You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு: கொரோனா, ஆடை கட்டுப்பாடு, தற்கொலைகள் - 10 முக்கிய தகவல்கள்
பல்வேறு எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள், எண்ணற்ற மாணவர்களின் தற்கொலைகள், வழக்குகள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நுழைவுத் தேர்வான நீட் தேர்வு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
இதுதொடர்பான 10 முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.
- தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. ஆனால், பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக தேர்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி, தேர்வர்களின் உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. மேலும், மாணவர்கள் தங்கள் கைகளை அவர்களே கொண்டுவரும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
- உடல் வெப்பநிலை பரிசோதனையின்போது இயல்பான அளவைவிட அதிக வெப்பநிலையை கொண்ட மாணவர்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேர்வு எழுத வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்பதை உறுதிசெய்து கையொப்பமிட வேண்டும்.
- ஹால்டிக்கெட்டுடன், புகைப்படத்துடன் கூடிய செல்லத்தக்க அரசு வழங்கிய அடையாள அட்டை, விண்ணப்பிக்க பயன்படுத்திய அதே புகைப்படத்தையும், சொந்தமாக கிருமிநாசினி மற்றும் தண்ணீர் பாட்டிலை கொண்டுவர வேண்டும். திறன்பேசி உள்பட எந்த ஒரு மின்னணு பொருளையும் தேர்வு மையத்துக்குள் கொண்டுவரக் கூடாது. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக்கூடாது. சாதாரண செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- கொரோனா வைரஸால் இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 2.3 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் சுமார் 1.67 லட்சம் மாணவர்களும், கர்நாடகாவில் சுமார் 1.19 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் 1.18 லட்சம் மாணவர்களும், கேரளாவில் 1.16 லட்சம் மாணவர்களும் இன்று தேர்வு எழுத உள்ளனர்.
- நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள்
- நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் தொடர்கதையாகும் தற்கொலை சம்பவங்கள்
- தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) மட்டும் தருமபுரியை சேர்ந்த 20 வயதான ஆதித்யா, மற்றும் மதுரையை சேர்ந்த ஜோதி துர்கா ஆகிய இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் மோதிலால், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், இவரது தற்கொலைக்கும் நீட் தேர்வுக்கும் தொடர்புள்ளதை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.
- நீட் தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் தொடர்ந்து வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும், அவர்கள் மருத்துவம் படிக்க மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நீட் தேர்வு தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் நேற்று மாலையில் இருந்தே #BanNEET மற்றும் #NEETisSocial_Injustice உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும், நீட்டை ரத்து செய்து தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக (banNeet_SaveTnStudents ) என்ற ஹேஷ்டேகும் டிரெண்டானது.
- நீட் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பஞ்சாப் மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் பொது முடக்கத்தில் இன்று ஒரு நாள் மட்டும் தளர்வுகளை அறிவித்துள்ளன. அதன்படி, பஞ்சாபில் நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, கொல்கத்தாவில் இன்று மெட்ரோ ரயில்கள் இயங்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் நீண்ட தூரத்திலிருந்து வந்து தேர்வு எழுதுபவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி செய்துதரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: