ஏ.ஆர். ரஹ்மான், தமிழ்நாடு என பதிவிட்ட தருணம்

பட மூலாதாரம், A.R.Rahman/Instagram
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில் அவரது இருப்பிடம் "இந்தியா" என்பதை 'தமிழ்நாடு` என மாற்றப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடையே விவாதத்தை தூண்டியது.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைப்போம் என்ற சில கட்சியினர் முன்னெடுத்த விவாதத்தின் நீட்சியாக 'தமிழகமா தமிழ்நாடா?' என்ற விவாதம், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் அமீனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
அதில் 'நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். நீங்கள்?' என்றும் அவர் கேட்டிருந்தார். அப்போதுதான் அவர் தனது இருப்பிடத்தை தமிழ்நாடு என்று மாற்றியதை பலரும் கவனித்துள்ளனர்.
பல ரசிகர்கள் பலரும் 'நாங்களும் எடுத்து கொண்டோம்' என ரஹ்மானுக்கு பதிலளித்தனர்.
இதற்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்திருந்த புகைப்படங்களில் தனது இருப்பிடத்தை 'சென்னை, இந்தியா' என்றே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், 'தமிழ்நாடு' என அவர் குறிப்பிடுவது இதுவே முதல்முறை என்பதால் அவரது ரசிகர்களிடையே இது பேசுபொருளானது.
'தமிழ்நாடா தமிழகமா?' என்ற விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் 'தமிழ்நாடு' என குறிப்பிட்டு தனது நிலைப்பாட்டை சரியான நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளார் என அவரது ஒரு பிரிவு ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்துகளை பகிர்ந்தனர்.
இது குறித்து இசையமைப்பாளர் ரஹ்மான் தரப்பிடம் பிபிசி தமிழுக்காக விசாரித்த போது, "இது ஒரு விஷயமே இல்லை. பதிவு போடும் போது முன்னால் 'தமிழ்நாடு' என வந்திருக்கும். அதனால் பொதுவாக அப்படி குறிப்பிட்டு இருப்பார். மற்றபடி நீங்கள் சொல்கிற உள்நோக்கத்தோடு ரஹ்மான் அவர்கள் குறிப்பிட வாய்ப்பு குறைவுதான். இதை பெரிய விவாதமாக்க வேண்டாம்" என முடித்துக் கொண்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












