You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை விஜி, தான் வளர்த்து வரும் நான்கு காளை மாடுகளோடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக இன்று (ஜனவரி 16) வந்திருக்கிறார். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த விஜி, குழந்தைகளிடம் பேசுவது போலவே தனது மாடுகளுடன் பேசிக்கொண்டு வாடிவாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்.ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகுசில பெண்கள் மாட்டின் உரிமையாளர்களாக பங்கேற்கின்றனர். ஆச்சரியமூட்டும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சில திருநங்கைகளும் பங்கேற்றனர்.காளைகளின் திமிலைத் தடவியவாறு பிபிசி தமிழிடம் பேசினார் திருநங்கை விஜி."திருநங்கையாக நான் மாறிய பின்பு பெரும் போராட்டங்களுக்கு பின்னர் என்னை குடும்பத்தில் ஏற்றுக்கொண்டனர். பல தலைமுறைகளாக நாங்கள் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக ஒரு காளை வளர்க்க ஆரம்பித்து, இப்போது ஜல்லிக்கட்டு காளைகள் உட்பட 10 மாடுகள் வளர்த்து வருகிறேன்" என்றார் விஜி.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் இவர் பங்கேற்று பாராட்டுக்களை பெற்று வருகிறார். 2019ம் ஆண்டு வீரகோவில்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் இவரது காளை சிறப்பு விருதுகளை பெற்றது."மற்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகள் இறக்கியிருந்தாலும், அலங்காநல்லூரில் காளைகள் அவிழ்ப்பது மிகவும் பெருமையாக இருக்கும். வீரத்தமிழச்சி விஜி என்கிற பெயரில் மாயி, மாயா, கருப்பன் மற்றும் பாண்டி என்ற நான்கு காளைகளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டியில் களமிறக்கியுள்ளேன். இவை தான் எனக்கு பெருமையை சேர்க்கின்றன. இவை தான் எனது அடையாளமும்." என்று கூறுகிறார் இவர்.விஜியின் குடும்பத்தினரும் அவரோடு சேர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர்.
"கொரோனா காரணமாக தீவிர பரிசோதனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. எனது கனவர், அம்மா மற்றும் தம்பிகளோடு ஜல்லிக்கட்டுக்கு வந்துள்ளோம்.
எனக்காக எனது குடும்பத்தினரும் பல மணி நேரம் காத்திருந்தனர். பல கஷ்டங்கள் இருந்தாலும் 'வீரத்தமிழச்சி விஜி'யின் காளை என அறிவிக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கும்.
படிப்பும் தொழிலும் எனக்கு இல்லையென்றாலும், ஜல்லிக்கட்டு காளைகளை எனது அடையாளமாக உருவாக்கியது எனது குடும்பத்தினர் தான்.
என்னைப் போன்ற திருநங்கைகள் ஒருசிலர், காளைகளோடு ஜல்லிக்கட்டுக்கு வந்துள்ளனர். பல தடைகளை கடந்து இங்கு வந்துள்ள அவர்கள் தங்கள் அடையாளங்களுக்காக காத்திருக்கின்றனர். எங்கள் காளைகள் எங்களுக்கும் பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என உறுதியுடன் தெரிவிக்கிறார் திருநங்கை விஜி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :