You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரிய கிரகணம் டிசம்பர் 14: எங்கு, எப்போது, எப்படி தெரியும்?
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி கதிரவ மறைப்பு (சூரிய கிரகணம்) டிசம்பர் 14ஆம் தேதி திங்களன்று நிகழவுள்ளது.
பூமி மற்றும் சூரியனுக்கு இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படும். இந்த நேரத்தில் நிலவின் நிழல் பூமியின் மேற்பரப்பின் மீது விழும்.
சூரியனின் ஒளி நிலவின் மீது விழுவதால்தான் இந்த நிழல் பூமி மீது விழுகிறது என்பதால், பகல் நேரத்தில் மட்டுமே கதிர்வ மறைப்பைக் காண முடியும்.
ஆனால், கதிர்வ மறைப்பு நிகழும்போது பூமியில் எங்கெல்லாம் பகல் நேரம் உள்ளதோ அங்கெல்லாம் காண முடியாது.
நிலவு உருவத்தில் சிறியது என்பதால், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும்போது, அதன் நிழல் பூமியில் எந்தெந்தப் பகுதிகளில் தென்படுமோ, அந்தப் பகுதிகளில் இருந்து மட்டுமே கதிரவ மறைப்பைக் காண முடியும்.
சூரிய கிரகணம் டிசம்பர் 14 - 15இல் எப்போது நிகழும்?
இந்திய நேரப்படி இந்த நிகழ்வு டிசம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 7:03 மணிக்கு தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை 12:23 மணி வரை நீடிக்கும்.
இந்த சூரிய கிரகணத்தின் உச்சம் டிசம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 9:43 மணிக்கு நிகழும்.
நவம்பர் 30-ஆம் தேதி நடந்த நிலவு மறைப்பு (சந்திர கிரகணம்) நிகழ்ந்தபோது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பகல் நேரம் என்பதால் அப்போது, இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் அதைக் காணமுடியவில்லை.
அதைப் போலவே டிசம்பர் 14ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழும்போது, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இரவு நேரம் என்பதால் அப்போதும் இந்தப் பகுதிகளில் இருந்து, சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாது.
சூரிய கிரகணத்தை எங்கிருந்து காண முடியும்?
தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு பகுதிகள், ஆஃப்பிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதிகள், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் இருந்து டிசம்பர் 14ஆம் தேதி சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
தென் அமெரிக்காவின் தெற்கு பகுதியிலுள்ள சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில், கதிரவ மறைப்பின் உச்சம் நிகழும் இரண்டு நிமிடம், பத்து நொடிகளுக்கு முழு கதிரவ மறைப்பு (Total Solar Eclipse) நிகழும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
அதாவது இந்த நேரம் பகலிலேயே இருள் போல காட்சியளிக்கும். ஏனென்றால் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே கடந்துசெல்லும் நிலவு பூமியிலிருந்து சூரியன் தெரியாதபடி முழுமையாக அதை மறைத்துக்கொள்ளும்.
வேறு சொற்களில் சொல்வதானால், சூரிய கிரகணம் உச்சத்தில் இருக்கும் அந்த நேரத்தில் சூரியன் மீது நிலவை வைத்ததைப் போன்ற தோற்றம் பூமியிலிருந்து தெரியும். அப்போது நிலவின் நிழல் பூமியின்மீது விழுந்து, சூரிய ஒளி விழாதபடி செய்யும்.
சூரியன் நிலவைவிட பன்மடங்கு பெரியது என்றாலும், சூரியன் பூமியிலிருந்து வெகுதொலைவிலும், நிலவு பூமிக்கு அருகாமையிலும் இருப்பதால் இந்தத் தோற்றம் உண்டாகும்.
வளைவு கதிரவ மறைப்பு (Annular solar eclipse) நிகழும் நேரத்தில் சூரியனுக்கு நடுவில் நிலவு கடந்து செல்லும். இந்த வகை கதிரவ மறைப்பின் உச்சத்தின்போது நிலவு சூரியனின் மையத்தை மறைக்கும். இதனால், சூரியனின் நடுப்பகுதி மறைக்கப்பட்டு, வெளி வட்டம் மட்டுமே தெரியும்.
அதை பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியன் ஒரு நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும்.
பகுதி கதிரவ மறைப்பின்போது (Partial solar eclipse) நிலவின் ஒரு பகுதி, சூரியனின் ஒரு பகுதியை மறைக்கும். இதன்போது பூமி, நிலவு, சூரியன் ஆகிய மூன்றும் சீரான நேர்கோட்டில் இருக்காது.
சூரிய கிரகணத்தை எப்படி பார்ப்பது?
நிலவின் நிழல் விழாத பூமியின் பகுதிகளில் இருப்பவர்களும், சூரிய கிரகண நேரத்தின்போது இரவாக இருக்கும் பகுதிகளில் இருப்பவர்களும் கூட சூரிய கிரகணத்தைக் காணும் வகையில் அதை இணையம் மூலம் நேரடியாக நாசா ஒளிபரப்பும். பல சமூக ஊடக பக்கங்களும், யூடியூப் சேனல்களும் இதை ஒளிபரப்பும்.
முழு கதிரவன் மறைப்பு நிகழும் பொழுது பூமியிலிருந்து சூரியன் தெரியவே தெரியாது என்பதால் அதை வேண்டுமானால் வெறும் கண்ணில் பார்க்கலாம் என்கிறது நாசா.
ஆனால் வளை மற்றும் பகுதி கதிரவ மறைப்பின்போது பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது முறையான தொழில்நுட்பம் இல்லாமல் வெறும் கண்ணால் பார்க்க கூடாது.
சூரியன் 99% மறைக்கப்பட்டு, ஒரு சதவிகிதம் மட்டுமே தென்பட்டாலும் கூட அதைப் பார்த்தால் கண் பாதிக்கப்படும் என நாசா தெரிவிக்கிறது.
14ஆம் எண்ணிட்ட வெல்டர் கண்ணாடிகள், அலுமினியம் பூசப்பட்ட 'மைலர்' அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்கிறது நாசா.
வழக்கமான சன் கிளாஸ், எக்ஸ் ரே, போட்டோ நெகட்டிவ் போன்ற ஃபில்டர்கள் பாதுகாப்பானவை அல்ல. இவற்றால் விழித்திரைக்கு உண்டாகும் பாதிப்பை முற்றிலும் தடுக்க முடியாது.
பிற செய்திகள்:
- இளையராஜா ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு
- 38 நாடுகளில் பருவநிலை அவசர நிலை அறிவிப்பு: எல்லா நாடுகளும் அறிவிக்க வேண்டும் - ஐ.நா.
- மண்ணெண்ணெய் விளக்கில் படித்து மருத்துவராகப் போகும் பழங்குடி மாணவி ரம்யா
- தமிழ்நாடு - புதுவை எல்லை சிக்கலால் ஏழை மாணவனுக்கு எட்டாக் கனியான மருத்துவப் படிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: