You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசாக கார் பெற்ற வீரர் யார்? மாடு யாருடையது?
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 16) காலை 9 மணியளவில் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று முடிவடைந்தது. மாலை 5மணி வரை 8 சுற்றுக்களாக இந்தப் போட்டி நடந்தது. 719 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் 12 காளைகளை பிடித்த மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற மாடுபிடி வீரருக்கு முதல்வர் சார்பில் ஒரு கார் பரிசளிக்கப்பட்டது.
களத்தில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைக்கான பரிசாக குருவித்துறை எம்.கே.எம் சந்தோஷ் என்பவருக்கு துணை முதல்வர் சார்பில் ஒரு கார் வழங்கப்பட்டது.
அரசு வேலை வழங்க கோரிக்கை
பிபிசி தமிழிடம் பேசிய கண்ணன், "நான் மிகவும் எளிமையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.""பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். விவசாயம் பார்ப்பதோடு, ஓட்டுநராகவும் வேலை செய்து வருகிறேன். தினமும் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் நான், எனது மனைவி மற்றும் மகன் வாழ்ந்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றதை அங்கீகரிக்கும் வகையில் அரசு வேலை வழங்கி எங்களுக்கு உதவிட வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.சிறந்த மாட்டுக்கான முதல் பரிசு பெற்ற மாட்டின் உரிமையாளர் குருவித்துறை எம்.கே.எம்.சந்தோஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளோடு சிறப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அடுத்தடுத்த ஆண்டுகளில் காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வருவதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்திட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.2வது இடம்பிடித்த கருப்பண்ணன் என்ற மாடுபிடி வீரருக்கு இரு கன்றுகளுடன் கூடிய நாட்டு காளை மாடும், மூன்றாவது இடம் பிடித்த சக்தி என்பவருக்கு பரிசாக தங்க காசும் வழங்கப்பட்டன.
மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், காவல்துறையினர் என 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதும் இந்த ஆண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.இப்போட்டியின் போது வெற்றிபெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், உள்ளிட்ட பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன.
முதல்வர் தொடக்கி வைத்தார்
முன்னதாக, இந்த போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முதல் காளையாக அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் 655 மாடுபிடி வீரர்களும், 800 காளைகளும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து உரையாற்றிய தமிழக முதல்வர் பழனிசாமி, "உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு எனும் பாராட்டு பெற்ற மண், இந்த அலங்காநல்லூர் கிராமத்து மண். பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்டெடுத்து பாதுகாத்தது அதிமுக அரசு தான். வீரம் நிறைந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளை வளர்ப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், "உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை அதிமுக அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. காளைகளை வீரர்கள் அடக்கும் காட்சியை உலக மக்களே கண்டு ரசித்து வருகின்றனர். போட்டியை சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பரிசாக அதிகமாடுகளை பிடிக்கும் வீரருக்கு தமிழக முதல்வர் சார்பில் பரிசாக கார் ஒன்றும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் சார்பில் கார் ஒன்றும் என மொத்தம் இரண்டு கார்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், தங்ககாசு, தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ், மிக்சி, இருசக்கர வாகனம், மிதிவண்டி, கட்டில், மெத்தை, ஆடைகள் போன்ற எண்ணற்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வருகை தர உள்ளதால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்களுக்காகவும், காயங்கள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக வீரர்களை அழைத்து செல்லவும்108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, முதல் சுற்றுக்கான மாடுபிடி வீரர்கள் போட்டி துவங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பாகவே களத்திற்குள் வந்தனர். இதைத்தொடர்ந்து பூஜைக்காக கோவில் காளைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு சற்று நேரம் முன்பு, வாடிவாசலுக்கு பின்புறம் காளைகள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதியில் காளை உரிமையாளர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக அழைத்துச்சென்ற ரெட் கிராஸ் அமைப்பினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு
பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடனும் உற்சாகத்துடனும் நடந்து முடிந்தது.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் மாடுபிடி வீரர்களை களத்திலேயே காளைகள் பந்தாடிய காட்சிகள் காண்போருக்கு மெய்சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்தன. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரும் பொறியியல் கல்லூரி மாணவருமான கார்த்திக்கு கார் பரிசாகவும், சிறந்த காளைக்கு காங்கேயம் கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கிய ஜல்லிகட்டு போட்டியில் பாலமேடு கிராம கோயில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்க்கப்பட்டு பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :