You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூகுள், யூட்யூப் சேவைகள் 15 நிமிடங்கள் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி
உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் திடீரென்று திங்கட்கிழமை மாலையில் முடங்கின. சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன.
எனினும் கூகுள் மின்னஞ்சல் சேவை 15 நிமிடங்களுக்குப் பிறகு இயங்கத் தொடங்கின.
கூகுள் இணைய சேவை சேவை முடக்கம் தொடர்பாக கண்காணித்து வரும் டவுன் டிடெக்டர் என்ற அமைப்பு, உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இணைய சேவை முடக்கங்கள் திங்கட்கிழமை மாலையில் பதிவானதாக தெரிவித்துள்ளது.
இந்த திடீர் முடக்கம் காரணமாக, கூகுள் நிறுவனத்தின் எந்தவொரு சேவையையும் பயனர்களால் அணுக முடியாத நிலை சுமார் 15 நிமிடங்களுக்கு நீடித்தது.
இந்த நேரத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கூகுள் சேவை பயனர்கள், ஜிமெயில், கூகுள் டிரைவ், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் சேவைகள், கூகுள் மேப் உள்ளிட்டவற்றை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஆனால், பல நாடுகளில் கூகுள் தேடுபொறி சேவை இயல்புநிலையில் தொடர்ந்ததாக பயனர்கள் கூறியிருந்தனர்.
பல தனியார் அலுவலகங்கள் தங்களின் பிற பரிவர்த்தனை தொடர்புகளுக்கு கூகுள் நிறுவன மின்னஞ்சல், கூகுள் டிரைவ் போன்றவற்றை நம்பியிருக்கின்றன. தனி நபர்கள் பெரும்பாலும் கூகுள் சேவையுடன் வாழ்வில் அங்கமாகி விட்டவர்களாக உள்ளனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கூகுள் சேவை முடக்கத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது உலக அளவில் பல நாடுகளில் கொரோனா பொது முடக்கம் அல்லது கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்வதையும், வீட்டில் இருந்து பாடங்களை படிப்பதையும் அரசாங்கள் ஊக்குவித்து வருகின்றன.
பல நாடுகளில் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களின் கல்வியைத் தொடர கூகுள் நிறுவனம் வழங்கி வரும் கிளாஸ்ரூம் சேவையை நம்பியிருக்கின்றன. அதன் மூலமாகவே அன்றாட வகுப்புகள், வீட்டுப்பாட குறிப்புகள் மாணவர்களுடன் பகிரப்படுகிறது. இந்த வசதிக்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், கூகுள் சேவை முழுமையாக முடங்கியதால் மாலை வேளையில் மாணவ சமூகம் அவதிப்பட்டனர். மிகவும் அரிதாக இப்படி நடப்பதால், கூகுள் நிறுவன சேவைக்கு என்ன ஆனது என்பதை அறிய பலரும் இணைய பக்கங்களில் விவரங்களை தேடினார்கள்.
இதற்கிடையே, யூட்யூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களில் பலரும் யூட்யூப் சேவையை அணுக முடியாமல் பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களுடைய குழு அது குறித்து கவனித்து வருகிறது. விரைவில் என்ன நடந்தது என்ற தகவலை தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளது.
பிறகு சேவை இயங்கத் தொடங்கியதும், "நாங்கள் மீண்டும் வந்து விட்டோம். பழையபடி சேவையை அனுபவித்து மகிழுங்கள்" என்று யூட்யூப், கூகுள் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு கூகுள் நிறுவனத்தின் சேவைகள் ஒவ்வொன்றாக இயங்கத்தொடங்கின.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: 10 சங்கங்கள் ஆதரவு தந்துள்ளதாக கூறும் இந்திய அமைச்சர்
- சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: காரணம் என்ன?
- விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தாரா பராக் ஒபாமா? உண்மை என்ன?
- இளம் ஊடகவியலாளரை தூக்கிலிட்ட இரான்: மதகுரு மகனுக்கு மரண தண்டனை ஏன்?
- சங்ககால சோழர் நாணயத்தில் மனித உருவம்: தமிழர் வரலாறு பற்றி புதிய செய்திகள்
- இன்று சூரிய கிரகணம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்?
- விவசாயிகள் போராட்டத்தைச் சமாளிக்க பாஜக புதிய உத்தி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: