You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் சேதுபதி: பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதற்கு வருத்தம்
தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய விவகாரம் சமூக ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளாகி இருந்தது.
இந்த நிலையில், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விஜய் சேதுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
நடிகர் விஜய் சேதுபதி தனது 43ஆவது பிறந்தநாளை இன்று (ஜனவரி 16) கொண்டாடுகிறார். இந்த நிலையில், இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜய் சேதுபதி பட்டாக் கத்தியை கொண்டு கேக் வெட்டுவதை போன்ற புகைப்படம் ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் சர்ச்சைக்கு உள்ளானது.
இதுபோன்று பிறந்தநாள் கொண்டாடிய பலர் அதுகுறித்த புகைப்படம் மற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியான பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில், விஜய் சேதுபதி இப்படி செய்திருப்பது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
விஜய் சேதுபதி விளக்கம்
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
"மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது அதில் நான் பிறந்தநாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். எனவே, அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும் போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்" என்று அவர் புகைப்படத்தின் பின்னணியை விளக்கி உள்ளார்.
"இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்" என்று அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் விஜய் சேதுபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :