The Innocent - விமர்சனம்

பட மூலாதாரம், NETFLIX
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: மரியோ காஸா, ஆரா கரிடோ, அலெஸாண்ட்ரா ஜிமேனஸ், மிகி எஸ்பர்பே; இசை: ஃபெர்ணான்டோ வெலாகுவெஸ்; ஒளிப்பதிவு:பெர்ணாட் போஸ்ச்; கதை: ஹர்லான் கோபன்; இயக்கம்: ஒரியல் பாலோ. வெளியீடு: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருக்கக்கூடிய சிறந்த பத்து த்ரில்லர்களை பட்டியலிடச் சொன்னால், கண்டிப்பாக இடம்பெறக்கூடிய தொடராக வெளிவந்திருக்கிறது `The Innocent'. இந்தத் தொடரின் இயக்குநர் ஒரியல் பாலோ ஏற்கனவே இந்தியாவுக்கு அறிமுகமானவர்தான். 2012ல் இவர் இயக்கிய `The Invisible Guest' இந்தியில் Badla என்ற பெயரிலும் தெலுங்கில் 'எவரு' என்ற பெயரிலும் ரீ மேக் செய்யப்பட்டது.
அமெரிக்க எழுத்தாளரான ஹர்லான் கோபன் த்ரில்லர் நாவல்களுக்கு பெயர்போனவர். அவருடைய 14 நாவல்களை நெட்ஃப்ளிக்ஸ் திரையாக்கம் செய்யவிருக்கிறது. அதன் ஒரு தவணைதான் `The Innocent'. இதே பெயரில் 2005ல் வெளிவந்த நாவலின் திரை வடிவம் இது.
இந்தத் தொடரின் கதை மிகச் சிக்கலானது. சட்டம் படித்துள்ள சாதாரண, உற்சாகமான இளைஞன் மேட். ஒரு பார்ட்டியில் நடக்கும் சண்டையில் மற்றொரு இளைஞனை மேட் தள்ளிவிட, அவன் கீழே விழுந்து இறந்துவிடுகிறான். இதற்காக நான்காண்டு சிறை தண்டனையை அனுபவிக்கும் மேட், தண்டனை முடிந்த பிறகு, ஒலிவியா என்ற பெண்ணுடன் புதிய வாழ்க்கையைத் துவங்குகிறான்.
ஒரு நாள் ஒலிவியாவுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு இருவரது வாழ்க்கையையும் முழுமையாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது. மேட்டும் ஒலிவியாவும் காவல்துறை, பாலியல் தொழில் மாஃபியாக்கள் என யார் யாரோலோ துரத்தப்படுகிறார்கள். பல்வேறு விசித்திரமான சூழலை எதிர்கொள்கிறார்கள். இவையெல்லாம் மேட்டிற்கும் ஒலிவியாவிற்கும் ஏன் நடக்கிறது என்பதுதான் இந்தத் தொடரின் கதை.
சாதாரணமாக, சிறையிலிருந்து வெளிவந்து வாழ்வை மீட்டெடுக்க முயலும் ஒரு இளைஞனின் கதையாகத் துவங்கி, மகனை இழந்த தந்தையின் தீராத பழிவாங்கும் உணர்ச்சி, காவல்துறை அமைப்புக்குள் இருக்கும் அதிகாரப் போட்டி, அதிகாரம் மிக்கவர்களின் விபரீதமான பொழுதுபோக்கு, இந்த விபரீத ஆசைகளுக்குத் தூபம்போட்டு வளரும் ஐரோப்பாவின் பாலியல் மாஃபியா நெட்வொர்க், அதிலிருந்து வெளிவர முயலும் பெண்கள் என மிகப் பெரிய கேன்வாசைத் தீட்டுகிறது இந்தத் தொடர்.

பட மூலாதாரம், Netflix
மொத்தம் எட்டு எபிசோட்கள். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 50 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை. ஆனால், துவங்கியதிலிருந்து முடியும்வரை எந்த இடத்திலும் தொய்வே ஏற்படாத திரைக்கதை பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது.
சிலப்பதிகாரத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பதைப் போல, ஹர்லான் கோபனின் நாவல்களின் அடிப்படைகளில் ஒன்று, "கடந்த காலம் தொடர்ந்து துரத்தும்" என்பது. அதுதான் இந்தத் தொடரின் மையச் சரடு. இந்தத் தொடரில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் அவரவர் கடந்த காலம் துரத்துகிறது. கடந்த கால சாபங்கள் துரத்துகின்றன. ஆனால், ஒரு இரண்டாவது வாய்ப்புக் கிடைக்கும்போது சரியாக நடந்துகொண்டால் கடந்த கால சாபத்திலிருந்து விடுபடலாம் என்பதை இந்தத் தொடர் சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் தொடரில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாகப் பொருந்திவந்திருக்கக்கூடிய ஒரு அபூர்வமான தொடர் இது.
பாலோ கொய்லோவின் Eleven Minuites நாவலைப் படித்திருந்தால் இந்தத் தொடரின் சில இழைகளை நன்றாகப் புரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. விறுவிறுப்பாக ரசிக்கலாம்.
பிற செய்திகள்:
- பாலியல் தொந்தரவு வழக்கு: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நீதிமன்ற காவல்
- வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கிட் எவ்வாறு வேலை செய்யும்?
- கோவிஷீல்டு, கோவேக்சின் - பக்க விளைவுகள் என்ன? தடுப்பூசி போட்டபின் உடலில் என்னாகும்?
- கமல்ஹாசன்: "உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்"
- பாலியல் தொல்லை புகார் - சென்னை பள்ளி ஆசிரியர் இடைநீக்கம்
- நடிகை ப்ரியாமணி பேட்டி: ஃபேமிலிமேன்-2 சஸ்பென்ஸ் முதல் சமந்தாவின் வெப்சீரிஸ் பிரவேசம் வரை
- இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்துக்கு வெற்றி கோரும் இரு தரப்பு - நிரந்தரமா, தற்காலிகமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












