ட்ரிப்: சினிமா விமர்சனம்

ட்ரிப்

பட மூலாதாரம், SAI FILM STUDIOS

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: யோகி பாபு, கருணாகரன், சுனைனா, மொட்டை ராஜேந்திரன், அதுல்ய சந்திரா, வி.ஜே. சித்து, பிரவீண் குமார்; இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நகைச்சுவை பேய்ப் படங்கள் தொடர்ந்து வெளிவந்து, அவற்றில் பல வெற்றியும் பெற்றன. அந்த பாணியில் வெளியாகியிருக்கும் ஒரு நகைச்சுவை திகில் படம் இது. இம்மாதிரி படங்களில் சிக்கல் என்னவென்றால், கொஞ்சம் பிசகினாலும் காமெடியும் இருக்காது; திகிலும் இருக்காது.

கொடைக்கானல் பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதி. அங்கே ஒரு கல்லூரி மாணவர்கள் குழு ஜாலியாக இருப்பதற்காக வருகிறார்கள். அப்போது அழகன் (யோகிபாபு), அமுதன் (கருணாகரன்) என்ற இரண்டு பேரைச் சந்திக்கிறார்கள். இருவரையும் பார்த்து கொலைகாரர்கள் என்று பயப்படும் அந்த இளைஞர் குழு, அந்தக் காட்டிலிருந்து தப்ப நினைக்கிறது. ஆனால், ஒருவர் பின் ஒருவராக கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அழகனும் அமுதனும்தான் இதற்குக் காரணம் என நினைக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே யார் கொலைகாரர்கள், ஏன் கொல்கிறார்கள் என்பதுதான் கதை.

2010ல் வெளிவந்த Tucker & Dale vs Evil படத்திலிருந்து ஒரு பகுதி கதையும் பல காட்சிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. பிற்பகுதியில் வரும் காட்சிகள் 2003ல் வெளிவந்த Wrong Turn படத்தை நினைவுபடுத்துகின்றன.

யோகிபாபுவும் கருணாகரனும் இணைந்து பல படங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் சில காட்சிகளைத் தவிர, பிற இடங்களில் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை.

ட்ரிப்: சினிமா விமர்சனம்

பட மூலாதாரம், SAI FILM STUDIOS

திரைக்கதை அதைவிட மோசமாக இருக்கிறது. கதாநாயகியின் நண்பர்கள் இரண்டு பேர் அப்போதுதான் இறந்து போயிருக்கிறார்கள்; அடுத்த காட்சியில், அப்படி ஒரு சம்பவமே நடக்காததுபோல, நாயகி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

மற்றொரு காட்சியில், தங்களுடன் இருந்த இளம்பெண் கொல்லப்பட்டுக் கிடக்க, "ஓ செத்துட்டியா, அவனைக் காதலிச்சதுக்கு நீ செத்தே போகலாம்" என்று காமெடி செய்ய முயற்சிக்கிறார் யோகிபாபு. பலர் கண்ணெதிரே கோரமாக கொல்லப்பட்ட பிறகும், படத்தில் வரும் கதாபாத்திரங்கள், ஏதோ ஒளிந்து விளையாடுவதைப் போல நடந்துகொள்கிறார்கள்.

இதனால், இந்தத் திகில் படத்தில் எந்த பதைபதைப்பும் அச்சமும் ஏற்படுவதில்லை. க்ளைமேக்ஸ் வேறு வெகு நேரத்திற்கு நீண்டுகொண்டே செல்கிறது.

யோகிபாபு, கருணாகரன், சுனைனா போன்ற நடிகர்களே ஏனோதானோவென்று வந்து போகையில், படத்தில் நடித்துள்ள புதுமுகங்களின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

படத்தின் ஒரே ஆறுதல், யோகி பாபுவும் கருணாகரனும் படம் நெடுக வருவதும் அவர்களின் சிரிக்க வைக்கும் முயற்சிக்கு சில சமயங்களில் வெற்றி கிடைப்பதுதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: