NEET: ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி தட்சிணாமூர்த்தி மற்றும் மகேஸ்வரி தம்பதியரின் மூத்த மகன் ஜீவித் குமார் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.

இவர் நீட் தேர்வில் அரசுப் பள்ளிகள் அளவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அருகில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நீட் தேர்வு எழுதி உள்ளார் ஜீவித் குமார் ஆனால் அப்போது அவரால் அதிக மதிப்பெண்களை பெறமுடியவில்லை அதன்பின் ஓராண்டு காலமாக ஆசிரியர்களின் உதவியோடு, நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பு ஒன்றில் பயின்ற ஜீவித் குமார், தற்போது நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

ஜீவித் குமார் இந்திய அளவில், தரவரிசைப் பட்டியலில் 1123 வது இடத்தையும் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து இந்திய அளவில் மதிப்பெண் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஜீவித் குமாருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீவித் குமாரின் தந்தை ஒரு ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார். தாய் மகேஸ்வரி தையல் தொழில் செய்பவர்.

வெற்றியின் ரகசியம் குறித்து என்ன சொல்கிறார் மாநில அளவில் முதல் இடம் பிடித்த ஸ்ரீஜன்?

நீட் நுழைவுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 8வது இடமும் பிடித்துள்ளார்.

நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்த இவர், இரண்டாவது முயற்சியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீஜன், "எனது ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோயில். எனது தந்தை சொந்தமாக ஸ்பின்னிங் மில் வைத்துள்ளார். எனது அம்மாவிற்கு மருத்துவராக வேண்டும் என ஆசை. ஆனால், அவரால் மருத்துவம் படிக்க முடியவில்லை. என்னை மருத்துவராக்க வேண்டும் என எனது பெற்றோர் ஆசைப்பட்டனர். எனக்கும் உயிரியல் பாடங்களில் தான் ஆர்வம் அதிகம். 2019ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் நீட் தேர்வுக்கு தயார் செய்தேன்."

"சென்ற ஆண்டு 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. மனம்தளராமல் இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என முடிவு செய்தேன். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்தேன். எனக்காக என் அம்மா சொந்த ஊரிலிருந்து நாமக்கல் வந்து என்னை பார்த்துக்கொண்டார்."

"இந்த ஆண்டு 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றிக்காக எனக்கு உறுதுணையாக இருந்து நம்பிக்கையளித்த எனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த பாடத்தையும் வெறுப்பாகவோ, சுமையாகவோ நினைத்து படிக்கக்கூடாது. ஆர்வத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான பயிற்சிக்கும், மனம்தளராத எனது முயற்சிக்கும் பலன் கிடைத்ததாக இப்போது உணர்கிறேன்" என கூறினார்.

தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற ஓபிசி பிரிவினர் பட்டியலில் இவர் முதல் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோஹனபிரபா 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தேசிய அளிவில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவிகள் பட்டியலில் இவர் 14வது இடத்தைப் பிடித்துள்ளார். தேசிய அளவிலான மொத்த பட்டியலில் 52வது இடத்தில் உள்ளார்.

நேற்று வெளியாகிய தேர்வு முடிவுகள்

நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி (நேற்று) வெளியாகின. இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த 15,97,435 பேரில் 13,66,945 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 7,71,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.55 சதவீதமாகும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ntaneet.nic.in என்ற பக்கத்தில் நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் முதல் 50 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த சோயிப் அஃப்தாப் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக டெல்லி, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

முதல் 20 இடங்கள் பிடித்த மாணவிகள் பட்டியலில், டெல்லியைச் சேர்ந்த அகாங்ஷா 720 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். இந்த வரிசையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனபிரபா ரவிச்சந்திரன் 14ஆவது இடத்தைப் பிடித்தார். அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 705. இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த ஜி. ஸ்வேதா 701 மதிப்பெண்ணுடன் 18ஆவது இடத்தைப் பிடித்தார்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்நாடு, 48.57% பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 57.44 ஆக உள்ளது. இதேபோல, புதுச்சேரி கடந்த ஆண்டு 48.70% ஆக இருந்து, இந்த ஆண்டு 52.79% தேர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மாநில ஒதுக்கீடு பெற விரும்பினால், அவர்கள் மாநில அளவில் விண்ணப்பிக்கலாம் என்றும் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களும், மாநில அரசு கவுன்சிலிங் மூலமே கல்லூரிகளில் சேர முடியும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: