You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பழங்குடி மாணவி மருத்துவ படிப்புக்கு தேர்வான கதை: மண்ணெண்ணெய் விளக்கில் படித்தார், தடைகளை உடைத்தார்
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மலையடிவாரத்தில் ஏழ்மையில் வசிக்கும் பழங்குடியின மாணவி ஒருவர் தடைகளைத் தாண்டி மருத்துவப் படிப்பில் சேர்வதற்குத் தேர்வாகியுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்காடு மலைப்பகுதியின் அடிவாரத்தில் வசிக்கிறார் ரம்யா. இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், பல தடைகளைக் கடந்து மருத்துவப் படிப்புக்கான இடத்தை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு நீட் தகுதித் தேர்வில் 145 மதிப்பெண்கள் பெற்றுள்ள ரம்யாவுக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
பிரும்மாண்டமான மலைகளுக்கு அருகே மிக எளிமையான ஒரு வீட்டில் வசித்து வருகிறது ரம்யாவின் குடும்பம். கண்களில் மருத்துவக் கனவை சுமந்தவாறு, தான் எதிர்கொண்ட வலிகளை மெல்லிய புன்னகையோடு பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார் ரம்யா.
"நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு அருகே ஆணைப்பள்ளம் எனும் மலை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நாங்கள். வாழ்வாதாரத்திற்காக 25 வருடங்களுக்கு முன் எனது பாட்டி, குடும்பத்தோடு வெள்ளியங்காட்டிற்கு குடிபெயர்ந்தார். எனது தாய், தந்தை இருவரும் அருகில் உள்ள தனியார் தோட்டத்தில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். எனக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். அவர்கள், எட்டு மற்றும் 11ம் வகுப்பு படிக்கின்றனர். என் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. எங்கள் பரம்பரையிலேயே நான் தான் முதல் முறையாக மருத்துவம் படிக்க உள்ளேன்" என பூரிப்போடு தெரிவிக்கிறார் ரம்யா.
"பெரும்பாலும், எங்கள் இனத்தில் யாரும் அதிகம் படிக்க மாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே பள்ளிப் படிப்பை முடித்து, கல்லுரி படிப்பிற்கு சென்றுள்ளனர். ஆனால், எனது பெற்றோர்கள் நாங்கள் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். வறுமையான நிலையிலும் படிப்புக்காக எதை கேட்டாலும் எங்களுக்கு செய்து தருவார்கள். எனக்கும் படிப்பில் ஆர்வம் அதிகம். வெள்ளியங்காடு அரசுப் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரை படித்தேன். வீட்டிற்கும், பள்ளிக்கும் இடையில் 2 கி.மீ தூரம். காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கினால் ஒரு மணி நேரத்தில் பள்ளிக்கு சென்றுவிடுவேன். வகுப்புகள் முடிந்ததும் மாலை ஒரு பேருந்து வரும், அதில் ஏறி வீட்டின் அருகே வந்து இறங்கிவிடுவேன்"
"நாங்கள் வசிக்கும் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. அனைவரும் கூலி வேலை செய்வதோடு, ஆடு, கோழி வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறோம். மின்சார வசதியில்லாததால், இரவு நேரத்தில் எங்கள் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிவிடும். மாலை நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கில்தான் வீட்டுப் பாடங்களை செய்து வருகிறோம். மின் விளக்கு இல்லாததால் தேர்வு நாட்களில் படிப்பதே கடும் சவாலாக இருக்கும். மழைக் காலங்களில் வீட்டின் ஓட்டுக்கூரையில் துவாரங்களின் வழியாக மழைநீர் வீட்டிற்குள் ஒழுகும்" என்கிறார் ரம்யா.
இந்த சூழலிலும் இவர் பத்தாம் வகுப்பில் 500க்கு 438 மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் 600க்கு 421 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
"உயிரியல் பாடத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால், 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவு தேர்ந்தெடுத்து படித்தேன். 12ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சிபெற்றேன். ஆசிரியர்கள்தான் என்னை நீட் தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தினர். அப்போது தான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையும் எனக்கு வந்தது. ஆனால், நீட் தேர்வுக்கான பயிற்சி குறித்த பதற்றமும் எனக்கு இருந்தது."
"மின்சாரம் இல்லாததால் வீட்டில் தொலைக்காட்சி இல்லை, சிக்னல் பிரச்சனை இருப்பதால் செல்போன் பயன்படுத்த முடியாது. இந்த வசதிகள் இல்லாததால் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. தனியார் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு வசதியுமில்லை. எனது ஆசிரியர்கள் தான் என்னை வழிநடத்தினர். 11ம் வகுப்பு புத்தகத்தை நன்றாக படித்து முடித்தேன். ஆசிரியர்கள் பரிந்துரைக்கும் பாடங்களை கவனமாக படித்தேன். எனது பெற்றோர்களின் உழைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தான் என்னை நீட் தேர்வில் தேர்ச்சி அடையவைத்தது" என்கிறார் இவர்.
ரம்யாவின் பேச்சை கேட்டபடி தரையில் அமர்ந்திருந்த தந்தை சுந்தரத்திடம் பேசினோம்.
"எனக்கு பேசத் தெரியாது. புள்ள ஆசைபட்டுச்சு நான் படிக்க வச்சேன், அவ்வளோதான்" என இருளர் மொழி கலந்து பேசத் தொடங்கினார்.
"நான் தோட்டத்தில் கூலி வேலை பார்க்கிறேன். ஆடு, கோழி வளர்த்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் படிக்கவில்லை, எனது பிள்ளைகள் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ரம்யா மிகவும் நன்றாகப் படிப்பவள். மருத்துவராகி எங்களுக்கு அவள் பெருமை சேர்க்கவிருக்கிறாள்" என பெருமிதத்தோடு கூறுகிறார் ரம்யாவின் தந்தை சுந்தரம்.
நகரப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கே நீட் தேர்வு மையத்திற்கு செல்வதில் பல சிரமங்கள் உள்ளது எனும்போது, மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு மையத்தை சென்றடைவதே பெரும்போராட்டம் என்பதை ரம்யாவின் கதை உணர்த்துகிறது.
"நீட் தேர்வு எழுதுவதற்காக பொள்ளாச்சி செல்ல வேண்டும் என ரம்யா கூறினாள். எங்கள் இடத்தில் இருந்து, வெளியூர் செல்ல பேருந்துகள் மிகவும் குறைவு. காலை 10 மணிக்கே அங்கு இருக்க வேண்டும் எனவும் கூறினார். அதனால், கையில் இருந்த பணத்தோடு, ஒரு தொகையை கடன் வாங்கி நண்பர் ஒருவர் உதவியோடு வாடகைக்கு கார் எடுத்தேன். அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினோம். காலை 9 மணிக்கு நீட் தேர்வு நடக்கும் கல்லூரி வளாகத்தைச் சென்றடைந்தோம். 10 மணிக்கு மாணவர்கள் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு பின்னர் தேர்வு எழுத உள்ளே சென்றனர். மாலை வரை ஒரே இடத்தில் காத்திருந்தேன். மகளின் வருகைக்காக காத்திருந்ததில் பசி கூடத் தெரியவில்லை. தேர்வு முடிந்த பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு வர இரவு நேரமாகிவிட்டது. அது எங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது."
"தேர்வு எப்படி எழுதி இருக்கிறாய்? என கேட்டேன். நன்றாக எழுதி இருக்கிறேன் என்றாள். அத்தோடு அதை மறந்து நாங்கள் எங்களின் அன்றாட வேலையை பார்க்கத் துவங்கிவிட்டோம். ஒரு மாதத்திற்கு பிறகு காலையில் செய்தியில் எனது மகளின் பெயர் வருகிறது என்றனர். அதை பார்க்கக் கூட எங்களால் முடியவில்லை. பள்ளிக்கு சென்றதும் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவத்தனர். எங்களது மகள் மருத்துவராகப் போகிறாள் என குடும்பத்தினரும் அக்கம்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தோம். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், முடிந்தவரை பிள்ளைகளை படிக்கவைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், எனது மகள் மருத்துவர் ஆவாள் என நினைத்ததேயில்லை" என்று கூறி மகிழ்ச்சியில் கண் கலங்கினார் சுந்தரம்.
சாதிக்காததை ரம்யா செய்துவிட்டாள் என பெருமையுடன் கூறினார் ரம்யாவின் பாட்டி லட்சுமி.
பல தடைகள் வந்தபோதும் கல்வியை விடக்கூடாது என தான் உறுதியாக இருந்தததாக கூறுகிறார் ரம்யா.
"இருளர் பழங்குடி இனத்தில் பலர் கல்வி கற்பதில்லை. பல காரணங்களை கூறி வாய்ப்பிருப்பவர்களும் பள்ளிப் படிப்பை கைவிடுகின்றனர். கல்வி அனைவருக்கும் மிக முக்கியம் என நான் கருதுகிறேன்" என்றார் அவர்.
இப்பகுதியில் ரம்யாவைப் போன்ற மாணவிகள் பலர் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தான் தற்போதுவரை பாடம் படித்து வருகின்றனர். பட்டா இல்லாத நிலம் என்ற காரணத்தினால் இப்பகுதி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இருளில் மூழ்கியிருக்கும் என்பது தெரியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: