கார்த்தியின் 'கைதி' படம் திருடப்பட்ட கதையா? கேரள நீதிமன்றத்தில் புதிய வழக்கு - என்ன சொல்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு?

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் கதை தன்னுடையதுதான் எனக்கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் என்பவர் தொடர்ந்த வழக்கு, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்த படம் தொடர்பான சர்ச்சை என்ன? அதற்கு தயாரிப்பாளர் தரப்பின் விளக்கம் என்ன?

'மாநகரம்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இரண்டாவது படம் 2019-ல் வெளியான 'கைதி'. கார்த்தி, நரேன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருந்தனர். அதே வருடம் வெளியான நடிகர் விஜய்யின் 'பிகில்' படத்துடன் போட்டி போட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

'கைதி' படம் முடியும் போதே அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்தது. தயாரிப்பு தரப்பிடமே இந்த படத்திற்கான மொத்த உரிமமும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிற மொழிகளில் இந்த படத்தின் ரீமேக் மற்றும் அடுத்த பாகம் விரைவில் தொடங்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

ஆனால், அது குறித்து தயாரிப்பாளர் தரப்பு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இயக்குநர் லோகேஷ் கனராஜ் நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' பட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

கதை திருட்டு சர்ச்சை

இந்த நிலையில்தான் 'கைதி' படம் கதை திருடப்பட்டதாக சர்ச்சை தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ராஜீவ் என்பவர் 'கைதி' திரைப்படத்தின் கதை தன்னுடையது எனவும், இந்த கதையை முன்பே நண்பர் ஒருவர் மூலமாக தயாரிப்பு தரப்பை சந்தித்து அதற்கான முன்பணமும் வாங்கி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அதற்கு பின்பு அவருக்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தனக்கு அழைப்பு வரமால் போன நிலையில், தன்னுடைய கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜை வைத்து தயாரிப்பு நிறுவனம் படம் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார் ராஜீவ். மேலும், கதை உரிமம் கேட்டும், அதற்கான நஷ்ட ஈடு வழங்க சொல்லியும் கேரள நீதிமன்றத்திலும் ராஜீவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

யார் இந்த ராஜீவ்?

கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் ராஜீவ். இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சென்னை புழல் சிறையில் இருந்தவர். 2007ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை ஆன பின்பு தனது நண்பர் ஒருவர் மூலமாக எஸ்.ஆர். பிரவை சந்தித்து சிறையில் இருந்த போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை கொண்டு உருவாக்கிய கதையை சொல்லியதாக கூறுகிறார்.

தனது கதையை படமாக்கலாம் என முடிவெடுத்து தனக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் முன்பணம் கொடுத்துள்ளதாகவும் அதற்கு பின்பு இந்த படத்தின் நிலை குறித்து தம்மிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ராஜீவ் தெரிவிக்கிறார்.

சமீபத்தில் தொலைக்காட்சியில் இந்த படத்தை பார்த்தபோது கதை திருடப்பட்டது தெரியவந்தது எனக் கூறி கேரள நீதிமன்றத்தில் ராஜீவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த கதைக்கான உரிமம் கேட்டதோடு மட்டுமல்லாமல், தனக்கான இழப்பீட்டு தொகையாக 4 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது நிரூபிக்கப்படாமல், எஸ். ஆர். பிரபு 'கைதி' படத்தின் அடுத்த பாகத்தை தயாரிக்கவும், வேறு மொழிகளில் தயாரிக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பு தரப்பு சொல்வது என்ன?

இதைத்தொடர்ந்து, 'கைதி' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' ஒரு அறிக்கையை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

"கதைத்திருட்டு சர்ச்சையும், அடுத்த பாகத்திற்கான தயாரிப்புக்கான தடை உள்ளிட்ட விஷயங்களை செய்தி நிறுவனங்கள் வாயிலாகவே எங்களுக்கு தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுக்கிறோம். இதை சட்டப்படி நிரூபிக்க முடியும்," என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் பெற 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான எஸ். ஆர். பிரபுவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம்.

"இந்த சர்ச்சை தொடர்பாக செய்தி வாயிலாகவே எங்களுக்குத் தெரிய வந்தது. இன்னும் நேரடியாக யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. அதனால், இந்த விஷயம் குறித்த தெளிவு இல்லாமல் இப்போதைக்கு பெரிதாக எதுவும் சொல்ல முடியாது. இந்த கதையை என்னிடம் நேரடியாக சந்தித்து கூறியதாக வழக்கு தொடுத்தவர் சொல்லியிருக்கிறார். அப்படி எதுவும் நடக்கவில்லை. 'கைதி' கதையைப் பொருத்தவரையில், நானும் லோகேஷும் ஒரு வரியை வைத்துதான் கதையாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றோம்."

"அப்படி இருக்கும் போது இந்த குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எனக்கு நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வர வேண்டும் இல்லையா? அப்படி ஏதேனும் வந்தால், அது குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் அதன் பிறகு இது குறித்து பேசுகிறேன். இந்த விஷயம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இன்னும் எதுவும் பேசவில்லை," என்று பிரபு தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :