You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"Co-Win" செயலி இருந்தால்தான் கொரோனா தடுப்பூசி - எப்படி பதிவு செய்வது?
கோவிட் -19 வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசு மேற்கொள்ளும் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி 30 கோடிக்கும் அதிகமானோருக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்க மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதில் சனிக்கிழமை அறிமுகமாகும் முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி காலை 10.30 மணிக்கு தொடக்கி வைத்து உரையாற்றுகிறார். மாநிலங்களில் முதல்வர்கள் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மாநிலத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. முதல கட்டமாக ஆறு லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி அகில இந்திய அளவில் சுமார் மூன்று கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இது தவிர, தொற்று பாதிப்பு அதிகம் உள்ளவர்கள், 50 வயதுக்கும் மேற்பட்ட 27 கோடி பேருக்கு இரண்டாம் கட்ட திட்டத்தின்போது தடுப்பூசி போடப்படவுள்ளது.
முதல் நாளான சனிக்கிழமை 3,000 மையங்களில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டிருக்கிறது.
"CoWin App" என்றால் என்ன?
கோவின் செயலியின் முதன்மையான நோக்கம், கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க அரசுத்துறைகளுக்கு உதவுவதுதான். இந்த செயலி மூலமே தடுப்பூசி பெற விரும்புவோர் தங்களின் விவரத்தை பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்க முடியும்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசிய இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், "கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றவே CoWin என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்பேசி செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனர்களின் பதிவுகள் பராமரிக்கப்படும். இது தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார ஊழியர்களின் தரவுத்தளத்தையும் அரசு தயாரித்துள்ளது.
கோவின் (CoWin) செயலியை எப்படி பயன்படுத்துவது?
தற்போதைக்கு அனைத்து தரப்பினரும் கோவின் செயலியை பயன்படுத்த முடியாது. அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது, Google Play Store அல்லது Apple Store இலிருந்து கோவின் செயலியை சாதாரண மக்கள் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விவரத்தை பதிவு செய்யலாம். விரைவில் இந்தியாவில் உள்ளவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பை அரசாங்கம் பகிரவிருக்கிறது.
கோவிட் -19 தடுப்பூசி பிரசாரத்தை திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கான கிளெட் தொழில்நுட்பம் சார்ந்த தளம் கோவின்.
இதன் மூலம், தடுப்பூசி பயன்படுத்துபவர்களை நேரலையாக கண்காணிக்க முடியும். இந்த பயன்பாட்டில் பல தொகுதிகள் இருக்கும், இதன் உதவியுடன் சுகாதாரத்துறையினர் அதிக எண்ணிக்கையிலான தரவை பெற முடியும்.
தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நேரத்தை குறிக்க முடியும். பயனர் தமது விவரத்தை செயலியில் பதிவேற்றியவுடன் தடுப்பூசி பெறுவோரின் செல்பேசிக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) மூலம் தகவல் வழங்கப்படும். இது தவிர, தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து மக்களுக்கு கியூஆர் கோடு முறையில் சான்றிதழ் வழங்கப்படும்.
தடுப்பூசி பெற எப்படி பதிவு செய்வது?
தடுப்பூசி செயல்முறையை எளிதாக்குவதற்கு, அரசாங்கம் செல்பேசி பயன்பாட்டை வடிவமைத்துள்ளது, இதன் பயன்பாடு இன்னும் தயாரிப்புக்கு முந்தைய கட்டத்திலேயே உள்ளது, எனவே சாதாரண மக்கள் தற்போதைக்கு தங்களை இதில் பதிவு செய்ய முடியாது.
இந்த பயன்பாடு முழுமையாக வேலை செய்யத் தொடங்கும் போது, அதற்கு பதிவு செய்ய மூன்று விருப்பங்கள் இருக்கும் - சுய பதிவு, தனிப்பட்ட பதிவு மற்றும் தொகுப்புப் பதிவு. இருப்பினும், இந்த மூன்று பதிவுகளும் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கோவின் பயன்பாட்டுக்கு என்ன ஆவணங்கள் தேவை?
கோவின் செயலியில் பதிவு செய்ய புகைப்பட அடையாள அட்டை தேவை. சுய பதிவுக்காக பதிவு செய்வோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, நரேகா வேலை அட்டை, வங்கி பாஸ் புத்தகம் அல்லது தபால் அலுவலக பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆதாரம் கடிதங்கள் உள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றை பதிவு செய்ய பயன்படுத்தலாம். இவற்றைக் கொண்டு இ-கேஒய்சி எனப்படும் பயனரை அறிந்து கொள்ளும் படிவத்தை பயனர் நிரப்ப வேண்டும்.
பதிவுக்கு பிறகு என்ன நடக்கும்?
கோவின் செயலியில் பதிவு செய்த பிறகு, பயனரின் செல்பேசி எண்ணில் கோவிட் -19 தடுப்பூசி போடப்படும் இடம், தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்கள் வரும்.
COVIN (Co-Win) செயலியில் ஐந்து வகை பதிவுகள் உள்ளன - நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனர் தொகுதி மற்றும் அறிக்கை தொகுதி.
தடுப்பூசி அமர்வில் ஈடுபடுவோருக்கானது நிர்வாகி தொகுதி.
பதிவு தொகுதி மூலம், பதிவுசெய்த நபர்களின் தகவல்களை நிர்வாகி பெறுவார். அதன் பிறகு அவர்கள் அமர்வுகளை ஏற்பாடு செய்வார்கள், தடுப்பூசியைப் போடுவதற்கான தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகள் போன்ற தகவல்கள் பகிரப்படும்.
தடுப்பூசி தொகுதியில் கோவின் பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்து அவர்களின் தடுப்பூசி செயல்முறையை புதுப்பிக்கும் விவரம் பதிவாகும்.
பயனர் தொகுதியில் தடுப்பூசி பெறுவோரின் விவரங்கள், தடுப்பூசி விவரங்கள் பதிவேற்றப்படும். அறிக்கை தொகுதியில், எத்தனை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது போன்ற விவரம் பதிவேற்றப்பட்டு பயனருக்கு கியூஆர் ஸ்கேன் கோடு அடிப்படையிலான சான்றிதழ் வழங்கப்படும்.
கோவின் செயலியால் தனியுமைக்கு பாதிப்பு வருமா?
கோவின் செயலி இப்போதைக்கு பொது மக்களுக்கு கிடைக்காது. ஆனால் தனியுரிமை குறித்த அதன் பயன்பாடு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் பயனர்களையும் அவர்களின் தரவையும் ரகசியமாக வைத்திருப்பது மற்றும் இந்த பிரச்னையில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு ஒரு சவால் உள்ளது.
முன்பு கொரோனா பாதிப்பு தொடர்பாக மக்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள ஆரோக்கிய சேது என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போதும் நடைமுறையில் உள்ளது. அதில் தனியுரிமை தொடர்பான குளறுபடிகள் இருப்பதாக ஒரு சர்ச்சை எழுந்தபோது அதை அரசு தலையிட்டு நீக்கியதாக தெரிவித்தது.
உண்மையில், இதுபோன்ற செயலிகள் மூலம் தனி நபரின் உடல்நிலை தொடர்பான தகவல்களை சேகரித்துப் பராமரிப்பதுதான் அரசின் நோக்கம். அத்தகைய சூழ்நிலையில், தனியுரிமை பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தியாவில் தனி நபர்களின் தரவுகள் தொடர்பான ரகசியத்தை பாதுகாப்பது தொடர்பாக சட்டங்களில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. சட்டப்பாதுகாப்பு இல்லாத நிலையில், இதுபோன்ற பொதுத்தள செயலிகள் தொடர்பான கவலைகள் தொடரவே செய்யும் என்பதுதான் கள யதார்த்தம்.
பிற செய்திகள்:
- பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசு
- வட கொரியாவின் புதிய ஏவுகணை: நீர்மூழ்கி கப்பலில் இருந்து இலக்கை தாக்கும்
- திறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
- Ind Vs Aus 4வது டெஸ்ட்: களமிறங்கிய தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
- “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: