You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 9 தகவல்கள்
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133ஆவது பிறந்த நாள் இன்று.
அவரை சிறப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது இன்றைய கூகுள் டூடுள்.
அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர்.
திருப்பங்கள் நிறைந்த அவரது வாழ்க்கையின் முக்கியமான ஒன்பது அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. பிறப்பு
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாராாயணசாமி - சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. அவர்களது பெற்றோரே கடும் சமூக எதிர்ப்புகளுக்கு இடையில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்.
2. உறவு
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் சின்ன தாத்தா (தாத்தாவின் தம்பி) முத்துலட்சுமியின் அப்பா. ஆக, ஜெமினி கணேசனுக்கு முத்துலட்சுமி அத்தை முறை. ஜெமினி கணேசன் மீது அன்பு கொண்ட முத்துலட்சுமியின் அப்பா, இறக்கும் முன்பு ஜெமினி கணேசனுக்கும் சில சொத்துகளை எழுதி வைத்து கார்டியனாக முத்துலட்சுமியை நியமித்தார் என்று ஜெமினி கணேசன் தமது சுயசரிதையில் எழுதியிருப்பார்.
3. கல்வி
பெண்கள் கல்விக்கு எதிர்ப்பு இருந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்தபடியே படித்து தனித்தேர்வராக எழுதி மெட்ரிக் தேர்வில் தேறிய முத்துலட்சுமி இன்டர்மீடியட் படிக்க புதுக்கோட்டை மகாராஜா கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமே சலசலப்பை உருவாக்கியது.
ஏனெனில் அதுவரை மகாராஜா கல்லூரியில் ஒரு பெண் படித்ததில்லை. அவர் பிற ஆண் மாணவர்களின் படிப்பு கெட காரணமாக இருப்பார் என்று கல்லூரி முதல்வர் கருதினார். ஆனால் மகாராஜா பைரவத் தொண்டைமான் தலையிட்டு அவர் படிக்க அனுமதித்ததோடு, கல்வி உதவித் தொகையும் வழங்கினார். 1912ல் அவர் மருத்துவர் ஆனார்.
4. திருமணம்
மருத்துவம் படித்த பகுத்தறிவாளரான சுந்தரரெட்டியை தனது 28-வது வயதில் சாதி மறுத்துத் திருமணம் செய்துகொண்டார் முத்துலட்சுமி. தம்மை சமமாக நடத்தவேண்டும், தனது விருப்பங்களில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் பேரிலேயே திருமணத்துக்கு அவர் ஒப்புக்கொண்டார்.
5. சட்ட மேலவை துணைத் தலைவர்
1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் இருந்தார். அப்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமசோதாவை முன்மொழிந்து, அதற்கென வாதிட்டார். இந்த மசோதாவே 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்ட உரிமை கிடைத்தது.
6. சமூகப் பணி
தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப் படிப்பதற்கு தமது வீட்டில் அவ்வை விடுதி என்ற பெயரில் 1930ல் ஒரு விடுதி தொடங்கினார் முத்துலட்சுமி. 1936ல் இந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு மாற்றப்பட்டு, பிறகு அடையாறுக்கு மாற்றப்பட்டது.
முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்ட இந்த விடுதி பிறகு அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் என்று மாற்றப்பட்டது.
7. மருத்துவப்பணி
புற்றுநோயால் இறந்த தமது சகோதரி மூலம் அந்த நோய் தரும் துன்பம், வலி, வேதனை ஆகியவற்றை நேருக்கு நேர் பார்த்திருந்த டாக்டர் முத்துலட்சுமி, புற்றுநோய்க்கு என்று ஒரு மருத்துவமனை கட்ட உறுதி எடுத்தார். நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.
8. விருது
நாட்டு மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிக்காக, 1956-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
9. இறப்பு
22, ஜூலை, 1968 அன்று முத்துலட்சுமி ரெட்டி உயிரிழந்தார். அப்போது வானொலியில் பேசிய இந்திரா காந்தி, முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி நாயுடு போன்ற பெண்கள் இல்லாமல் போயிருந்தால் நாம் இன்று உயர்ந்த இடங்களைப் பிடித்திருக்க முடியாது என்று புகழாரம் சூட்டினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :