பாலியல் தொந்தரவு வழக்கு: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நீதிமன்ற காவல்

பட மூலாதாரம், Getty Images
சென்னை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபலனை வரும் ஜூன் 8ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே. நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கூடத்தில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலிலும் தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படும் புகார் கடிதம் திங்கட்கிழமை காலையில் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த கடிதத்தை அந்த தனியார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தரப்பு எழுதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராஜகோபாலனை அழைத்து நேற்று மாலை முதல் சுமார் ஐந்து மணி நேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர் வைத்திருந்த செல்பேசி, லேப்டாப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பிறகு அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
பாலியல் புகார் விவகாரத்தில் ராஜகோபாலன் தனது செல்பேசி மற்றும் மடிக்கணினியில் உள்ள புகைப்படங்கள், சாட்டிங் தரவுகளை அழித்து விட்டதாக காவல்துறையினர் சந்தேகிப்பதால் இந்த வழக்கில் தங்களின் விசாரணைக்கு உதவ சைபர் கிரைம் காவல்துறையின் உதவியை வழக்கு விசாரணைக்கு தலைமை ஏற்றுள்ள துணை ஆணையாளர் ஜெயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரால் யாரேனும் மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களோ அவர்களின் பெற்றோரோ தமக்கு நேரடியாக `9444772222' என்ற செல்பேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் அவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி உறுதியளித்தார்.
அதில், ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 2012ஆம் ஆண்டின் போக்சோ சட்டத்தின் பிரிவு 12, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 354 - ஏ, 509, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67, 67ஏ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள நீதிபதி முகமது ஃபாரூக்கின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் முன்பாக ராஜகோபாலன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 8ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டு சிறையில் ராஜகோபாலன் அடைக்கப்பட்டார்.
புகார் கடிதத்தில் என்ன குற்றச்சாட்டுகள்?

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, ஆசிரியர் ராஜகோபாலன் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் மாணவர்கள் இணைந்து எழுதிய புகார் கடிதம் திங்கட்கிழமையன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்தப் பள்ளியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ராஜகோபாலன் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்கவுண்டன்சி மற்றும் பிசினஸ் ஸ்டடீஸ் பாடங்களை நடத்தி வந்தார். அவர் தனது வகுப்புகளில் தொடர்ச்சியாக மாணவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது, பாலியல் அர்த்தங்களுடன் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டது.
வகுப்பறையிலேயே வைத்து மாணவிகளிடம் பாலியல் இரட்டை அர்த்தங்களுடன் கேள்விகளைக் கேட்பது, மாணவிகளின் உடல் அமைப்பு பற்றி விமர்சிப்பது, அவர்கள் அணிந்து வரும் உடையை வைத்து அவர்களது நடத்தை குறித்து விமர்சிப்பது ஆகியவற்றில் அவர் ஈடுபட்டதாகவும் புகாரில் கூறப்பட்டது.
பாலியல் நோக்கங்களுடன் மாணவிகளைத் தொடுவது போன்றவற்றிலும் ராஜகோபாலன் ஈடுபட்ட நிலையில் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்ததாகவும் ஆனால் அந்த அசிரியரைக் அழைத்து எச்சரித்ததோடு பள்ளி நிர்வாகம் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் அந்தப் புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்ட அந்த ஆசிரியர், தன்னைப் பற்றி இனிமேலும் எந்த மாணவியாவது புகார் அளித்தால், பதிலடி இருக்குமென எச்சரித்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகார் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் தலைவர்களும் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்குப் பிறகு நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை, ஆசிரியரை தனது பிடிக்குள் கொண்டு வந்து விசாரணையில் இறங்கியது.
குறிப்பு: போக்சோ சட்டத்தின் 23ஆவது பிரிவின்படி பாலியல் விவகாரங்களில் புகார் தெரிவிக்கும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வகையிலும் வெளிப்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்களை நேரடியாக இன்னும் சரிபார்க்காததால், சம்பந்தப்பட்ட பள்ளியின் பெயர் மற்றும் மாணவர்களின் விவரங்கள் இந்த செய்தியில் தவிர்க்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- கோவிஷீல்டு, கோவேக்சின் - பக்க விளைவுகள் என்ன? தடுப்பூசி போட்டபின் உடலில் என்னாகும்?
- கமல்ஹாசன்: "உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்"
- பாலியல் தொல்லை புகார் - சென்னை பள்ளி ஆசிரியர் இடைநீக்கம்
- நடிகை ப்ரியாமணி பேட்டி: ஃபேமிலிமேன்-2 சஸ்பென்ஸ் முதல் சமந்தாவின் வெப்சீரிஸ் பிரவேசம் வரை
- இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்துக்கு வெற்றி கோரும் இரு தரப்பு - நிரந்தரமா, தற்காலிகமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












