You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் பிரைம் வீடியோ இந்து மதத்தை புண்படுத்துவதாக தாக்கும் வலதுசாரிகள்: தாண்டவ் சர்ச்சை
அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வரும் அரசியலை கதைக்களமாக கொண்ட தாண்டவ் என்ற வலைத்தொடர், இந்து மதத்தைப் புண்படுத்துவதாக வலது சாரிகள் குற்றம்சாட்டியதை அடுத்து அதன் நடிகர்கள் மற்றும் குழுவினர் மன்னிப்புக்கோரி உள்ளனர்.
முன்னதாக, இந்த வலைத்தொடர் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டுமென்று சில வலதுசாரி இந்துத்துவ அரசியல்வாதிகள் வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக போலீஸ் மூலம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வலைத்தொடரில் "வேண்டுமென்று இந்து கடவுள்கள் கேலி செய்யப்படுவதாக" மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வலைத்தொடர் சர்ச்சையை அடுத்து அமேசான் பிரைம் வீடியோ செயலியை அவரவர் மின் சாதனங்களில் இருந்து நீக்க வலியுறுத்தி #Uninstall_Amazon என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
அமேசான் பிரைம் வீடியோ தளத்திற்கென பிரத்யேகமாக வெளியாகி வரும் இந்த வலைத்தொடரில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது கிட்டத்தட்ட 'ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்' எனும் பிரபல தொடரை ஒத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த வலைத்தொடரில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள காட்சி ஒன்றில், இந்துமத கடவுளான சிவன், ஆசாதி (சுதந்திரம்) குறித்து பேசுவதாக உள்ளது. இந்த சொல்லாடல் இந்தியாவில் சர்ச்சைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.
"தாண்டவ் ஒரு புனை கதை. அதில் காட்சிப்படுத்தப்படும் செயல்கள், நபர்கள் மற்றும் நிகழ்வுகளுடனான எந்த தொடர்பும் முற்றிலும் தற்செயலானது" என்று அந்த வலைத்தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"ஒருவேளை இது தற்செயலாக யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால், தாண்டவ் வலைத்தொடரின் நடிகர்களும், குழுவினரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வலைத்தொடர் குறித்து, "ஏராளமான குறைகளையும் மனுக்களையும்... கடுமையான கவலைகள் மற்றும் அச்சங்களை" பொது மக்களிடம் இருந்து பெற்றுள்ளதாக தங்களது குழுவினரிடம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த வலைத்தொடர் வெளியான உடன் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சிக்க தொடங்கினர்.
இந்த நிலையில், தாண்டவ் வலைத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சயீப் அலிகானின் மும்பையிலுள்ள இல்லத்தின் முன்பு காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காவல்துறையில் புகார் செய்துள்ளதாக பாஜகவை சேர்ந்தவரும் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினருமான ராம் கடாம் தெரிவித்துள்ளார். எனினும், இதுதொடர்பாக காவல்துறையினர் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அமேசான் இந்தியா நிறுவனத்திடம் பிபிசி பேசியபோது, "இந்த சர்ச்சை குறித்து எதுவும் கூற முடியாது" என்று செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சி சமர் பிரதாப் சிங் (சயீப் அலி கான்) என்ற அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் பிரதமராக இருக்கும் அவரது தந்தை தேவ்கி நந்தன் (டிக்மான்ஷு துலியா) தனக்கு அவரது பதவியை வழங்குவார் என்று நம்புகிறார். ஆனால் அவரது தந்தைக்கு வேறு திட்டங்கள் இருப்பதாக தெரிகிறது.
இந்திய சந்தை அமேசானுக்கு ஏன் மிகவும் முக்கியம்?
நெட்ஃபிக்ஸ், அமேசான் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற காணொளி ஒளிபரப்பு தளங்கள் இந்தியாவில் வளர்ந்து வருகின்றன. குறிப்பாக, சர்வதேச அளவில் வெற்றி பெற்ற வலைத்தொடர்கள், திரைப்படங்களுடன் உள்ளூரிலும் இந்த நிறுவனங்கள் உள்ளடக்கங்களை தயாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான கௌரவ் காந்தி, "உலகளவில் இணைய ஒளிபரப்பு தளங்களுக்கு மிகச் சிறந்த சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது" என்று டெட்லைன் தளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
"பெருந்தொற்றால் இந்தியாவில் இணைய உள்ளடக்க நுகர்வு துரித வளர்ச்சியை கண்டது. நல்ல வேளையாக, நாங்கள் அதிக அளவிலான சொந்த வலைத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வைத்துள்ளோம். அதே நேரத்தில், நாங்கள் எங்களது முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளோம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இணையத்தில் வெளியாகும் வலைத்தொடர்கள் உள்ளிட்டவை இன்னமும் இந்தியாவில் தணிக்கைக்கு உள்ளாக்கப்படவில்லை.
ஆனால், மத்திய அரசு இணைய ஒளிபரப்பு தளங்களின் உள்ளடக்கங்களையும் தணிக்கைக்கு உட்படுத்த ஆலோசித்து வருவதாக கடந்த நவம்பர் மாதம் செய்திகள் வெளிவந்தன.
அமேசான் பிரைம் வீடியோவின் "தாண்டவ்" வலைத்தொடரின் தயாரிப்பாளர்கள் அதில் மாற்றங்களை செய்ய முடிவு செய்வது இணைய ஒளிபரப்பு தளங்களின் உள்ளடக்கங்களை தணிக்கை செய்வதை முன்னோக்கிய "ஒரு படி மட்டுமே" என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் கோடக் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: