You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாடகி செளந்தர்யா அம்பலப்படுத்தும் பாலியல் சீண்டல் நபர்கள் - அதிர்ச்சி தகவல்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெண்களுக்கு எதிராக இணையத்தில் பின்தொடரும் பாலியல் தொல்லைகள் பொதுவெளியில் பெரும் விவாதங்களை கடந்த வருடங்களில் உருவாக்கி வந்தநிலையில், அத்தகைய பிரச்னையை சமீபத்தில் எதிர்கொண்டதாக பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான செளந்தர்யா சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் என்ன நடந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்.
"கல்லூரி பேராசிரியர் என்பது அதிர்ச்சியாக இருந்தது"
"பொதுவாக, நான் சமூக வலைதளங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் வரக்கூடிய குறுஞ்செய்திகளுக்கு பதில் தர மாட்டேன். சமீபத்தில்தான் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தேன் என்பதால், நிறைய பேர் உதவி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாங்க. அதுக்கு பதில் தந்துட்டு இருக்கும் போதுதான், தவறான நோக்கத்தோட ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. எடுத்ததுமே அதுல, 'என்கூட படுக்க வரியா?' என அனுப்பி தவறான புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார்கள்.
இதே மாதிரியான தவறான குறுஞ்செய்தி ஒரு ஆண்டுக்கு முன்பு வந்தது. 'உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன் கன்னத்தை கிள்ளனும்' அப்படிங்கற ரீதியில ரொம்ப தப்பான முறையில சொல்லியிருந்தாரு. நம்ம மேல பலருக்கும் அன்பு இருக்கலாம். ஆனா, அதை வெளிப்படுத்தறதுக்கு ஒரு முறை இருக்குதுல்ல. அதுவே இங்கே தப்பா இருந்தது. யார் அதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காக அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்கும் போதுதான், மதுரையில இருக்கக்கூடிய ஒரு கல்லூரி பேராசிரியர் அப்படிங்கறது எனக்கு தெரிய வந்தது. அதை பார்த்ததும் ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டேன்.
ஏன்னா, ஒரு ஆசிரியரா இருந்துட்டு அவர்கிட்ட படிக்கக்கூடிய மாணவர்களோட நிலையை நினைச்சு பார்த்து எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அதனாலதான் அந்த குறுஞ்செய்தியை என்னுடைய பக்கத்துல பகிர்ந்தேன். அதை பார்த்துட்டு எனக்கு பலரும் துணையா நின்னாங்க அதே சமயம் அதற்கும் அதிகமாவே எனக்கு மிரட்டலும் வந்தது'' என்கிறார் சௌந்தர்யா.
"பாதிக்கப்பட்டவங்க குற்றவாளி இல்லை"
"இன்னும் சிலபேர் என்கிட்ட வந்து, 'இதெல்லாம் போட்டு ஏன் உங்க நல்ல பேரை கெடுத்துக்கறீங்க?'ன்னுலாம் கேட்டாங்க. இப்படி ஒரு விஷயம் நடக்கும் போது தப்பு செஞ்ச சம்பந்தப்பட்ட ஆட்களை கண்டிக்கனுமே தவிர, பாதிக்கப்பட்டவங்க கிட்ட வந்து இந்த மாதிரி பேசறது என்ன மாதிரியான மனநிலைன்னு தெரியல. 'இதேமாதிரி நாளைக்கு உனக்கும் நடக்கலாம், அப்போ பயப்படாம பிரச்சனைய எப்படி கையாளனும்'னு உங்க வீட்டு பொண்ணுங்களுக்கும் நீங்க சொல்லித்தரலாம். அதுமட்டுமில்லாம, 'அய்யோ, இந்த மாதிரி நமக்கும் நடக்கும்'ன்னு ஆண்கள் இது போன்ற தப்பு பண்ண பயப்படலாம். இதுதான் விஷயம்.
அதை விட்டுட்டு பாதிக்கப்பட்டவங்களை வந்து மிரட்டறதும், பயமுறுத்தறும் தேவையே இல்லாதது. இதனாலதான் இன்று வரை பாதிக்கப்பட்ட பல பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை வெளியே சொல்ல தயங்கறாங்க.
இந்த மாதிரி தப்பான மெசேஜ் அனுப்பறவங்க மேல சைபர் க்ரைம்லையும் புகார் கொடுத்து இருக்கேன். இவங்களை பிடிக்க முடியாது, முகம் வெளிய தெரியாதுங்கற தைரியத்துலதான் போலியான சமூக வலைதள கணக்குல வந்து இதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு நாள் இவங்க சிக்கும்போது அவர்களின் முகத்தை வெளியே தெரியப்படுத்தனும். இவங்க வீட்டுல இருக்கற பெண்களை நினைச்சு பார்த்தாலே எனக்கு வருத்தமா இருக்கு'' என்றார் அவர்.
இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் தன்னுடைய குடும்பம் தனக்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவிக்கிறார் சௌந்தர்யா.
சட்ட ரீதியான நடவடிக்கை என்ன?
பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ள சைபர் குற்றவியல் நிபுணரும், வழக்கறிஞருமான கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
"இதுபோன்ற புகார்கள் நிறைய வருகின்றன. பொதுவாக, இந்த மாதிரியான விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலமாக செய்பவர்கள் போலியான கணக்குகளில் இருந்துதான் செய்வார்கள். இதற்கான புகார்களை கொடுக்கும் போது பலர் அந்த குறுஞ்செய்திக்கான புகைப்படத்தையும், கணக்கையும் மட்டுமே அனுப்புவார்கள்.
அப்படி இல்லாமல் அந்த போலிக்கணக்கின் URL-ஐ அனுப்ப வேண்டும். இதுவே சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சரியான வழி. உதாரணமாக, முகநூலில் கணக்கு வைத்துள்ள ஒருவர் இதுபோன்ற தவறான குறுஞ்செய்தியால் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கிறார் என்றால் நாங்கள் முகநூலுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம். அவர்களை அதை பரிசீலித்து புகாரில் இருக்கும் கணக்கின் ஐபி அட்ரஸ், தேதி, நேரம் இந்த விஷயங்களை பகிர்வார்கள். இதனை வைத்து, ஆட்கள் யார் என்பதை கண்டறிவோம். ஆனால், இதுபோன்ற விஷயங்களில் உடனே முகநூலில் இருந்து பதில் வராது. ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். சில நேரங்களில் பதில் வராமலே போகலாம்.
அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு நாட்டிற்குமான கலாச்சார வேறுபாடும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் நமக்கு தவறாக தெரியும் வார்த்தையோ, புகைப்படங்கள் போன்ற விஷயமோ முகநூலின் தலைமையகம் இருக்கும் அமெரிக்காவில் வழக்கமான ஒன்றாக இருக்கும். அப்படி இருக்கும் போது நாம் அதனை புகாராக அனுப்பும்போது அதை அங்கு ஏற்று கொள்ளாமலும் போக அதிக வாய்ப்பிருக்கிறது.
இதற்காகதான் முகநூல், வாட்ஸப் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் இந்தியாவிலும் தலைமை அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன்வைத்துள்ளோம்.
ஆனால், பெரும்பாலும் இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய வட்டாரத்தில்தான் இருப்பவர்கள்தான் இந்த செயல்களை செய்வார்கள். தீவிரமான விசாரணை மூலமாக பெரும்பாலும் வெளிக்கொண்டு வந்துவிடுவோம். அப்படி சம்பந்தப்பட்ட ஆட்களை கண்டுபிடிக்கும் போது அவர்களுக்கு சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைதண்டனை கொடுக்கப்படும்" என்கிறார்.
புகழ் வெளிச்சம்தான் காரணமா?
மற்ற பெண்களை விட, புகழ் வெளிச்சம் அதிகமுள்ள பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி.
"சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்கள் கடந்த சில வருடங்களாவே அதிகமாகிட்டுதான் வருது. இந்த குற்றத்துல ஈடுபடறவங்க யார் அப்படிங்கறதை கண்டுபிடிக்கறது கஷ்டங்கறது உண்மைதான்.
ஏன்னா, இதுல தப்பு செய்யறவங்க விட்டுட்டு போற அடையாளங்கள் எல்லாமே போலியா இருக்கு. அதுமட்டுமில்லாம, இது யாருடைய கட்டுப்பாட்டுலையும் இல்ல. ஆனா, விசாரிச்சு பார்த்தோம்ன்னா பெரும்பாலும் இந்த பிரச்சனையால பாதிக்கப்பட்ட நபருடைய நெருங்கிய வட்டாரத்துல இருந்துதான் இதை எல்லாம் செய்யறாங்க அப்படிங்கறது வருத்தமா இருக்கு.
இந்த மாதிரி தவறான குறுஞ்செய்திகளால நானுமே பலமுறை பாதிக்கப்பட்டு இருக்கேன். பரவலாக சமூகத்தில் தெரியப்படும் நபராக பெண் இருக்கும் போது போட்டியினாலோ, அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவோ இது நடக்கிறது. மிரட்டலோ தவறான குறுஞ்செய்திகளோ வந்தால், பெண்கள் முதலில் மனரீதியாக துவண்டு விடாமல் தைரியமா எதிர்கொள்ளுங்கள். சட்டரீதியாக உதவ நாங்கள் இருக்கிறோம்"என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு 'கொரோனா வார் ரூம்' - அவசர உதவி பெறுவது எப்படி? எவ்வாறு செயல்படுகிறது?
- இஸ்ரேல் - பாலத்தீன மோதலைத் தடுக்க செளதி கடைப்பிடிக்கும் உத்தி என்ன?
- தமிழக சிறைகளில் கொரோனா அதிகரிக்கிறதா? - கள நிலவரம் என்ன?
- கி.ரா என்னும் கரிசல்காட்டு நெடுங்கதை
- கொரோனா தடுப்பை விட கைதுக்கு முன்னுரிமை தந்ததா டெல்லி காவல்துறை?
- `லிவ்-இன்' ஜோடி பாதுகாப்பு கோரி வழக்கு: பஞ்சாப் உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- இஸ்ரேல்-காசா மோதல்: சண்டை நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்
- கி.ரா. மறைவு- "பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட படைப்பாளி" திரையுலக பிரபலங்கள் உருக்கம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :