You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முத்துலட்சுமி ரெட்டி முதல் டாக்டர் சாந்தா வரை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வரலாறு
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சையளிப்பதில் உலகின் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று.
ஒரு பெண் சீர்திருத்தவாதியின் கருத்தில் உதித்து, பலரது வாழ்வை மீட்டெடுத்த இந்த மருத்துவமனையின் வரலாறு என்ன?
தற்போது ஆண்டிற்கு சுமார் ஒரு லட்சம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வரலாறு என்பது, ஒரு விதையாக விழுந்து ஆலமரமாக விரிந்த ஒரு கதை.
1922ல் தனது சகோதரிக்கு புற்றுநோய் வந்திருப்பதை அறிந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அதிர்ந்து போனார். அந்த காலகட்டத்தில் இருந்த சிகிச்சைகளை வழங்கியும்கூட, அடுத்த ஆண்டே அவரது சகோதரி இறந்துபோனார்.
நாட்டிலேயே முதல் பெண் மருத்துவர், சட்டமன்ற உறுப்பினர் என சாதனை படைத்துக் கொண்டிருந்தாலும், இந்த சம்பவத்திற்குப் பிறகு புற்றுநோய் சிகிச்சைக்கென தனியாக ஒரு மருத்துவமனையை துவங்க வேண்டும் என்பதுதான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் ஒரே கனவாக இருந்தது.
இதன் முதற்கட்டமாக இந்தியப் பெண்கள் அமைப்பின் சார்பில் 1949ல் புற்றுநோய் நிவாரண நிதி என்ற நிதி திரட்டலைத் துவங்கினார் முத்துலட்சுமி ரெட்டி.
தொடர்ச்சியான முயற்சிகளால் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1952ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1954 ஜூன் மாதம் கூரைவேய்ந்த ஒரு கட்டடத்தில் 12 படுக்கைகளுடன் செயல்படத் துவங்கியது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை. தென்னிந்தியாவில் புற்றுநோய்க்கென தனியாக ஒரு மருத்துவமனை துவங்கப்படுவது அதுதான் முதல் முறை.
ஏழைகளுக்கான தரமான மருத்துவ சிகிச்சை என்பது கிட்டத்தட்ட ஒரு கனவாக இருந்த காலத்தில், புற்றுநோய்க்கென ஒரு சிறப்பு மருத்துவமனையை அமைப்பது என்பது அந்தக் காலகட்டத்தில் ஒரு இமாலய சாதனை.
1956லேயே டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பத்ம பூஷண் விருதைக் கொடுத்து இந்த சாதனையை கௌரவித்தது இந்திய அரசு.
முத்துலட்சுமி ரெட்டிக்குப் பிறகு அவரது மகனும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் டாக்டர் சாந்தாவும் அந்த மருத்துவமனையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
1959ல் அந்த மருத்துவமனையின் இயக்குநராகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
துவக்க காலத்தில் இவரும் டாக்டர் சாந்தாவும் மட்டுமே எந்த நேரத்தில் அழைத்தாலும் வரக்கூடிய மருத்துவர்களாக அங்கே பணிபுரிந்தனர்.
புற்றுநோயைக் குணப்படுத்த ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க வேண்டும் என்பதை சிந்தனையை தொடர்ந்து முன்னிறுத்திவந்தார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இந்த சேவைக்காக 1970ல் அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1965லிருந்து 1982வரை உலக சுகாதார அமைப்பின் ஏதாவது ஒரு குழுவில் கிருஷ்ணமூர்த்தி இடம்பெற்றுவந்தார்.
இவரது காலகட்டத்தில் பல சவால்களை இந்த புற்றுநோய் மருத்துவமனை சந்தித்திருக்கிறது. 1976ல் நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்டபோது, எந்தக் காரணமும் இன்றி தற்போதைய வளாகத்திலிருந்து மருத்துவமனை அகற்றப்பட்டது.
ஆனால், மனம் தளராமல் போராடினார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. முடிவில் 1977ஆம் ஆண்டு மே மாதத்தில் அதே வளாகத்தில் மருத்துவமனை செயல்படத் துவங்கியது.
டாக்டர் கிருஷ்ணமூர்த்தியைப் பொறுத்தவரை, ஏழை - பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோருக்கும் மருத்துவ வசதியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அதுவே அந்த மருத்துவமனையின் நோக்கமாகவும் உருவெடுத்தது.
தற்போது உலகமெங்கும் புற்றுநோய்க்கு சிகிச்சையாக பின்பற்றப்படும் பல்நோக்கு சிகிச்சை முறை என்பது 1960களிலேயே இங்கு துவங்கப்பட்டுவிட்டது. 1960களிலேயே புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான, கட்டுப்படுத்துவதற்கான பரவலான நடவடிக்கைகளை செங்கல்பட்டிலும் காஞ்சிபுரத்தில் இந்த மருத்துவமனை மேற்கொண்டது.
1954ல் எளிய முறையில் துவங்கப்பட்ட இநத்தெற்காசியாவிலேயே முதல் முறையாக 1953லேயே கோபால்ட் 60 டெலிதெரபி எந்திரம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில்தான் நிறுவப்பட்டது.
இந்தியாவிலேயே முதல் முறையாக லீனியர் ஆக்ஸலரேட்டர் எந்திரமும் இந்த மருத்துவமனையில்தான் நிறுவப்பட்டது. ரேடியோ ஆர்க் தெரபிகான எந்திரமும் இந்தியாவிலேயே முதல் முறையாக 2009ல் இங்குதான் நிறுவப்பட்டது.
1957ல் நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவத்திற்கான இயற்பியல் துறை இங்கு திறக்கப்பட்டது. 1958ல் வாயில் ஏற்படும் புற்றுநோயை பல்வேறு காரணிகளைக் கொண்டு குணப்படுத்தும் முறை இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் குணமாவோரின் விகிதம் 19 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்ந்தது. 1960ல் குழந்தைகளுக்கான புற்றுநோய்ப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
1965ல் புற்றுநோய் அறிவியலில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி செய்வதற்கான நிலையமாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் உள்ள பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டது. அதே ஆண்டில் இந்தியாவிலேயே முதல் முறையாக மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கான மாமோகிராஃபி இங்கே நிறுவப்பட்டது.
1971ல் இந்த மருத்துவமனையை Regional Centre For Cancer Research And Treatment என மத்திய சுகாதாரத் துறை அறிவித்தது. நாட்டிலேயே இப்படி அறிவிக்கப்பட்ட முதல் மருத்துவமனை இதுதான். 1978ல் மத்திய சுகாதாரத் துறையால் Centre of Excellence எனவும் அறிவிக்கப்பட்டது. 2013ல் மாநிலப் புற்றுநோய் பதிவகமும் இங்கே துவங்கப்பட்டது.
12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது 535 படுக்கைகளுடன் இயங்கிவருகிறது. இதில் 40 சதவீத படுக்கைகள், கட்டணம் செலுத்துவோருக்கும் 60 சதவீத படுக்கைகள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன.
இந்த மருத்துவமனையின் ஆய்வுப் பிரிவாக, புற்றுநோய் அறிவியல் கல்லூரி ஒன்றும் இங்கு செயல்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 15,672 புதிய நோயாளிகள் இங்கே வருகின்றன. சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட பழைய நோயாளிகளுக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: