You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: காரணம் என்ன?
(பிபிசி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நாளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
சென்னை ஐஐடியில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஐஐடியின் உணவுக் கூடம் மூடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேவையில்லாமல் தங்கள் அறைகளைவிட்டு வெளியேற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் - ஐஐடி - தற்போதுவரை 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதியன்று ஐஐடியில் உள்ள உணவுக்கூடத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதிவரை 16 பேருக்கும் 11ஆம் தேதியன்று 11 பேருக்கும் 12ஆம் தேதியன்று 12 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை 33 பேருக்கும் திங்கட்கிழமை 33 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஐஐடியில் மொத்தமுள்ள 11 தங்கும் விடுதிகளில் 9 தங்கும் விடுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஒன்பது விடுதிகளும் முழுமையாக கிருமிநீக்கம் செய்யப்பட்டுள்ளன. உணவுக்கூடத்திலிருந்துதான் கொரோனா பரவியது என்பதால், தற்போது உணவுக்கூடம் மூடப்பட்டுள்ளது.
9ஆம் தேதியன்று ஐஐடி வளாகத்தில் மாணவர்கள், ஊழியர்கள் என பரவலாக 20 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 4 விடுதிப் பணியாளர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்தே உணவுக்கூடம் மூடப்பட்டது. அன்று முதல் வெளியிலிருந்தே உணவு வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விடுதிப் பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இருந்தபோதும் மாணவர்களிடம் தொற்று வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில், இன்று ஐஐடியை ஆய்வுசெய்த சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், " 444 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் 104 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 84 பேர் மாணவர்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர் கிங் இன்ஸ்ட்டிடியூட்டில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
கொரோனா மேலும் பரவாமல் தடுக்க, ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து மாணவர்களும் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேவையுள்ள மாணவர்கள் மட்டுமே ஆய்வுக்கூடங்களுக்கு வர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும் 398 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஐஐடி வளாகமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
"மாணவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்றாததே தொற்று பரவலுக்கான காரணம். தற்போது கோவிட் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என ஐஐடியின் இயக்குனர் பாஸ்கரன் ராமமூர்த்தி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் 3 குழந்தைகளுடன் பெற்றோர் தற்கொலை: ஓராண்டு நிறைவில் அதே சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(வயது 38). இவருக்கு விமலேஸ்வரி(33) என்பவருடன் திருமணமாகி, 10 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகளும், 5 வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. மரத் தச்சராக இருக்கும் மோகன், தாம் வசிக்கும் பகுதி அருகிலேயே மரப்பட்டறை ஒன்று சொந்தமாக நடத்தி வந்தார். கடன் நெருக்கடி காரணமாக மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு, பெற்றோர் இருவரும் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வளவனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த 3 குழந்தைகள் மற்றும் பெற்றோர் இருவரின் பிரேதத்தை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். தற்போது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "தனியார் சீட்டு நிதி நிறுவனத்தில் ரூபாய் 5 லட்சம் கடனுதவி பெற்றிருப்பதாக தெரிகிறது. இந்த கடன் சுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் குடும்பத்தில் இதைத் தவிர்த்து வேறு எந்த பிரச்னைகளும் பெரிய அளவில் இல்லை என்று பெண்ணின் தந்தை தெரிவிக்கிறார்.
"உயிரிழந்த மோகன் புதுப்பாளையத்தில் சொந்தமாக மரப்பட்டறை வைத்துள்ளார். மோகனின் கடையில் அவரது மாமனாரும் வேலை செய்து வருகிறார். இன்று (திங்கள் கிழமை) காலை மரப்பட்டறைக்கு வந்த மோகனின் மாமனார், கடை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்த காரணத்தால் வீட்டிற்குச் சென்றுள்ளார்."
"வீட்டிற்குச் சென்று பார்த்தபோது போது, வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தாழிட்டு இருப்பதைக் கண்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூன்று குழந்தைகளுடன் கணவன் மற்றும் மனைவி இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். மேற்கொண்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது," என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே 13ஆம் தேதி, கடன் நெருக்கடியால், நகை தொழிலாளி அவரது மூன்று பெண் குழந்தைகள், மனைவி என 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்த சரியாக ஓராண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் குடும்பத்துடன் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாவட்ட மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: