நடிகர் பார்த்திபன்: அரசியலுக்கு வரும் முன்பே கட்சிக்கு பெயர் சூட்டிய சம்பவம்

எதிர்காலத்தில் நானும் அரசியலுக்கு வருவேன். எனது கட்சியின் பெயரை இப்போதே தீர்மானித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
புதுச்சேரி அரசின் சார்பாக வருடாந்திர திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுவாக இந்த விழாவில் உலக நாடுகளில் வெளியான பல்வேறு சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து திரையிட்டு அதற்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற 37ஆவது விருது வழங்கும் விழாவில், 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு அளவு 7' தேர்வு செய்யப்பட்டது .
நடிகரும் இயக்குநருமான பார்த்திபனுக்கு விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்.
இதன்பிறகு விழா அரங்கில் பேசிய பார்த்திபன், "வாழ்க்கையில் நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் ஜெயித்தேன். பல முறை எனது முயற்சிகள் தோற்றுப் போயிருக்கின்றன. விருது பெறுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய தோல்விகள் என்று கூறினார்.
"ஒத்த செருப்பு போன்ற படத்தை, அஜித் மற்றும் விஜய் படங்கள் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எடுக்கலாமா என்று எனக்குத் தோன்றியது. இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், நிறைய இளைஞர்கள் தோல்விகளால் துவண்டு போவதும், தற்கொலைக்கு முடிவெடுப்பதும், அதிலும் திரைப்பட நடிகைகள், சீரியல் நடிகைகள் அனைவரும் ஏதோ ஒரு பாதிப்பிற்கு உள்ளாகி அந்த முடிவை எடுக்கின்றனர். ஆகவே துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்" என்று பார்த்திபன் அறிவுறுத்தினார்.
"எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை வளர்த்தது எனது தந்தை. என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லாத காலகட்டங்களில், என் மேல் அவர் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். என்றாவது ஒரு நாள் சினிமாவில் ஜெயித்து விடுவேன் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது," என்றார் பார்த்திபன்.
"தாவணிக்கனவுகள் படத்தில் நான் போஸ்ட்மேனாக நடித்திருந்தேன். அதற்கு காரணம் என்னுடைய தகப்பனார் அவரது வாழ்க்கையில் ஒரு போஸ்ட்மேன் ஆக இருந்தார். அப்பாவிற்கு புற்றுநோய் வந்து மிகவும் சிரமப்பட்டார். நான் எதாவது முன்னுக்கு வருவேனா? என்று எனது தந்தைக்கு மிகப்பெரிய குழப்பமாக இருந்தது."
"அதன்பிறகு எனது தந்தை அந்த படத்தை மட்டுமே பார்த்தார். ஆனால், நான் புதிய பாதை என்ற படத்தில் நடித்தது, அடுத்து தேசியவிருது வாங்கியது எதையும் அவர் பார்க்கவில்லை. நிறைய அப்பாக்களின் கனவு, தனது குழந்தை மேடை ஏறி உயரத்தில் இருப்பதை பார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் எனது வெற்றிக்கு உரமாக இருந்த என் தந்தையின் படம்தான் என் வீட்டு பூஜை அறையில் இருக்க கூடிய ஒரே சாமி படம்" என்று பார்த்திபன் தெரிவித்தார்.

"சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோருக்கு கலையின் மேல் அதிக ஈடுபாடு இருந்தது. அவர்களுக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது மிகப்பெரிய விஷயம். அதிலிருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தவர்கள் நிறைய பேர் உண்டு. இவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து விடுவார்களோ என்று பயப்படவும் வைக்கிறார்கள். இந்த மாத இறுதியில் அதுபோன்ற பிரச்னைகள் வரலாமா என்று நம்மை பயப்படவும் வைக்கின்றனர்," என்றார் பார்த்திபன்.
"புதிய கட்சி தொடங்கலாமா என்று நானும் பலமாக யோசனை செய்து கொண்டிருக்கிறேன். இப்படி சொல்லி வைத்தால், சினிமாவில் ஒரு பரபரப்பு ஆகிக்கொண்டே இருக்கலாம். விஜய் கூட வரப்போகிறார் என்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதனால் நாமும் ஒரு கட்சி ஆரம்பிக்கலாமே என்றும் சிந்திக்கிறேன். நான் தொடங்கும் கட்சிக்கு பெயரெல்லாம் வைத்துவிட்டேன். கட்சியின் பெயர் 'புதிய பாதை'. இதுவரை எந்த மேடையிலும் இதை சொல்லவில்லை. எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்று தெரியாது. ஆனால் கட்சியின் பெயர் மட்டும் புதிய பாதை என்று வைத்துவிட்டேன்" என்று பார்த்திபன் பேசினார்.
"புதுச்சேரியில் ஷூட்டிங் கட்டணம் குறைவாக இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த ஷூட்டிங் கட்டணத்தை குறைக்க புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறேன். ஒத்த செருப்பு திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கான பரிந்துரை வரைக்கும் சென்றது. என்னுடைய அடுத்த படமான 'இரவின் நிழல்' ஒரே ஷாட்டில், ஒரு படத்தை ஒன்றரை மணி நேரத்திற்கு இயக்குகிறேன்," என்று தெரிவித்தார் பார்த்திபன்.
நிகழ்ச்சியில் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், "ஈகோவை விட்டு, விட்டு ரஜினியுடன் கூட்டணி சேர தயார் எனக் கமல் கூறியிருக்கிறாரே என கேட்டபோது, "மக்கள் ஏற்கெனவே நிறைய அளவில் குழம்பிப் போய் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதே பெரிய குழப்பமாக இருக்கிறது. யார் எப்படி கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு சுவாரசியமான புதிர் விளையாட்டு போல இருக்கிறது. இதனால் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நான் இதில் உடனடியாக எது சரி என்று என்னால் பதில் சொல்லி விட முடியாது. கமல் கூறியது அவரது கருத்து. அப்படி ரஜினியுடன் சேர்ந்தால் மகிழ்ச்சியான விஷயமாக அது இருக்கும்," என்று பதில் அளித்தார்.
"நடிகர்கள் அரசியலுக்கு வருவது இதுவரை ஆரோக்கியமாக இருக்கிறது. முன்பு நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் சிறப்பான ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தற்போது அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்களும் நல்லாட்சியைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகர்கள் என்பதற்காக இவர்களை ஒதுக்க வேண்டாம் என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்" என்றார் பார்த்திபன்.
"அரசியல் ஆர்வம் எனக்கு இருக்கிறது. என்னுடைய முதல் படத்திலிருந்து ஒத்த செருப்பு படம் வரை நிறைய அரசியல் இருக்கிறது. விளிம்பு நிலை மக்களுக்கான அரசியல் பேசி இருக்கிறேன். அரசியல் மூலமாக மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்ய முடியுமா என்பது ஒரு மனிதனுடைய சமூக அக்கறை, அதுவும் ஒரு கலைஞனுக்கு அந்த அக்கறை அதிகமாக இருக்கும்."
"எனக்கு நிறைய அக்கறைகள் இருக்கின்றன. நிச்சயமாக எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமில்லாமல், இன்றைய இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்," என்று பார்த்திபன் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- ரஜினியுடன் ஈகோவை விட்டுக்கொடுத்து சேர தயார் - மீண்டும் அறிவித்த கமல்
- ஜோ பைடன் வெற்றி தேர்தல் சபையில் உறுதி: டிரம்ப் இனி அவ்வளவு தானா?
- கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள்: அடக்கம் செய்ய வேறு நாட்டிடம் உதவி கோரும் இலங்கை
- சித்ரா மரண வழக்கு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
- விண்வெளியில் 'பாங்கு' சொல்லும் ஒலி: நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












