ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் கங்கனாவுக்கு சிக்கல்!

கங்கனா

பட மூலாதாரம், KANGANA RANAUT

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக பாலிவுட் நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா தொடர்பான பதிவையும் இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது.

ட்விட்டரில் என்ன சர்ச்சை?

பாலிவுட் நடிகை கங்கனா, சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டார் என கடந்த வாரம் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகான வன்முறை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டார் கங்கனா.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் தொடர்பான சில வீடியோக்களை பதிவிட்டு மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றதால்தான் இந்த வன்முறை நடக்கிறது. வங்காளம் பற்றி எரிகிறது எனவும், பிரதமர் நரேந்திர மோதி, மம்தாவை அடக்க வேண்டும் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ச்சியாக கருத்துகளை பதிவிட்டார்.

twitter

பட மூலாதாரம், Twitter

இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுத்த நிலையில் ட்விட்டர் நிர்வாகம் அவரது கணக்கை முடக்கியது. இதனை அடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்தார் கங்கனா.

"கருத்துகளை தொடர்ந்து தெரிவிப்பேன்"

ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், "மக்கள் எங்கே துன்புறுத்தப்படுகிறார்களோ அங்கே எனது குரல் ஒலிக்கும். ட்விட்டரில் எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால், ட்விட்டர் நிர்வாகம் அமெரிக்கர்கள் என்பது உறுதியாகியுள்ளது. நம்முடைய செயல்களை அவர்கள் தீர்மானிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எனது கருத்துகளை நான் வேறு தளங்கள் மூலமாகவும் சினிமாவிலும் பேசுவேன்" என குறிப்பிட்டிருந்தார் கங்கனா.

instagram

பட மூலாதாரம், kangana instagram

கொரோனா தொற்று உறுதியானது

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கங்கனா.

"கடந்த சில நாட்களாகவே நான் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். என்னுடைய கண்களில் எரிச்சல் இருந்தது. ஹிமாச்சலம் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். அதற்கு முன்பு கொரோனா பரிசோதனையை செய்த போதுதான் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்தது. இதனால், என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். இத்தனை நாட்களாக, இந்த கிருமிகள் என் உடலில் கொண்டாட்டமாக இருந்து வந்திருக்கின்றன என்பது எனக்கு தெரியவில்லை. இப்போது தெரிந்து கொண்ட பின்னர், நிச்சயம் அதனை அழிப்பேன். உங்களை மீறிய சக்தியை எப்போதுமே உங்களது உடலுக்குள் அனுமதிக்காதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை மேலும் பயமுறுத்தும். இது ஒரு சிறு கிருமி மட்டுமே. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இதனை அழிப்போம். இது பெரும் ஊடக வெளிச்சத்தால் மக்களை பயமுறுத்தி வருகிறது. ஹர ஹர மஹாதேவ்" என குறிப்பிட்டிருந்தார்.

"இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிக்கல்"

தற்போது இந்த பதிவைத்தான் இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா , "கொரோனா என்பது சிறு காய்ச்சல்தான். அதனை ஒழிப்பேன் என சொல்லியிருந்த எனது பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. தீவிரவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் அனுதாபிகளை குறித்து ட்விட்டரில் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால், கோவிட் ஃபேன் க்ளப் குறித்து இங்கே தான் பார்க்கிறேன். அருமை. இரண்டு நாட்களுக்கும் மேலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது கருத்துகளை சொல்லி வருகிறேன். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் இங்கே நீடிப்பேன் என தோன்றவில்லை" என கூறியுள்ளார்.

instagram

பட மூலாதாரம், Kangana Instagram

இது மட்டுமில்லாமல், "ஒரு இளம் தலைமுறையே முதலாளித்துவத்திற்கும், நுகர்வோர் கலாச்சாரத்திற்கும் இங்கு இன்ஸ்டாகிராமில் அடிமையாகியுள்ளது. தேசத்தின் மீது அவர்களது அலட்சியமும் வெறுப்பும் கவலைக்குரியதாக உள்ளது. அவர்களை இது பயனற்றதாக மாற்றுகிறது. இந்த தளம் என்னை எப்போதும் பெரிதாக ஈர்த்ததே இல்லை. இங்கும் என்னுடைய கணக்கு தடை செய்யப்படுவதற்கு காத்திருக்கிறேன். நிச்சயமாக அது எனக்கு பெருமையான ஒன்றுதான். வாங்குவதற்கும், விற்பதற்குமாக இருக்கும் இந்த தளத்தில் நான் கேள்விகள் எழுப்பி அவர்களை நான் சங்கடப்படுத்தியிருக்கிறேன். இன்ஸ்டாவில் உங்களை நீங்கள் திரும்பி பார்க்கும் போது என்ன உணர்வீர்கள்? இந்த ஆட்டு மந்தை கூட்டத்தில் சுரண்டல் நிகழ்த்தியவராகவா அல்லது சுரண்டப்பட்டவராகவா?" என கங்கனா பதிவிட்டுள்ளது மீண்டும் சர்ச்சை வட்டாரத்தில் அவரை கொண்டு வந்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :