சித்ராவின் 'கால்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்: முதல் படமே கடைசி படமான சோகம் மற்றும் பிற சினிமா துணுக்குகள்

வெள்ளித்திரையில் தன்னைக் காண வேண்டும் என்ற நடிகை சித்ராவின் கனவு அவர் இறந்த பின் நனவாகியுள்ளது.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து சின்னத்திரையில் நாயகியாக வளர்ந்தவர் சித்ரா.

இயக்குநர் ஜெ. சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கும் தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் தொடங்கிய இந்தப் படம் தஞ்சாவூர், திருச்சி, சென்னை, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 15-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக், 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு ஜனவரி மாத கடைசியில் படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி

அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்.

தர்பார்' படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ஏற்கெனவே ஹைதராபாத்தில் ரஜினிகாந்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 'அண்ணாத்த' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான தேதி டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்று இந்த மாதம் அறிவித்த ரஜினிகாந்த், 'அண்ணாத்த' படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் கூறியிருந்தார். அதன்படி இன்று 'அண்ணாத்த' ஷூட்டிங்குக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்.

ரஜினியின் தளபதி, கமலின் சிகப்பு ரோஜாக்கள் - 'ஸ்டார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தளபதி பட ரஜினி லுக்கில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், கமலின் சிகப்பு ரோஜாக்கள் பட கமல் லுக்கில் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் இளன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தயாரித்து இசையமைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளன்று "ஸ்டார்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில், தளபதி பட ரஜினி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் தோன்றியிருந்தார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிfல் வைரலான நிலையில், கமலின் "சிகப்பு ரோஜாக்கள்" கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் தோன்றியிருக்கும் மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் எழுத்துகளால் ஏ.ஆர்.ரகுமானை வரைந்த ரசிகர்

தமிழ் எழுத்துகளால் ரசிகர் ஒருவர் வரைந்து கொடுத்த தனது புகைப்படத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான். ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று உலகப் புகழ்பெற்ற அவர், கிராமிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். அவர் இந்திய இசைத்துறைக்குச் செய்த அளப்பரிய சேவையைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ் எழுத்துகளால் வரையப்பட்ட அவருடைய ஓவியத்தை ரசிகர் ஒருவர் ஏ.ஆர்.ரகுமானுக்குப் பரிசாக அளித்துள்ளார்.

அந்த ஓவியத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்த பாடல்களின் வரிகள் எழுதப்பட்டுள்ளன. எழுத்தணிக் கலையில் (Calligraphy) வடிவமைக்கப்பட்ட அந்தப் படத்தை, ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரகுமானுக்கு இந்த அரிய படத்தை தமிழ் அச்சுக்கலை நிபுணரான தாரிக் அஜீஸ் பரிசாக அளித்துள்ளார்.

2020 ட்விட்டர் ட்ரெண்டிங்: முதலிடத்தில் மாஸ்டர்...'வலிமை'க்கு 3-ம் இடம்

2020 ஆம் ஆண்டில், இந்திய அளவில் ட்விட்டர் தளத்தில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது என்று ட்விட்டர் இந்தியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

அதிகம் ட்விட்டர் பதிவுகள் செய்யப்பட்ட நடிகர்கள் வரிசையில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், விஜய் ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார்

ட்விட்டர் இந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களில் விஜய்யின் 'மாஸ்டர்' படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அஜித்தின் 'வலிமை' மூன்றாவது இடமும், 'சூரரைப் போற்று' ஐந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: