கபடதாரி: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, சிபிராஜ் இணையின் படம் எப்படி? - சினிமா விமர்சனம்

கபடதாரி kabadadaari review
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கன்னடத்தில் 2019ல் வெளிவந்த 'கவலுதாரி' என்ற படத்தின் ரீ - மேக்தான் இந்த 'கபடதாரி'.

ஏற்கனவே 'சத்யா' என்ற படத்தில் இணைந்த இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி - சிபிராஜ் ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது. 'சத்யா' நன்றாக இருந்ததாலும் 'கவலுதாரி' ஏற்கனவே கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்றிருந்ததாலும் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

கன்னடத்தில் இருந்த கதையை மாற்றாமல் அப்படியே தமிழில் உருவாக்கியிருக்கிறார்கள். 1977ல் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகிறார்.

வேறு ஓர் அதிகாரி மனைவி, குழந்தையோடு காணாமல் போகிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பாலம் கட்டுவதற்காகத் தோண்டப்படும் இடத்தில் மூன்று எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன.

போக்குவரத்து காவலராக பணியாற்றும் சக்தி (சிபிராஜ்) அந்த வழக்கில் ஆர்வம் காட்டுகிறான். பத்திரிகையாளர் குமார் (ஜெயப்பிரகாஷ்)என்பவரும் அந்த வழக்கில் தீவிரம் காட்டுகிறார்.

தொல்லியல் துறை அதிகாரியைக் கொன்றது யார், மூன்று எலும்புக் கூடுகள் யாருடையவை என்பதை சக்தி துப்பறிவதுதான் மீதிக் கதை.

கன்னடத்தில் வெளிவந்த 'கவலுதாரி', ஒரு மிகச் சிறப்பான who-done-it த்ரில்லர். திரைக்கதை முன்னும் பின்னுமாக அமைந்திருந்தாலும் படம் நிறைவை எட்டும்போது, ஒரு மிகச் சிறப்பான த்ரில்லரைப் பார்த்து முடித்த உணர்வு ஏற்படும்.

கபடதாரி: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, சிபிராஜ் இணையின் படம் எப்படி? - சினிமா விமர்சனம்

'கபடதாரி'யைத் துவங்கும்போது கன்னடப் படத்தில் இருந்த காட்சிக் கோணங்கள்கூட மாறாமல், துவங்குகிறார்கள். இடைவேளைவரை சற்று விறுவிறுப்பாகவே நகர்கிறது படம். ஆனால், அதற்குப் பிறகு தொய்வடைய ஆரம்பிப்பதோடு, கதையின் மீது இருந்த ஆர்வத்தையும் இழக்கச் செய்கிறது திரைக்கதை. படம் நிறைவை எட்டும்போது, அந்தக் கொலைகளை யார் செய்திருந்தால்தான் என்ன என்ற அளவுக்கு வந்துவிடுகிறது படம்.

கன்னடப் படத்தைப் பார்க்காமல் இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு நடிகை ரம்யாவின் பாத்திரம் எதற்காக வருகிறது என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். பல இடங்களில் காட்சிகளும் வசனங்களும் மிகச் சாதாரணமாக அமைந்திருக்கின்றன.

ஹீரோவாக நடித்திருக்கும் சிபிராஜுக்கு இது இன்னுமொரு படம். கன்னடப் படத்தில் அச்யுத் குமார் நடித்திருந்த பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார். பெரிதாக ஈர்க்கவில்லை. நாசர், நந்திதா ஆகியோர் தரப்பட்ட பாத்திரங்களைச் செய்திருக்கிறார்கள்.

திரைக்கதையில் இல்லாத படபடப்பை தன் இசை மூலம் உருவாக்க முயன்றிருக்கிறார் சிமோன் டி கிங். ராசாமதியின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

படத்தில் நடித்தவர்களின் பெயர்கள் வரும்போது பின்னணியாக வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், படத்தின் துவக்கத்தை பார்க்கத் தவறவிடக்கூடாது.

'கவலுதாரி'யைப் பார்த்திருந்தால், 'கபடதாரி' ஏமாற்றமளிக்கும். ஆனால், 'கபடதாரி'யை நேரடியாகப் பார்ப்பவர்கள் ஓரளவுக்கு இந்தப் படத்தை ரசிக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: