்றும் மனைவியின் தனியுரிமையை இது மீறுகிறது. கூடவே சொந்த நல்வாழ்வைக் காட்டிலும் திருமணத்தின் கட்டமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது," என்றும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்