You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு போடப்படும் என்றும் அதற்கான செலவினத்தை மத்திய அரசே ஏற்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக திங்கட்கிழமை பேசிய மோதி, "உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவின் பல நகரங்களில் இதற்கான ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு வகை கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர்களிடம் விளக்கிய மோதி, நெருக்கடி காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக உழைத்தது, விரைவாக முடிவு எடுத்தது போன்றவைதான், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவாமல் தடுக்க காரணமாக அமைந்தன என்று கூறினார்.
இரவு பகலாக மக்களுக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உழைத்த முன் கள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியை எட்டும் என்றும் இவர்களுக்கு ஆகும் தடுப்பூசி செலவினத்தை மத்திய அரசே ஏற்கும். இதற்கு மாநில அரசுகள் பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தின்போது, 50 வயதுக்கு மேல் அல்லது 50 வயதுக்கு கீழிருந்து கொரோனா அல்லது வேறு ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் மோதி கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய வாய்ப்பு வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அப்போது பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் யோசனை கூறினார்.
"கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கும் நிலையில், மக்களின் மனதில் இன்னும் பல சந்தேகங்கள் உள்ளன. அதை களையும் விதமாக முதல் நபராக பிரதமர் மோதி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பிரதமர் வரலாறு படைக்க வேண்டும்," என்று மகாராஷ்டிரா அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, அதன் தடுப்பூசியின் ஒரு டோஸ் மருந்தின் விலை இருநூறு ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளது.
இந்திய அரசிடம் இருந்து மட்டும் தங்களுக்கு 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்து தயாரிக்க ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்கான கோவின் டிஜிட்டல் தளம்
கொரோனா தடுப்பூசி அமல்படுத்தப்படும் நடைமுறைக்காக கோவின் என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இது ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
அனைத்து தடுப்பூசி விநியோக நடைமுறைகளை கோவினில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர்களை கேட்டுக் கொண்ட மோதி, முதல் தடுப்பூசி போடப்பட்டதும் அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அந்த சான்றிதழ் கோவின் தளத்தில் பதிவேற்றப்படும். அதன் மூலம் யார் தடுப்பூசி போட்டார்கள் என பதிவு செய்யப்படும். தடுப்பூசியில் யாருக்காவது சிக்கல் இருந்தால், அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மோதி கூறினார்.
ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் கொரோனா தடுப்பூசி பற்றி வதந்திகள் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நரேந்திர மோதி கேட்டுக் கொண்டார்.
பிற செய்திகள்:
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது
- "அனுபவம் மிக்க கேப்டன், புதுமண தம்பதி, சமீபத்தில் தந்தையான இளைஞர்" - குமுறும் மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்
- "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு
- அட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: